என்னை உருவாக்கியவர் ராஜ் சிங் துங்கார்பூர்: சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

இன்று நமக்கு சச்சின் டெண்டுல்கர் என்ற ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரரும், சிறந்த மனிதரும் கிடைத்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் முன்னாள் இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் ராஜ் சிங் துங்கார்பூர் என்றால் அது மிகையாகாது.

"ராஜ் சிங் துங்கார்பூர் - ஓர் அஞ்சலி" என்ற நூல் வெளியீட்டு விழாவில் புத்தகத்தை வெளியிட இதனாலேயே சச்சின் டெண்டுல்கர்தான் சிறந்த நபர் என்று முடிவெடுக்கப்பட்டு புத்தக்கத்தை வெளியிட்டு அவர் உரையாற்றினார்.

1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு சச்சின் டெண்டுல்கரைத் தேர்வு செய்தவர் ராஜ் சிங் துங்கார்பூர்.

ராஜ் சிங் துங்கார்பூர், மாதவ் ஆப்தே, மிலிங் ரெகே ஆகியோர் அப்போது மும்பையில் இருந்த சிசிஐ கிளப்பில் சச்சின் டெண்டுல்கருக்கு 13வயதாக இருந்தபோது அவரைச் சேர்த்து விட்டனர்.

இது மிகப்பெரிய திருப்பு முனை. காரணம் சிசிஐ கிளப்பில் அப்போது 18 வயதுக்குக் குறைவான வீரர்கள் ஓய்வறையில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற வசதிகளையும் பெற முடியாத நிலை இருந்தது.

நேற்று மும்பையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு தாமதமாக வந்த சச்சின் கூறும்போது:

முதலில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்கள் பொறுமைக்கு நன்றி. எல்லாவற்றையும் விட நான் இந்தத் தருணத்தில் அவரது நூலைக் கையில் வைத்துக் கொண்டுப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு நிரம்ப மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் நான் இன்று சச்சின் டெண்டுல்கராக உங்கள் முன் நிற்பதற்கு ராஜ்பாய் செய்த உதவிகள் அளப்பரியது.

சிசிஐ கிளப்பில் இப்போது 18 வயதுக்குட்பட்டோர் அனுமதிக்கப்படுகின்றனரா என்பது தெரியவில்லை. ஆனால் அப்போது ராஜ்பாய்தான் எனக்காக வாதாடி சிசிஐ கிளப்பில் அனைத்து வசதிகளையும் பெற்றுத் தந்தார். விதிமுறைகள் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்துதான் எனது கிரிக்கெட் வாழ்வு தொடங்கியது.

எனக்கு ஸ்பான்ஸரைப் பெற்றுத் தந்ததும் ராஜ்பாய்தான். ‘கிரிக்கெட் ஆடவேண்டியதுதான் உன் வேலை மற்றது என்னுடைய வேலை’என்று கூறினார் அவர்.

அவர் எனக்கு தந்தை போன்றவர், அவரை அனைவரும் மதித்தனர். 1989ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு என்னை இந்திய அணியில் தேர்வு செய்யவேண்டுமா என்று ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் என்னை ரஞ்சி டிராபியில் கவனம் செலுத்துமாறு கூறினார். பாகிஸ்தான் தொடருக்கு என்னை அணியில் தேர்வு செய்தவர் ராஜ் சிங் துங்கார்பூர் அவர்கள்தான். இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் நூலை நான் வெளியிடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த அறையில் அவர் எங்கோ அமர்ந்து என்னைப்பார்த்து புன்னகை புரிவது போலவே எனக்குத் தோன்றுகிறது.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE