அஸ்வின், ஜெனிங்ஸ் அபாரம்: இங்கிலாந்து 5 விக். இழப்புக்கு 288 ரன்கள்

By இரா.முத்துக்குமார்

மும்பை டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியின் அறிமுக தொடக்க வீரர் கீட்டன் ஜெனிங்ஸ் அபாரமாக சதம் அடித்தார். அறிமுக டெஸ்ட்டில் சதமடித்த 19-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெனனிங்ஸ். வழக்கம் போல் அஸ்வினின் அபாரப்பந்து வீச்சில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன.

ஆட்ட முடிவில் ஜோஸ் பட்லர் 18 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அஸ்வின் 30 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களூடன் 75 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்திய முதல் நாள் பிட்ச் எப்படியிருக்குமோ அப்படியே செயல்பட்டது மும்பை பிட்ச். ஆனால் பிட்ச் நிச்சயம் இப்படியேயிருக்காது. அஸ்வினுக்கு பந்துகள் திரும்பி எழும்பத் தொடங்கியுள்ளன, சற்றே பலவீனமான இந்திய பேட்டிங்கும் எச்சரிக்கையுடன் ஆடுவது நல்லது என்று தெரிகிறது.

இங்கிலாந்து அறிமுக தொடக்க வீரர் கீட்டன் ஜெனிங்ஸ் ஏகப்பட்ட விளம்பரங்களுக்கிடையே களமிறங்கி நிரூபித்தார், ஆனால் அவர் ரன் எடுக்காத போது உமேஷ் யாதவ் பந்தில் சற்றே கடினமான வாய்ப்பை கல்லியில் கருண் நாயர் பிடித்துப் போட்டிருந்தால் அவரது அறிமுகப் போட்டி சிக்கலாகியிருக்கும். உமேஷ் யாதவ் மீண்டும் அதிர்ஷ்டமில்லாமல் அபாரமாக வீசினார். கருண் நாயர் கேட்ச் விட்ட பந்து கூட குத்தி எழும்பி ஜெனிங்சை நிலைகுலையச் செய்த பந்துதான், அவ்வப்போது மணிக்கு 145 கிமீ வேகம் வீசினார் உமேஷ். இந்தியாவின் ரபாடாவாக அவருக்குத் தேவை சாதகமான பிட்ச் என்றால் மிகையாகாது.

டாசில் தோற்றாலும் விராட் கோலி நம்பிக்கையுடன் கேப்டன்சி செய்தார், ஆனால் ஆஃப் ஸ்பின்னுக்கு இடது கை வீரருக்கு டெஸ்ட் போட்டியில் லாங் ஆஃப் வைத்து பந்து வீசியது எப்படி என்றுதான் புரியவில்லை. இதனால் ஜெனிங்ஸ் சில பல சிங்கிள்ஸ்களை எடுத்து தனது அழுத்தத்தைக் குறைத்து கொள்ள கோலி அனுமதித்தார் என்றே தோன்றுகிறது.

ஆனால் ஷார்ட் பிட்ச் பந்தில் ஜெனிங்ஸ் கேட்ச் கொடுத்தார் என்பதற்காக ‘எனக்கு ஷார்ட் பிட்ச் வீசாதீர்கள்’ என்பது போல் சில புல்ஷாட்களை ஆடித் தெரிவித்தார் ஜெனிங்ஸ். முதலில் கிரீசிற்குள்ளே நின்று எச்சரிக்கையுடன் ஆடிய ஜெனிங்ஸ் அதன் பிறகு சற்றே சுதந்திரமாக முன்னே வந்து ஆடிய போது இடது கை பேட்ஸ்மென்களுக்கே உரிய அழகை வெளிப்படுத்தினார்.

ஷமிக்குப் பதிலாக அணியில் தேர்வு செய்யப்பட்ட புவனேஷ் குமார், தொடக்கத்தில் பிட்சில் ஸ்பைக்சைப் பதித்து சேதம் விளைவித்ததற்காக நடுவரால் அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டார்.

அலிஸ்டர் குக் 46 ரன்களை எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் வீழ்ந்தார். அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த குக், மேலேறி வந்து அடிக்க முயன்றார் ஆனால் பந்து காற்றில் மெதுவாக வர பேட், கால்காப்பிற்கிடையே புகுந்து படேலிடம் ஸ்டம்ப்டு ஆனார். முதல் விக்கெட்டுக்காக 99 ரன்கள் சேர்க்கப்பட்டது.

ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து ஒன்று கூடுதலாக சுழல ஸ்லிப்பில் கோலியின் அபாரமான கேட்ச் ஆனது.

89 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் எடுத்த ஜெனிங்ஸ் பிறகு 186 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் கண்டார். அதுவும் ஜெயந்த் யாதவ் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மூலம் சதம் கண்டது அவரது ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

உணவு இடைவேளையின் போது 117/1 என்று ஆதிக்கம் காட்டிய இங்கிலாந்து தொடர்ந்து தேநீர் இடைவேளை வரையும் 196/2 என்று ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு, 94 ரன்கள் கூட்டணி அமைத்த ஜெனிங்ஸ், மொயின் அலி (50) கூட்டணியை அஸ்வின் உடைத்தார்.

கோலியின் சமயோசிதமான கேப்டன்சி:

ஆட்டத்தின் 71-வது ஓவரில் அஸ்வினை கோலி கொண்டு வந்தார். 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அபாரமாக ஆடி வந்த மொயின் அலி 50 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினை தாக்கி ஆட நினைத்து ஸ்வீப் செய்தார், டாப் எட்ஜ் ஆகி மிட்விக்கெட்டில் கருண் நாயரிடம் கேட்ச் ஆனது.

இதனையடுத்து ஸ்ட்ரைக்கர் முனைக்கு ஜெனிங்ஸ் வந்தார். அவர் வந்தவுடனேயே கோலி டீப் கல்லி திசையில் பீல்டரைக் கொண்டு வந்தார், இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். அஸ்வின் பந்தை ஆஃப் ஸ்டம்ப்பில் நல்ல அளவில் வீச அவரை முன்னால் இழுத்த அந்தப் பந்து மட்டையின் விளிம்பைப் பிடிக்க டீப் கல்லியில் புஜாரா தாழ்வாக வந்த கேட்சைப் பிடித்தார். 112 ரன்களில் ஜெனிங்ஸ் வெளியேறினார். ஒரே ஒவரில் அஸ்வின் 2 விக்கெட்டுகள்!

இந்தத் தொடரில் அருமையாக ஆடிவரும் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 14 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தை ஆக்ரோஷ ஸ்வீப் ஆட முயன்றார், பந்து கூடுதல் பவுன்ஸ் காட்ட பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் உமேஷ் யாதவ் கையில் பந்து கேட்ச் ஆனது.

249/5 என்ற நிலையிலிருந்து பட்லர், பென் ஸ்டோக்ஸ் மேலும் சேதமில்லாமல் கொண்டு சென்று 288/5 என்று முடித்தனர். இந்தியா இன்று 94 ஓவர்களை வீசியது.

ஜெயந்த் யாதவுக்கான முதல் நாள் பிட்ச் இதுவல்ல என்பதால் அவர் 22 ஓவர்களில் 78 ரன்கள் என்று தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. ஜடேஜா 60 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்