“இன்னும் முடிவு செய்யவில்லை” - தனது டி20 எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா ஓபன் டாக்

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: கடந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் டி20 கிரிக்கெட் பயணம் நிறைவு பெற்றுவிட்டதாக பல்வேறு கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தனது சர்வதேச டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

ரோகித், கோலி, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இல்லாத இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதிலும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியை 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருந்தது.

இந்தச் சூழலில் இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் கேப்டன் ரோகித், கோலி மற்றும் ராகுல் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் தொடரின் முதல் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் பங்கேற்றார். அப்போது அவரது டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

“அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது என்பது சாத்தியமில்லை. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டிலும் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம். அதில் நானும் அடங்குவேன். நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. ஐபிஎல் சீசன் முடிந்ததும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். நான் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டை கைவிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என ரோகித் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE