கராச்சி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது பாஜக செல்வாக்கு செலுத்துவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பிசிசிஐ முட்டுக்கட்டை போடுகிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், வீரருமான ரமிஸ் ராசா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
லாகூரில் அரசுக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரமிஸ் ராசா இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினார். “இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக என்ன நடக்கின்றது என்றால் அங்கு பாஜக மனநிலை நிலவி வருகிறது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. இதற்காகத்தான் நான் பிஜேஎல் அல்லது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் லீக் போன்றவை தேவை என்கிறேன். இதன் மூலம்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் கிடைக்கும். நமக்குத் தேவையான நிதியை நாமே திரட்டிக் கொள்ள முடியும். இதனால் பிசிசிஐ நிதி ஆதிக்கம் செலுத்தும் ஐசிசி-யின் மீதான ஒரு சார்பில் இருந்து நாம் விடுபட முடியும். இப்போதைய அவசியத் தேவை இதுதான்.
ஐசிசி-யின் பெரும்பங்கு வருவாய் இந்தியாவிலிருந்து வருவதால் நாம் சுதந்திரத்தை சமரசம் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டை விளிம்பு நிலைக்குத் தள்ளுவது இந்திய மனநிலையாக இருக்கும் போது நாம் கடைசியில் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக முடிந்து விடுவோம்.
இந்த விஷயத்தில் நான் என் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துள்ளேன். ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் நடத்த நமக்கு அனுமதி அளிப்பதாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணி இங்கு வந்து ஆட மறுப்பு தெரிவித்து விட்டால், நம்மிடமிருந்து ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையும் பறிக்கப்படும். இந்த நிலையிலும் நமக்குத் தெரிவுகள் உள்ளன என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன்” என்றார் ரமிஸ் ராசா.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பாபர் அசாமுடன் தான் மேற்கொண்ட உரையாடலையும் ரமிஸ் ராசா தெரிவித்தார். அதாவது, “நாம் இந்தியாவுடன் தோற்பதென்றே பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டை அதனளவில் வலுப்படுத்த இந்தியாவை வெற்றி பெற்றாக வேண்டும். நாம் இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டும். அதன் மூலம்தான் நாம் வலுவான நிலையில் நமக்கான விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்ள முடியும். அப்போதுதான் அவர்களது கதையாடலையும் நாம் காலி செய்ய முடியும்” என்று பாபர் அசாமிடம் தான் கூறியதாகத் தெரிவித்தார்.
இவர் பதவியேற்ற போதே பாகிஸ்தான் கிரிக்கெட் தனக்கான நிதியாதாரங்களை உள்ளிருந்தே திரட்டி ஒரு வலுவான நிலையை எட்டி கிரிக்கெட்டை போட்டி ரீதியாக ஆடி உயர்ந்த இடத்தைப் பிடிப்பதன் மூலமே நம் நிதியாதாரங்களைத் திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறியிருந்தார். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களிடமும் பேசி பணபலத்திற்கும் அதன் நெருக்கடிகளுக்கும் ஐசிசி செவி சாய்க்கக் கூடாது என்று வலியுறுத்தியதாகவும் ரமிஸ் ராசா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago