FIFA WC 2022 | நான் தொடர்ந்து விளையாடுவேன்... - அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022 சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் பேசிய அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி, இப்போதைக்கு ஓய்வில்லை என்றும் தொடர்ந்து சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

கத்தார் நாட்டில் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. இதில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த போட்டிதான் மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டி என்று கூறப்பட்டது.

ஆனால் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய மெஸ்ஸி, "இதை நம்பவே முடியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரியும் இறைவன் இந்தக் கோப்பையை எனக்கு அளிப்பார் என்று. இதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த நாள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாள். இந்த கனவை நான் நீண்ட நாள் கொண்டிருந்தேன். நான் எனது பயணத்தை ஒரு உலகக் கோப்பையுடன் நிறைவு செய்யவே ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அதை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்கிறேன். நான் இனியும் தேசிய அணிக்காக விளையடுவேன். உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அர்ஜென்டினா ஜெர்சியுடன் விளையாடவே நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக மெஸ்ஸி, "எனது கடைசி ஆட்டத்தை இறுதிப் போட்டியில் விளையாடி எனது உலகக் கோப்பை பயணத்தை முடிக்க முடிந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். அடுத்த கால்பந்து போட்டிக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் உள்ளன. அதில் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. அதனால் இந்தப் போட்டியில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முடிக்க நினைக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE