IND vs BAN | இந்தியா – வங்கதேச அணிகள் 2-வது டெஸ்டில் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

மிர்பூர்: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சட்டோகிராமில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஏனெனில் தற்போதைய நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 76.92 வெற்றி சதவீத புள்ளிகள் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 55.77 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணியிடம் காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்ததால் அந்த 2-வது இடத்தில் இருந்து 54.55 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறி இருந்தது.

இன்று தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டித் தொடரும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டங்களில் வெற்றி கண்டால் மட்டுமே 2-வது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும்.

வங்கதேச அணியினர் முதல்டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் போராடினார்கள்.இதனால் இம்முறை அந்த அணிமுதல் இன்னிங்ஸிலும் மட்டை வீச்சில் கவனம் செலுத்தக்கூடும். இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. முதல்டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில்ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, ஸ்ரேயஸ்ஐயர் ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தி இருந்தனர்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்கள் வீழ்த்தினார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்துவீச்சு வெளிப்படக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE