மெல்பர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.
மெல்பர்னில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கோ ஜேன்சன் 59, கைல் வெர்ரன் 52 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் 200, அலெக்ஸ் காரே 111, ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் விளாசினர். 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தில் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்தது.
கேப்டன் டீன் எல்கர் ரன் ஏதும் எடுக்காமல் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சரேல் எர்வீ 7, தியூனிஸ் டி ப்ரூயின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியானது 68.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சரேல் எர்வீ 21, தியூனிஸ் டி ப்ரூயின் 28, ஹயா ஸோண்டோ 1, கைல் வெர்ரன் 33, மார்கோ ஜேன்சன் 5, கேசவ் மகாராஜ் 13, காகிசோ ரபாடா 3, லுங்கி நிகிடி 19 ரன்களில் நடையை கட்டினர்.
சற்று தாக்குப்பிடித்து விளையாடிய தெம்பா பவுமா 114 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்களில் நேதன் லயன் பந்தில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன் 3, ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இரட்டைசதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்த ஆட்டம் இரண்டே நாட்களில் முடிவடைந்திருந்தது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2005-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற 3 தொடர்களையும் தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது.
கேமரூன் கிரீனுக்கு அறுவை சிகிச்சை: மெல்பர்ன் டெஸ்டில் அன்ரிச் நார்ட்ஜ் பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் அடைந்தார். வலது ஆள்காட்டி விரலில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு அவர், அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் சிட்னியில் நடைபெற உள்ள 3-வது டெஸ்டில் இருந்து கேமரூன் கிரீன் விலகி உள்ளார். இதேபோன்று இடது கையின் நடுவிரல் பகுதியில் காயம் அடைந்துள்ள மிட்செல் ஸ்டார்க்கும் சிட்னி போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிராக பிரப்ரவரி மாதம் நடைபெற உள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்திய தொடருக்கு முன்னதாக கேமரூன் கிரீன் குணமடைந்துவிடுவார் என ஆஸ்திரேலிய வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு சாதகம்.. : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 50 சதவீத வெற்றி புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் இந்திய அணி 58.93 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்வதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 78.57 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago