இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வு

By ஆர்.முத்துக்குமார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ சனிக்கிழமையன்று இந்திய மூத்த அணித் தேர்வுக்குழுவை அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியதையடுத்து சேத்தன் சர்மா தலைமை குழு கலைக்கப்பட்டது, இப்போது 2 மாதங்கள் சென்று மீண்டும் சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) உறுப்பினர்களான சுலக்‌ஷனா நாயக், முன்னாள் இந்திய வீரர் அசோக் மல்ஹோத்ரா, மற்றும் ஜதின் பாரஞ்ச்பே ஆகியோர் இந்த அணித்தேர்வுக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்போது சேத்தன் சர்மா தலைமையில் புதுமுக தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டல ஜூனியர் அணித்தேர்வுக்குழு தலைவராக இருந்த எஸ்.ஷரத் தேர்வுக்குழு உறுப்பினராக பதவி உயர்வு பெற்றுள்ளார். முன்னாள் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் சுப்ரடோ பானர்ஜி (1992 உலகக் கோப்பையில் ஆடியவர்), முன்னாள் வேகப்பந்த் வீச்சாளர் சலைல் அங்கோலா, முன்னாள் டெஸ்ட் ஓப்பனர் ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் உறுப்பினர்களாவார்கள்.

இதில் சுப்ரடோ பானர்ஜிதான் இப்போதைய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வின் கோச் என்பது பலரும் அறியாததே. எஸ்.ஷரத் முன்னாள் தமிழ்நாடு வீரரும் தற்போதைய ஜூனியர் செலக்‌ஷன் கமிட்டி தலைவர், இவர் தேர்வு செய்த அணிதான் 2022 -ல் யு-19 உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

தலைமைத் தேர்வாளர் சேத்தன் சர்மா காலக்கட்டத்தில் 2021, 2022 உலகக் கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்தியா கோப்பையை வெல்லவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடையும்போதும் சேத்தன் சர்மாதான் அணித் தேர்வுக்குழு தலைவராக இருந்தார்.

இந்தப் புதிய தேர்வுக் குழுவுக்கு பொறுப்புகள் அதிகம். 2023 உலகக் கோப்பை உள்ளது, அதற்கான அணியை உருவாக்கும் பொறுப்பு இவர்களிடத்தில் உள்ளது, இவர்களும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் கலந்தாலோசித்து நல்ல அணியாகத் தேர்வு செய்ய வேண்டிய பெரிய பொறுப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE