தென் ஆப்பிரிக்கா மீது ஆஸ்திரேலிய அணிக்கு ஏன் இத்தனை கோபம்?

By ஆர்.முத்துக்குமார்

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு முதல் டெஸ்ட்டில் 2 நாட்களில் படுதோல்வி கண்டது, இப்போது பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட்டில் 189 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்காவைச் சுருட்டிய ஆஸ்திரேலியா 541 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் விழுந்த நிலையிலும் டிக்ளேர் செய்யாமல் அந்த அணியை இம்சித்து வருகிறது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் கோபாவேசம் தெற்றெனப் புலப்படுகிறது.

2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியையும் விளையாட்டு விரும்பிகளான அந்த நாட்டு ரசிகர்களையும் புரட்டிப் போட்ட சம்பவம்தான் இதற்கெல்லாம் காரணம். தென் ஆப்பிரிக்காவுக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சென்றது ஆஸ்திரேலியா அணி அப்போது முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்த போது 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியின் 3ம் நாள், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்த போது 43வது ஓவருக்குப் பிறகு முன்னாள் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்விங் மேதை ஃபானி டிவில்லியர்ஸ் பணியாற்றிய ஒளிபரப்பு நிறுவனம் ஆஸ்திரேலியா வீரர் பேங்கிராப்ட் தன் பாக்கெட்டிலிருந்து உப்புக் காகிதத்தை எடுத்து பந்தில் தேய்த்து சேதம் செய்ததைக் காட்டி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. கையும் களவுமாகப் பிடிப்பட்டது தெரிந்ததும் பந்தைத் தேய்த்த பொருளையும் தன் பாக்கெட்டில் வைத்து மறைத்ததும் அம்பலமானது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்திய விசாரணைக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக் கொண்டார், அது சேண்ட் பேப்பர்தான் என்று பேங்கிராப்டும் ஒப்புக் கொண்டார், வேண்டுமென்றே பந்தின் தன்மையை மாற்றி ரிவர்ஸ் ஸ்விங்கிற்காகவும் கொஞ்சம் ஸ்பின்னுக்காகவும் மோசடி செய்தது ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே கடும் கொதிப்பை உருவாக்கியது. வார்னர் இதன் பின்னணியில் இருந்ததும் தெரியவர பேங்கிராப்ட், வார்னர், ஸ்மித் மூவரும் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து தடை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டே சின்னாப்பின்னமானது. டிம் பெய்ன் கேப்டன்சியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா 2018, 2021 டெஸ்ட் தொடர்களை இழந்தது. ஸ்மித், வார்னர், பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு அழுதனர்.

ஸ்டீவ் ஸ்மித்தின் தந்தை பிரஸ் மீட்டுக்குப் பிறகு தன் மகனை காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஸ்மித்தின் கிட் பேக்கை தூக்கி கார் ஷெட்டில் எறிந்ததும் நடந்தது. கடும் அவமானங்களை ஆஸ்திரேலிய அணி சந்தித்ததோடு, உலக அரங்கில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டே அசிங்கப்பட்டு போனது. ஸ்மித், வார்னர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவர்களை கடும் கேலியும் கிண்டலும் செய்தபடி இருந்தனர்.

2019 உலகக்கோப்பையில் இந்திய ரசிகர்களும் இங்கிலாந்து ரசிகர்களும் சேர்ந்து ஸ்மித்தை கேலி செய்த போது விராட் கோலி ஸ்மித்தின் கையைப்பிடித்து உயர்த்தி இப்படி செய்யாதீர்கள் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டதும் பிரபலமான சம்பவங்களே.

இந்தப் பின்னணியில்தான் பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா காத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்ய உள்ளார்ந்த கோபக்கனல் துளிர்விட்டு எறிந்து கொண்டிருந்தது. இன்று வரை வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அது கனன்று கொண்டிருந்தது என்பது இந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை உருத்தெரியாமல் அடிக்க வேண்டும் என்ற வெறி மூலம் தெரிகிறது.

அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பன் மைதானத்தில் பந்துகளை தொட முடியாத கிரீன் டாப் பிட்சைப் போட்டு 2 நாட்களுக்குள் அதாவது மொத்தம் 866 பந்துகளே வீசப்பட்ட ஒரு குறுகிய டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை மோசமாகத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.

இப்போது நடைபெற்று வரும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு, நான் பழைய ‘பாட்ஷா’வாக வருவேன் என்று இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாகக் கூறி, ரஜினிகாந்த் போல்,’நான் சொல்றதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்’ என்று தன் மட்டை மூலம் பஞ்ச் டயலாக்கைப் பேசி தன் 100வது டெஸ்ட்டில் இரட்டைச் சதம் விளாசி சாதனைப் படைத்தார்.

இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு 200-225 ரன்கள் முன்னிலையே போதும், ஆனாலும் விடாமல் அந்த அணியை சோர்வடையச் செய்து கிரிக்கெட் என்றாலே பிடிக்காமல் செய்து விட வேண்டும் என்ற மனப்போக்கில் தற்போது 556 ரன்கள் எடுத்து, 367 ரன்கள் முன்னிலை சென்ற பிறகும் டிக்ளேர் செய்யாமல் தென் ஆப்பிரிக்க அணியை வெறுப்பேற்றி வெயிலில் காய அடிப்பதின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? பழைய பகைதான்! செய்தது தவறு என்பது ஒருபுறம் தெரிந்தாலும் இழந்த மரியாதை, பட்ட அவமானத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணியை கும்மு கும்மென்று கும்மினால்தான் வெறி அடங்கும் என்பது போல் ஆடிவருகிறது ஆஸ்திரேலியா.

இப்போது விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் சதமெடுத்து ஆட்டமிழந்துள்ளார். கையில் அடிவாங்கினாலும் விடமாட்டேன் என்று கேமரூன் கிரீன் 43 ரன்களுடன் ஆடிவருகிறார். இன்று காலை ட்ராவிஸ் ஹெட் (51) விக்கெட்டையும், அடுத்த பந்தே வார்னர் (200) விக்கெட்டையும் நார்க்கியா அபாரமாக பவுல்டு முறையில் காலி செய்தார். நேதன் லயன் தன் பங்கிற்கு 17 பந்துகளில் 25 ரன்கள் விளாசி விட்டு அவுட் ஆகிச் சென்றார்.

டிக்ளேர் செய்யாமல் ஆடுவது என்பது முன்னிலையை அதிகரிப்பது என்ற நோக்கத்தை விட தென் ஆப்பிரிக்காவைக் காய விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்