வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட தண்ணி குடிக்க வேண்டியதாயிற்று. கடைசியில் ஸ்ரேயஸ் அய்யரின் சுழல் பந்து வீச்சுக்கு எதிரான அமைதியான ஒரு ‘ஜீனியஸ்’ ரக பேட்டிங்கும் அஸ்வினின் அற்புதமான தைரிய இன்னிங்சும் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால் இந்த வெற்றி பெருமை கொள்ளத் தக்கதுதானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
ஏனெனில் முதலில் குல்தீப் யாதவ்வை உட்கார வைத்து விட்டு ஆடிய போட்டியில், தப்பும் தவறுமாக ஒரு அணித்தேர்வை திமிராக செய்து விட்டு வெற்றி பெறுகிறது என்றால் அவர்கள் செய்த தவறான அணித்தேர்வு நியாயமாகி விடும் பொதுப்பார்வையில், ஆனால் கிரிக்கெட் ஆட்ட தார்மிகத்தின் படி இந்தியா வென்றாலும் குல்தீப் யாதவ்வை ட்ராப் செய்தது அநியாயமே. இங்கிலாந்தில் உலகின் தலை சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை கோலி-சாஸ்திரி கூட்டணி உட்கார வைத்து அழகு பார்த்தது வெற்றியில் முடிந்தாலும் எப்படி அநீதியோ அது போல்தான் இந்த வங்கதேசத்திற்கு எதிரான வெற்றி அநீதியில் பிறந்த வெற்றி என்று நாம் கஷ்டத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.
இந்தத் தொடரின் நாயகனாக ஸ்ரேயஸ் அய்யரைத் தேர்வு செய்யாமல் புஜாராவைத் தேர்வு செய்தனர். இது குறித்த அஸ்வினின் கூற்று மேற்கோள் காட்டத்தக்கதே:
“ஸ்ரேயஸ் அய்யருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கவில்லை. ஆகவே, நான் இந்த ஆட்ட நாயகன் விருதை அவருடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்தான் தொடர் நாயகன்” என்று கூறியிருப்பது அஸ்வினின் பெருந்தன்மையையும் தாண்டிய கிரிக்கெட் பற்றிய அவரது உயர் மதிப்பீடு சார்ந்தது என்பதுதான் முக்கியம்.
» ஆசியக் கோப்பை ஸ்டேஜ் - 3 வில்வித்தையில் இந்தியாவுக்கு 5 தங்கம்
» அதிக கோல்கள், அசிஸ்ட்கள்: ரொனால்டோ VS மெஸ்ஸி... 2022-ல் யார் டாப்?
வங்கதேச பிட்ச் இந்திய பிட்ச்கள் போல் குழி பிட்ச் அல்ல. ஏன் வங்கதேசம் ஒவ்வொரு முறையும் குழிப்பிட்ச் போடத் தயங்காதவர்கள் இந்தியாவுக்கு எதிராக போடவில்லை எனில் இந்தியா குழிப்பிட்ச் தாதா என்பதுதான். ஆகவே இந்தப் பிட்ச் ஒன்றும் பேய் பூதங்கள் இல்லை. சமீப காலங்களில் இந்தியாவின் டாப் 4 ஒரு நல்ல கூட்டணி அமைத்ததாக நினைவில் இல்லை. 200 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற சமீபத்திய நினைவு இல்லை என்று வாசிம் ஜாஃபர் மிகச்சரியான ஒரு விமர்சனத்தை வைக்கும் அதே வேளையில், ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஒவ்வொரு முறையும் அணியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இறங்க வேண்டிய நிலை எதிர்கால இந்திய டெஸ்ட் அணி குறித்த கவலைகளையே அதிகரிக்கச் செய்கிறது என்று கூறியதும் மிகவும் கூரிய அவதானிப்பாகும்.
அன்று இங்கிலாந்து 167 ரன்கள் வெற்றி இலக்கை பழைய இங்கிலாந்தாக இருந்திருந்தால் மிரட்டி ஜெயித்திருக்க முடியும் பாகிஸ்தானால். ஆனால் ப்ளே என்றவுடன் சாத்துமுறை தொடங்கியது. 17 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களுக்கும் மேல் சென்றது 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது, கடைசியில் 167 ரன்கள் இலக்கை ஓவருக்கு 6.5 என்ற ரன் விகிதத்திற்கும் மேல் எடுத்து வென்றது இங்கிலாந்து 3-0 வரலாறு படைத்தது.
பிரிஸ்பேனில் இந்தியா வென்றதும் இதே போன்ற ஆக்ரோஷ அணுகுமுறையினாலேதான். சிட்னியில் ட்ரா செய்ததும் இதே அணுகுமுறையினால்தான். ஆனால் ராகுல் திராவிட் கோச் ஆக வந்த பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆதிகால வழிமுறையையும் அணுகுமுறையையும் கடைப்பிடிக்கத் தொடங்கி நியூசிலாந்தின் அஜாஜ் அகமதுவிடம் 10 விக்கெட்டுகளையும் கொடுத்ததையும் பார்த்தோம், இங்கிலாந்தில் அந்த ஒரு டெஸ்ட்டில் செம உதை வாங்கியதையும் பார்த்தோம். ராகுல் திராவிட் கொஞ்சம் நவீன கிரிக்கெட் பற்றி சிந்தித்தால் நல்லது. ராகுல் திராவிட்டே அவர் விளையாடிய காலத்தில் சேவாக் வருவதற்கு முன்பாக செம தடவல், அறுவை பேட்டவராகத்தான் இருந்தார். எதிர்முனை பேட்டர்கள், சச்சின் டெண்டுல்கர், கங்குலி போன்றோர் பொறுமை இழந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் ஒருமுறை வர்ணனையில், “பேட்டர் வேலை ரன் எடுப்பதும், பவுலர் வேலை விக்கெட்டுகள் எடுப்பதுமே தவிர, திராவிட் போல் மட்டை வைப்பதாலோ, ஸ்ரீநாத் போல் விக்கெட் எடுக்காமல் வெறுமனே பீட்டன் செய்வதாலோ எந்த அணிக்கும் பயன் இல்லை” என்று கூறியதை நாம் இங்கு நினைவு கூர்வோம். சேவாக் ஒப்பனிங்கில் இறங்க ஆரம்பித்த பிறகு 3-ம் நிலையில் இறங்கிய திராவிட்ன் பேட்டிங் வரைபடம் உயரே சென்றதையும் பார்த்தோம், ஏனெனில் சேவாக் புதிய பந்தை பிரித்து மேய்ந்த பிறகு இவர் இறங்குவார் எளிதாக திராவிட்டுக்கு அமைந்தது. அப்படித்தானே திராவிட் இப்போது பயிற்சியாளராக இருக்கும் போதும் யோசிக்க வேண்டும். ஆகவே டெஸ்ட் போட்டியின் அணுகுமுறை மாறி விட்டது, மாறும் காலத்திற்கே மாற்றிக்கொள்ளவில்லை எனில் திராவிட் பயிற்சியில் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் செல்லாக்காசாகிவிடும் அபாயம் உள்ளது.
நடப்பு கிரிக்கெட்டில் ஸ்பின்னுக்கு எதிரான தலைசிறந்த வீரர் ஸ்ரேயஸ் அய்யர்! ஒரு காலத்தில் இந்தியாவுக்கு எதிராக ஸ்பின்னா? ஏன் மைதானம் நெடுக ஓடுவதற்கா என்றுதான் எதிரணியினர் அஞ்சினர். ஆனால் இன்று இந்தியாதானே கொஞ்சம் புல்தரையும், கொஞ்சம் குழியையும் கலந்து விட்டால் போதும் முடிந்தது இந்திய பேட்டர்களின் கதை என்பதாக சரிந்துள்ளது. வேகப்பந்து வீச்சிற்கு எதிரான ஆட்டமும் போய்விட்டது, ஸ்பின்னுக்கு எதிரான நிபுணத்துவமும் போய் விட்டது.
இந்நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் மட்டுமே ஸ்பின் பந்து வீச்சை எந்த நிலையிலும் அபாரமாக எதிர்கொண்டு ஆடி வருகிறார்.வங்கதேச தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றிருக்கிறார் என்றால் அது சும்மா இல்லை. ஸ்பின் பந்து வீச்சை அவர் நிபுணத்துவத்துடன் கையாள்கிறார் என்பதாலேயே அவருக்கு இந்தப் பெருமை.
2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் அவர் எடுத்த 87 ரன்களும் ரிஷப் பண்ட்டுடன் சேர்ந்து அமைத்த கூட்டணியும் மிக முக்கியமானது. 2வது இன்னிங்ஸில் அவரும் அஸ்வினும் சேரும் போது இந்திய அணி 74/7. அந்த நிலையிலும் எந்த வித அழுத்தமும் இல்லாமல் ஸ்ரேயஸ் அய்யர், பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல் வங்கதேச அணியை தன் தடுப்பாட்டத்தினாலும் அபாரமான சில பவுண்டரிகளினாலும் பிரஷரை அவர்கள் பக்கம் ஏற்றினார்.
46 பந்துகளை ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் தன் 29 ரன்களில் 4-5 முறையே தவறாக ஆடினார். ஸ்ரேயஸ் அய்யர் இந்திய அணிக்குள் நுழைந்தது முதல் அணியைக் காப்பாற்றி வருகிறார், கான்பூரில் 106/3 என்ற நிலையிலும் பிறகு 51/5 என்ற நிலையிலிருந்தும் காப்பாற்றியதை மறக்க முடியுமா?
கிரிக் இன்போ புள்ளிவிவரங்களின் படி இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் அய்யர் எதிர்கொண்ட 244 பந்துகளில் மொத்தமே 24 பந்துகளில்தான் தவறாக ஆடியுள்ளார். இந்தத் தொடரில் ஸ்ரேயஸ் இறங்கும்போதெல்லாம் இந்திய அணியின் ஸ்கோர் 112/4, 94/4, 71/6 என்று இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தது, சரிவிலிருந்து மீட்டுள்ளார் ஸ்ரேயஸ். கிரிக் இன்போ கூறும் இன்னொரு ஆச்சரியகரமான புள்ளி விவரம் என்னவெனில் இதுவரை அய்யர் எதிர்கொண்ட 592 சுழற்பந்துகளில் மொத்தமே 54 முறைதான் தவறான ஷாட்டை ஆடியிருக்கிறார் என்றால் ஸ்பின் பந்து வீச்சை ஸ்ரேயஸ் எப்படி ஆடுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
எனவே இப்போதைய கிரிக்கெட் உலகில் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்ரேயஸ் அய்யர்தான் சிறந்த வீரர் என்று கூறுவது மிகையாகாது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago