மெஸ்ஸி சகாப்தமும், எம்பாப்பே காலமும்..! - நெட்டிசன்கள் பார்வையில் உலகக் கோப்பை யுத்தக் களம்

By செய்திப்பிரிவு

ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். கோப்பையை வென்ற அர்ஜென்டினாவிற்கும், மெஸ்ஸிக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவற்றில் இருந்து சில...

PRABAKARAN K: ஃபார்வர்டுல, பந்த பாஸ் பண்றதுல எல்லாத்துலயும் சிறந்ததொரு கில்லியான கேம்ம கொடுத்திருக்கான்... #க்ரேட்_மெஸ்ஸி...

Hades: எத்தனை தடைகள், எவ்வளவு மட்டந்தட்டல்கள், நடக்கவே போறதில்ல, சாத்தியமே இல்லைன்னு டொர்னமென்ட் துவங்குனப்ப பேசுன எல்லா வாயவும் அடிச்சு உக்கார வெச்சிட்டான். தலைவன் வேற ரகம், என்ன ஆனாலும் ஜெயிச்சே ஆகணும்ன்னு சண்ட செய்ற ரகம். மெஸ்ஸி எனும் அரக்கன்...

Pradeep Kumar Swamiappan:

மனசெல்லாம் மெஸ்சி.....
அர்ஜென்டினாவின் அதிசியம் நீ;
அரங்கை, முழுக்க அதிர வைக்கும் அற்புதம் நீ;
கால்பந்தாட்டதின் கம்பன் நீ;
மைதானத்தில் நீ வடிக்கும்
கவிதையின் ரசிகன் நான்;
பந்தில் நீ ஆடும் பரதநாட்டியம் ,
பார் முழுக்க பரவசப்படுதுதய்யா ;
கைதட்டி காத்திருக்கிறோம்
உன் கையில் உலக கோப்பை வர;
வரலாறு காத்திருக்கிறது.

BilalAliyar: ஆட்டத்தின் முதல் பாதியிலேயே உலகமே அர்ஜென்டினா தான் என உறுதியாக நம்ப தொடங்கியது. இரண்டாம் பாதியிலும் முதல் அரைமணி நேரம் உப்பு சப்பில்லாமல் போனது. இதை அர்ஜென்டினா கோச் உணர்ந்ததால்தான் ஆட்டத்தின் முக்கியமான வீரர் De Maria-வை வெளியில் அழைத்து பெஞ்சில் அமர வைக்கிறார். ஏறக்குறைய அர்ஜென்டினா கோப்பை வெல்லப் போகிறது என்ற உற்சாகம் அர்ஜென்டினா நகர வீதிகளில் கொண்டாட்டமாக மாறியதை உலக தொலைக்காட்சிகள் படம் பிடிக்கின்றன. ஒட்டுமொத்தமா இந்தப் போட்டி அர்ஜென்டினாவின் ஆதிக்கத்தை மட்டுமே காட்டும் ஒரு போட்டியாக இருக்கப்போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன.

ஆட்டம் முடிய 11 நிமிடங்களே இருந்த அந்த 79-வது நிமிடம் உலக கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மறக்கவே இயலாத ஒரு அனுபவத்தையும், வரலாற்றின் நினைவுகளில் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படும் போட்டியாக மாறப்போகிறது என எவருமே, ஏன் பிரான்சின் கோச்சுமே கூட அறியவில்லை. என்னுடன் அமர்ந்து மேட்ச் பார்த்த அந்த அர்ஜென்டினாவின், மெஸ்ஸியின் தமிழ்நாட்டு காதலன் கூட (கால்பந்து உலகமே மெஸ்ஸியை காதலிப்பது வேறு விசயம்), அடேய் பாத்து விளையாடுங்கடா, ஃபவுல் வாங்கி பஞ்சாயத்த இழுத்துடாதீங்கடான்னு கவலைப்பட்ட போது, ஏற்கெனவே மேட்ச் முடிஞ்சுருச்சுங்க… ஏங்க டென்சனாகிறீங்கன்னு நானும் சொல்ல, எதிர்பாராத அந்த ஃபவுலை வாங்கியது அர்ஜென்டினா. ஃபிரான்ஸ் வீரரை தடுக்க முயன்றதால் கிடைத்த பொன்னான பெனால்டி கிக்கை Mbappe கோலாக மாற்றினார்.

அந்த நொடிக்கும், அட்டகாசமாக Mbappe போட்ட இரண்டாவது கோலுக்கும் இடையில் வெறும் 97 நொடிகளே இருந்தது தான், கால்பந்தை ஏன் கட்டிக் கொண்டு இந்த உலகம் பைத்தியமாக திரிகிறது என்பதற்கான விடை.

அப்போதிலிருந்து ஆட்டத்தை இரண்டு அணிகளும் ஒரு போராக மாற்றியது. பார்த்துக் கொண்டிருந்து எவனாலும் எதையும் சொல்ல முடியாத அளவிற்கு இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடின. கூடுதல் நிமிடத்தின் இரண்டாம் பாதியில் மந்திரக்காரன் மெஸ்ஸியின் அந்த கோலை கண்டவர்கள் பாக்கியசாலிகள். மெஸ்ஸி கோல் அடித்த சில நிமிடங்களில் வசியக்காரன் Mbappe மீண்டும் ஒரு கோலடித்து நெஞ்சுவலியை வரவைத்தான். பெனால்டி சூட் அவுட் வந்தது!

இறுதியில் பெனால்டி சூட் அவுட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினசின் அட்டகாசமான இரண்டு தடுப்பால் உக்கிரமான அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அழகான கோப்பையை மந்திக்காரன் தன் கைகளில் ஏந்தி தன் வாழ்நாள் கனவை தன் உலக காதலர்களுக்கு பரிசளித்தான்.

counter பெல்: அர்ஜென்டினா கப் அடிக்க முக்கிய காரணம் அவங்க கோல் கீப்பர்தான். 3-3 ன்னு இருக்கும் போது சரியா ஒரு கோல் வரவேண்டியதை தடுத்தான் அப்புறம் பெனால்டி ஷூட் அவுட் ல சொல்லவே வேணாம் சும்மா கலக்கிட்டான்

குதிரை: Football பத்தி அதிகம் தெரியாத என்னையும் இந்த மனுசன் ஜெயிச்சா போதும்ன்னு நிறைக்க வைக்குற அளவுக்கு inspiring ஆன ஒரு பயணம் இவருடையது. இன்னைக்கு அர்ஜென்டினா, மெஸ்ஸியோட பல வருச கனவு மட்டுமில்ல என்னோட ஆசையும் நிறைவேறியது!

Sunil: இன்னும் எத்தனை உலகக் கோப்பை தொடர்கள் வந்தாலும் பிரான்ஸ் - அர்ஜென்டினா; மெஸ்ஸி - எம்பாப்வே இடையிலான இந்த யுத்தம் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்...

P.S. Abdussalam: சோகத்தில் தவித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.. இறுதிப்போட்டி France vs Argentina என்று சொல்வதைவிட Mbappe vs Argentina என்றுதான் சொல்ல வேண்டும். அர்ஜென்டினா வென்று, கோப்பையைத் தூக்கி, வியர்வை சிந்தி, வாய் கொப்பளித்தாலும், மறுபக்கம் நிச்சயம் ஒரு போராளி இருந்தார். அந்த போராளியின் பெயர் Mbappe... வயது 23. கால்பந்து வரலாறு இவரால் எழுதப்படும்... 80 நிமிடம் வரை கதை முடிந்தது என்று முடிவு செய்த அணியை கூடுதல் நேரத்துக்கும் அங்கிருந்து பெனால்டி ஷூட் அவுட்டுக்கும் அழைத்துச் சென்றவர்... கால்பந்து உலகில் மெஸ்ஸி. ரொனால்டோவுக்கு பிறகு வரலாறாக மாறப் போகிறவர்...

Tamil Subramaniam: இனி மெஸ்ஸியின் சகாப்தம் முடிந்தது. அடுத்தது எம்பாப்பே-வின் காலம். ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் இவர்களின் வரிசையில் எம்பப்பேயின் பெயர் விளங்கி நிற்கும்.

GMJ: நம்ம டெண்டுல்கர் மாதிரி பல கோப்பைகள் வாங்கினாலும் உலகக் கோப்பை என்பது மெஸ்சிக்கு கனவாகவே இருந்தது. இந்த உலக கோப்பையுடன் ஓய்வு என்ற நிலையில் மெஸ்சிக்கு வில்லனாக வந்தார் ப்ரான்ஸ் வீரர் எம்பாவே இருந்தாலும் போராடி கடைசி நிமிடத்தில் கடைசி வினாடியில் உலக கோப்பை மெஸ்சி வசமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE