FIFA WC | உங்கள் ஆதரவுக்கு நன்றி: இந்தியா, பாக்., வங்கதேசத்தை குறிப்பிட்டு அர்ஜென்டினா அணி ட்வீட்

By செய்திப்பிரிவு

லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி சார்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டில் உள்ள தங்கள் அணியின் ஆதரவாளர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் ட்வீட் செய்துள்ளது. அது சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.

கத்தார் நாட்டின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா. அந்த அணிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அர்ஜென்டினாவின் தீவிர ஆதரவாளர்களுக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்துள்ளது அந்த அணி நிர்வாகம். அர்ஜென்டினா, அமெரிக்க கண்டத்தை சேர்ந்த நாடாக இருந்தாலும் ஆசிய கண்டத்தில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளது. அதிலும் வங்கதேசம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின்போது இந்த நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. குறிப்பாக, இந்தியாவின் கேரள மாநிலத்தில் தடபுடலாக பேனர் வைத்து அர்ஜென்டினா அணிக்கு தங்களது ஆதரவை வழங்கி இருந்தனர் ரசிகர்கள். அதேபோல மேற்கு வங்க மாநில ரசிகர்களும் தங்களது ஆதரவை வழங்கி இருந்தனர்.

நீர்நிலைகள் தொடங்கி பல்வேறு இடங்களில் அர்ஜென்டினா மற்றும் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு பேனர் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்வீட்டில் கேரளாவுக்கும் நன்றி சொல்லி உள்ளது அர்ஜென்டினா.

“நன்றி வங்கதேசம். நன்றி கேரளா, இந்தியா, பாகிஸ்தான். உங்கள் ஆதரவு அற்புதமானது” என ட்வீட் செய்துள்ளது அர்ஜென்டினா அணி.

வங்கதேச ரசிகர்கள்
கொல்கத்தா ரசிகர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE