ஜடேஜாவுக்கு அபராதம் விதித்தது என்னைக் காயப்படுத்தி விட்டது: தோனி கடும் காட்டம்

By செய்திப்பிரிவு

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரத்தில் ஜடேஜாவுக்கு அபராதம் விதித்திருப்பது என்னை வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது என்று தோனி வெகுண்டெழுந்துள்ளார்.

"என்னைப் பொறுத்தவரை இது புண்படுத்தும் ஒரு தீர்ப்பாகும். இந்த விசாரணையில் நிறைய விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டன. உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம், நடுவர் உணவு இடைவேளை என்கிறார். நாங்கள் பெவிலியன் நோக்கி நடந்தோம், அந்த இன்னொரு தனிநபரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

நாங்கள் நடந்துகொண்டிருந்தோம் அந்த நபர் ஜடேஜாவை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தபடியே வந்தார். இடையில் நான் குறுக்கிட வேண்டியிருந்தது. நாங்கள் எல்லைக்கோடு கயிற்றருகே சென்றபோது எல்லாம் முடிந்து விட்டது என்றே நினைத்தேன்.

பிறகு உறுப்பினர்கள் அறையருகே சென்றபோது நான் ஜடேஜாவுக்கு முன்னால் சென்றேன், மீண்டுன் ஜடேஜா நோக்கி ஏதோ வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டது. அப்போது ஜடேஜா அவர் பக்கம் திரும்பினார், அப்போது ஜடேஜா தள்ளிவிடப்படுகிறார். அதாவது ஜடேஜா பேலன்ஸ் இழக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார். ஜடேஜா திரும்பிப் பார்க்கிறார் அவ்வளவுதான் அதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா ஆட்ட உணர்வுக்கு எதிராக செயல்பட்டார் அது இதுவென்று கூறப்பட்டது. ஆனால் என்ன உண்மையில் நடந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா? ஒருவர் உங்களை நோக்கி ஏதோவொன்று கூறுகிறார் நீங்கள் என்னவென்று திரும்பிப் பார்க்கிறீர்கள், இது எப்படி ஆக்ரோஷமான நடத்தையாகும். மேலும் ஜடேஜா பேட்டை கைகளில் இடுக்கியிருந்தார். ஜடேஜா ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

ஆகவே இதையெல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும், நான் பொய் கூறவில்லை. நடந்ததன்படிப் பார்த்தால் ஜடேஜாவின் நடத்தையில் தவறேயில்லை. ஒரு சிறிதளவு ஆக்ரோஷம் கூட ஜடேஜா காட்டவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

அதானல்தான் அவருக்கு அபராதம் விதித்தது என்னை பெரிதும் காயப்படுத்திவிட்டது.

ஜடேஜா மீது கொடுக்கப்பட்ட புகார் லெவல் 2 விதிமீறல் ஆனால் லெவல் 1 விதிமீறலுக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். லெவல் 1 விதிமீறல் மீதான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யமுடியாது என்பதே இதில் முக்கியமான விஷயம்.

இவ்வாறு கூறினார் தோனி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE