கிளென் பிலிப்ஸ் காட்டடி: பாகிஸ்தானை ஒருநாள் தொடரில் வென்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து சாதனை

By ஆர்.முத்துக்குமார்

கராச்சியில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. 2008-ம் ஆண்டிற்குப் பிறகு துணைக்கண்டத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது நியூஸிலாந்து.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய தொடக்க இடது கை வீரர் ஃபகர் ஜமானின் 101 ரன்கள் சதம் மூலம், ரிஸ்வானின் 77 ரன்கள் பங்களிப்பினால் 280/9 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் டெவன் கான்வே (52), கேன் வில்லியம்சன் (53) அரைசதம் அடித்து அடித்தளம் அமைக்க பின்னால் இறங்கிய கிளென் பிலிப்ஸ் 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசியதில் 281/8 என்று அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 87 பந்துகளில் 100 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளென் பிலிப்ஸ் இறங்கினார், மிட்செல் சாண்ட்னருடன் (15) சேர்ந்து 7வது விக்கெட்டுக்காக 64 ரன்களைச் சேர்த்தார். இந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றியது. கேப்டன் கேன் வில்லியம்சன் 68 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களை எடுக்க, டெவன் கான்வே 65 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்களை எடுத்து இருவரும் சேர்ந்து 65 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். முதலில் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் 25 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து பதிலி வீரர் தயூப் தாஹிரின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் (31) இணைந்து 52 ரன்களைச் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி 45 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆஃப் ஸ்பின்னர் ஆகா சல்மான் (2/42) டெவன் கான்வே மற்றும் மிட்செலை வீழ்த்தினார். டெவன் கான்வே தூக்கி அடித்த ஷாட் சரியாக சிக்காமல் ஆட்டமிழக்க டேரில் மிட்செல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் சிக்கினார். வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.

கிளென் பிலிப்ஸ் எடுக்கும் முதல் ஒருநாள் அரைசதமாகும் இது, இதனை 28 பந்துகளில் எடுத்து முடித்தார். ஆனால் அரைசதம் அடித்து முடித்தவுடனேயே ஆஃப் ஸ்பின்னர் உசாமா மிர் பந்தில் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ரிஸ்வான் நழுவ விட்டார். ஆனால் அதன் பிறகு பின்னி எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றதோடு அரிய தொடர் வெற்றியையும் துணைக்கண்டத்தில் சாதித்தார். நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் கடைசி 6 தொடர்களில் முதல் முறையாக தொடரை வெல்கின்றனர்.

முன்னதாக அணிக்கு மீண்டும் திரும்பிய பகர் ஜமான் 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 122 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். ஃபகர் ஜமான் பாகிஸ்தான் 21/2 என்று இருந்த போது ரிஸ்வானுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 154 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தானின் ஷான் மசூத் டக் அவுட் ஆக கேப்டன் பாபர் அசாம் பிரேஸ்வெல் பந்துக்கு காலை நீட்டி தடுத்தாட முயலும் போது மட்டை கால்காப்பில் சிக்கியது, இதனால் கிரீசுக்கு வெளியே இருந்த பின் காலை கிரீசுக்குள் நேரத்துக்குக் கொண்டு வர முடியாமல் ஸ்டம்ப்டு ஆனார். முதல் 2 போட்டிகளில் 2 அரைசதங்கள் எடுத்த உலகின் நம்பர் 1 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் இந்த முறை சோடை போனார். இத்தனைக்கும் அது நேர் பந்து ஸ்பின்னும் இல்லை திரும்பவும் இல்லை. சல்மான் பின்னால் இறங்கி 45 ரன்களை விரைவில் எடுக்க பாகிஸ்தான் 280 ரன்களை மட்டுமே எடுத்தது.

300 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டிய பிட்சில் சதம் அடிப்பதற்காக பகர் ஜமான் சுயநலமாக ஆடியதால் ஸ்கோர் குறைந்தது. ஆட்ட நாயகன் கிளென் பிலிப்ஸ், தொடர் நாயகன் டெவன் கான்வே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்