அந்நிய ஆடுகளத்தில் மீண்டும் ஹீரோவாக ஜொலித்த அஸ்வின்

By பெ.மாரிமுத்து

வங்கதேச அணிக்கு எதிரான மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த தருணம். கணிக்க முடியாமல் அமைந்த ஆடுகளத்தில் பந்துகள் பெரும்பாலும் தாழ்வாகவும், மோசமாகவும் வந்து கொண்டிருந்ததால் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் ஆட்டமிழந்து தங்களது இருக்கைக்கு திரும்பிவிட்டனர். இலக்கு 145 ரன்களே என்ற போதிலும் அது சாத்தியம் இல்லாதது, வெகுதொலைவில் இருப்பது போன்ற உணர்வை பார்வையாளர்கள் மத்தியில் கடத்தியது. அப்போதுதான் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்தார். இவர்கள் இருவரும்தான் அணியில் இருந்த கடைசி பேட்ஸ்மேன்கள். இவர்களுக்கு பின்னால் டெய்லெண்டர்கள் உமேஷ் யாதவ், மொகமது சிராஜ் ஆகியோர் மட்டுமே.

சென்னையைச் சேர்ந்த 36 வயதான ஆல்ரவுண்டரான அஸ்வின் தனது சிறப்புமிக்க 88 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். இம்முறை அவர் சதம் அடிக்கவில்லை. ஏன் அரை சதம் கூட எட்டவில்லை. இருப்பினும் மிர்பூர் டெஸ்டின் கடைசி நாளில் அஸ்வின் சேர்த்த 42 ரன்கள் அதனினும் பெரிது.

அவர், ஆட்டமிழக்காமல் சேர்த்த 42 ரன்கள் இடையிலான போராட்டம் என்பது கிரிக்கெட் வாழ்க்கை சில சமயங்களில் நம் மீது வீசும் துல்லியமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கான படிப்பினைகளையும், தனிநபரின் குணாதிசயங்களையும், திறமையையும் உண்மையிலேயே சோதிக்கப்படுவதாக இருந்தது.

ஸ்ரேயஸ் ஐயருடன் அற்புதமாக ஆட்டத்தை கட்டமைத்து எதிரணியின் பந்துவீச்சாளர்களால் உடைக்க முடியாத 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, இந்திய அணிக்கு 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் அஸ்வின். இதன் மூலம் அவர், அந்நிய மண்ணில் மீண்டும் ஒரு முறை தனது மட்டை வீச்சால் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்துள்ளார்.

மிர்பூர் போட்டியானது 2021-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஹனுமா விகாரியுடன் இணைந்து அஸ்வின் போராடியதை நினைவுப்படுத்தும் விதமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் அஸ்வினால் கீழே குனிந்து தனது ஷூவின் கயிறுகளை கூட கட்ட முடியாத அளவுக்கு முதுகு வலியால் வேதனைப்பட்டார். இருந்தபோதிலும் சுமார் 3 மணி நேரம் களத்தில் போராடி ஆட்டத்தை டிரா செய்ய பெரிதும் உதவியிருந்தார். இந்த ஜோடியின் போராட்டம் வெற்றிக்கு நிகராக பாராட்டப்பட்டிருந்தது.

கடினமான சூழ்நிலைகளை சாதுர்யமாக எதிர்கொள்வது அஸ்வினுக்கு பழகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். மெல்பர்னில் கடந்த மாதம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மொகமது நவாஸ் பந்து வீச்சுக்கு எதிராக அவர், புத்திசாலித்தனமாக செயல்பட்ட விதமும் ரசிகர்களின் கண்முன் வந்து செல்லாமல் இல்லை. அஸ்வினிடம் இருந்து வெளிப்படும் இதுபோன்ற ஒரு பாத்திரமே ஆட்டத்தின் சூழ்நிலை விழிப்புணர்வையும், செய்ய வேண்டியதை நிறைவேற்றுவதற்கான ஒரு தனி அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மிர்பூர் டெஸ்ட் போட்டியில் அவரிடமிருந்து மீண்டும் ஒருமுறை சிறந்த பண்புகள் வெளிப்பட்டன. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது. ஒரு ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த அஸ்வின், அதன் பின்னர் வங்கதேச அணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை. வேகமும், விரைவு கதியிலும் கலீல் அகமது வீசிய பந்தை அஸ்வின் தடுத்து ஆடிய விதத்திலும், கடைசி 8 பந்துகளில் 19 ரன்கள் விளாசியதிலும் வங்கதேச அணி திகைத்து போனது. கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்த மெஹிதி ஹசனின் கடைசி ஓவரில் அஸ்வின் 2 பவுண்டரிகள், லாங்-ஆனில் ஒரு சிக்ஸர் என 16 ரன்களை வேட்டையாடி இருந்தார். அந்த ஷாட்கள் அஸ்வினின் டெஸ்ட் வாழ்க்கையில் துணிச்சலானதாகவே பார்க்கப்படுகிறது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியை விட குறைவான ரசிகர்களே மிர்பூர் டெஸ்டை கண்டுகளித்திருக்கக்கூடும். ஆனால் போட்டியின் முடிவும் அதன் தாக்கமும் அளப்பரியது. வங்கதேச டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி. இதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டது இந்திய அணி. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் நிலைபெற முடிந்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. ஒருவேளை மிர்பூர் டெஸ்டில் தோல்வியை சந்தித்திருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும்.

அஸ்வினுக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரேயஸ் ஐயரும் பாராட்டுக்குரியவரே. மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களை போல் இல்லாமல், குறைந்த அளவிலான போட்டியில் விளையாடிய போதிலும் ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் மதிப்புமிக்க வகையில் 4-வது இன்னிங்ஸை அற்புதமாக விளையாடி முன்னெடுத்துச் சென்றார். ஆடுகளத்தால் அவர், எந்த ஒரு அசவுகரியத்தையும் உணரவில்லை. ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான தாக்குதல் ஆட்டம் தொடுத்தார். இதுவே ஆட்டத்தின் மனநிலையை மாற்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது.

‘அதீதமாக சிந்திக்கிறேன்’: ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில்,“இந்திய அணியின் சீருடையைப் பெருமையுடன் அணிந்தது முதல் அதீதமாகச் சிந்திப்பவர் என்கிற முத்திரை என் மீது விழுந்துள்ளது. மக்கள் தொடர்பாளர்களைக் கொண்டு என்னைப் பற்றிய இந்த எண்ணங்களை முற்றிலும் நான் அழித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் பயணமும் முக்கியமானது, சிறப்பானது. சிலருடைய பயணத்தில் அதீதமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். சிலர் பயணத்தில் பெரிதாகச் சிந்திக்கத் தேவையில்லை.

நான் விளையாட்டை மிகவும் ஆழமாகச் சிந்தித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். நல்ல யோசனைகள் பகிரப்பட்டால் அவை நம்ப முடியாத சாதனைகளாக மாறும் என்பதில் நம்பிக்கை கொண்டவன். அதற்கு வரவேற்பு இல்லாவிட்டாலும் என்னைத் தடுக்காது. ஏனெனில் என்னுடைய லட்சியம், வாக்குவாதத்தில் ஜெயிப்பது அல்ல. இறுதியில் கற்றுக்கொள்வது தான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

மிர்பூர் வெற்றி ஏன் சிறப்பு?: இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் டெஸ்டில் சில ஆட்டங்களில் சிறப்பு வாய்ந்த வகையில் இலக்கை துரத்தி வெற்றி கண்டுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக 1971-ல் ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி, 1976-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி, 2001-ம் ஆண்டு கண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி, 2021-ம் ஆண்டு பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஆகியவை புகழ்பெற்றவை. இந்த வரிசையில் தற்போது மிர்பூர் டெஸ்ட் போட்டியும் இணைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் குறைந்த விக்கெட்கள் வித்தியாசத்திலேயே இந்தியா வெற்றி கண்டது. எனினும் தோல்வியின் பிடியில் இருந்து வெற்றிக்கு திரும்பியதுதான் கூடுதல் சிறப்பம்சம்.

ஆஸி.தொடர் முக்கியம்: எப்போதும் வெற்றிகள் அணியில் உள்ள சில ஓட்டைகளை மறைத்துவிடும். இதற்கு வங்கதேச தொடரும் விதிவிலக்கு அல்ல. கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் எந்த ஒரு இன்னிங்ஸிலும் 25 ரன்களை கூட தாண்டவில்லை. வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரும் கூட சமீபகாலமாக தனது திறனுக்கு தகுந்தபடியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை. இந்த சூழ்நிலையில்தான் சொந்த மண்ணில் வரும் பிப்ரவரி மாதம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் கணிசமான வெற்றிகளை குவித்தால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்