வெற்றிக்கு கடின உழைப்பே காரணம்: சூர்யகுமார் யாதவ் பெருமிதம்

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்: வெற்றிக்குப் பின்னால் எனது கடின உழைப்பு உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலாவது டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது டி20 ஆட்டத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 1, சுப்மன் கில் 46, ராகுல் திரிபாதி 35, ஹர்திக் பாண்டியா 4, தீபக் ஹூடா 4, அக்சர் படேல் 21 ரன்கள் எடுத்தனர். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசி அனைவரையும் மிரள வைத்தார். இதில் 9 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 45 பந்துகளிலேயே சதத்தை எட்டி அசத்தல் சாதனை புரிந்தார் சூர்யகுமார் யாதவ். இது டி20 போட்டிகளில் அவருக்கு 3-வது சதமாகும். ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவும், தொடர்நாயகனாக அக்சர் படேலும் தேர்வாயினர்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி. நீங்கள் ஒரு டி20 போட்டிக்குத் தயாராகும் போது உங்கள் மீதே நீங்கள் அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அதை அமல்படுத்தினால் களத்தில் இருக்கும்போது அந்த விளையாட்டு உங்களுக்கு மிகவும் எளிதாக அமைந்துவிடும்.

இந்த வெற்றியினால் நான் கொண்டாடப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த வெற்றி எனக்கு எளிதில் வந்துவிடவில்லை. இந்த வெற்றிக்குப் பின்னால் எனது கடின உழைப்பு உள்ளது. இந்தப் போட்டியின்போது விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள தூரத்தைக் கணித்து நான் சில ஷாட்களை விளையாடினேன். என்னுடைய ஆட்டத்தை பயிற்சியாளர் ராகுல் திராவிட் மிகவும் ரசித்தார். நீங்கள் அனுபவித்து விளையாடுங்கள் என்று அவர் ஆலோசனை அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச டி20 தொடரையடுத்து இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டம் வரும் 10-ம் தேதி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE