எல்லைகள் வேறானாலும் மாறாத அன்பு: ரிஷப் பந்த் குணம் பெற வேண்டி பிரார்த்திக்கும் ஷாஹீன் அஃப்ரிடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்காக தான் பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை அந்த காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நெற்றி, முழங்கால், முதுகு, மணிக்கட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைந்து குணம் பெற வேண்டி சக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் தனது வேதனையை பகிர்ந்திருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் எல்லைகளால் வேறு வேறாக பிரிந்திருந்தாலும் மனிதத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது ஷாஹீன் அஃப்ரிடியின் ட்வீட். ‘பிரார்த்திக்கிறேன் ரிஷப் பந்த’ என அவர் ட்வீட் செய்துள்ளார். இருவரும் கிரிக்கெட் உலகில் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடும் வீரர்கள் என்றாலும் அவர்களை ஒற்றைப் புள்ளியில் இணைத்தது அன்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE