தோகா: பிஃபாவின் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த பிரபஞ்ச போட்டியில் சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி தோகாவின் லுசைல் நகரில் உள்ள லுசைல் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், அர்ஜெண்டினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே இரு முறை பட்டம் வென்றுள்ளன. பிரான்ஸ் 1998-ம் ஆண்டும், 2018-ம் ஆண்டும் வாகை சூடியிருந்தது. அதேவேளையில் அர்ஜெண்டினா 1978, 1986-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது. 3-வது முறையாக பட்டம் வெல்ல வேண்டும் என்ற இரு அணிகளின் தேடலுக்கு இன்று தீர்வு கிடைத்துவிடும்.
தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவால் தோற்கடிக்கப்பட்டபோது அர்ஜெண்டினா அணியானது தொடரின் வரலாற்றில் புள்ளியியல் ரீதியாக மிகப் பெரிய அதிர்ச்சியின் பக்கத்தில் இருந்தது. அதேவேளையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் துனிசியாவிடம் வீழ்ந்து சங்கடப்பட்டது. பின்னர் அர்ஜெண்டினா சிறப்பாக விளையாடி தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என வென்றது.
கால் இறுதி சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் முன்னதாக அர்ஜெண்டினா 2-0 என முன்னிலை வகித்த போதிலும் அதன் பின்னர் இரு கோல்களை வாங்கி ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட் வரை கொண்டுசென்று வென்றது. அரை இறுதியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில்தான் அர்ஜெண்டினா தனது வழக்கமான திறனை மீட்டெடுத்தது. பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
» FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்தது குரோஷியா
» அறிமுக டெஸ்ட்டில் ஜகீர் ஹசன் சதம்: போராடி மிரட்டும் வங்கதேசம் - இந்திய அணி சற்றே கலக்கம்!
பிரான்ஸ் அணி லீக் சுற்றில் முதல் இரண்டு ஆட்டங்களில் தொடரின் சிறந்த அணியாகத் தோற்றமளித்தது. கடைசி ஆட்டத்தில் துனிசியாவிடம் வீழ்ந்த போதிலும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்தை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து மீண்டது. கால் இறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினாலும் மொராக்கோவுக்கு எதிரான அரை இறுதியில் கடுமையாக போராடியே 2-0 என வெற்றி பெற முடிந்தது.
பிரான்ஸ், அர்ஜெண்டினா ஆகிய இரு அணிகளும் கத்தார் உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களும் தற்போது அந்த அணிகளுக்கு பெரிது இல்லை. 7-வதாக இன்று மோதும் இறுதிப் போட்டியே பெரிதினும் பெரிது. டீகோ மரடோனாவை போன்று அர்ஜெண்டினா தேசத்தின் இதயங்களில் நுழைந்திருக்கும் மெஸ்ஸி தனது 5-வது முயற்சியில் கோப்பையை கைப்பற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடத்தில் உள்ளது.
1986-ம் ஆண்டு தனதுநாட்டுக்கு இரண்டாவது பட்டத்தை மரடோனா வாங்கி கொடுத்த போது அணியை உணர்ச்சிப்பூர்வமாக கொண்டு செல்லவில்லை. ஆனால், 35 வயதான மெஸ்ஸி இம்முறை ஆடுகளத்தில் மாயாஜால தருணங்களை வழங்கினார், அதிலும் பெரும்பாலும் முக்கியமான கட்டங்களில் ரசிகர்களின் அன்பை பெற்றிருந்தார். மெஸ்ஸிக்கு இன்றைய போட்டி உலகக் கோப்பைகளில் 26-வது ஆட்டமாகும். இதன் மூலம் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
மெஸ்ஸி 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு எதிராக மெஸ்ஸி களமிறங்கி இருந்தார். அந்த ஆட்டத்தில் ஜெர்மனி, மெஸ்ஸியை எல்லா வகையிலும் முடக்கி வைத்திருந்தது. ஆட்டத்தின் 2-வது பாதியில்மட்டுமே மெஸ்ஸிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. அதையும் மெஸ்ஸி கோல்கம்பத்துக்கு வெளியே அடித்து ஏமாற்றம் கொடுத்தார். இம்முறை சர்வதேச கால்பந்து பயணத்தில் தனது கடைசி ஆட்டத்தை சந்திக்கிறார் மெஸ்ஸி. எப்படியும் மெஸ்ஸியை முடக்க பிரான்ஸ் அணி வியூகங்கள் வகுக்கும். இதை மெஸ்ஸி எவ்வாறு கையாள்கிறார் என்பதை பொறுத்தே அர்ஜெண்டினாவின் வெற்றி அமையும். இதேபோன்று ஜூலியன் அல்வரெஸுக்கும் பிரான்ஸ் வலை விரிக்கக்கூடும்.
பிரான்ஸ் அணியானது கடந்த 7 உலகக் கோப்பையில் 4-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் காண்கிறது. முன்களத்தில் கிளியான் பாப்பே, ஆலிவர் ஜிரவுடு, கிரீஸ்மான், உஸ்மான் டெம்பளே, கோலோ முவானி ஆகியோர் வலுவாக உள்ளனர். டிபன்ஸில் தியோ ஹெர்னாண்டஸ், இப்ராஹிமா கோனேட் கடும் சவால் அளிக்கக்கூடியவர்கள். நாக் அவுட் சுற்றில் எதிரணிகள் பிரான்ஸ் அணிக்கு எதிராக ஓபன் பிளே கோல் அடிக்க முடியாமல் போனதற்கு வலுவான டிபன்டர்களே காரணம்.
இதில் நட்சத்திர வீரரான பாப்பே, முன்னாள் ஜாம்பவான்களான மைக்கேல் பிளாட்னி, ஜிடேன், தியரி ஹென்றி ஆகியோருடன் போற்றப்பட்டு வருகிறார். கத்தார் உலகக் கோப்பையில் 5 கோல்கள் அடித்துள்ள பாப்பே, இரு கோல்கள் அடிக்க உதவி செய்துள்ளார். ரஷ்ய உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி பட்டம் வென்றதில் பாப்பேவின் பங்கு அளப்பரியது. களத்தில் மின்னல் வேகத்தில் செயல்படும் திறன் கொண்ட பாப்பே, அர்ஜெண்டினாவின் டிபன்டர்களுக்கு கடும் சவால் தரக்கூடும்.
பாப்பேவும், ஆலிவர் ஜிரவுடும் கத்தார் உலகக்கோப்பையில் கூட்டாக 9 கோல்கள் அடித்துள்ளனர். அதேவேளையில் 74 போட்டிகளில் விளையாடி உள்ள கிரீஸ்மான் டிபன்டர்கள் பின்தொடர விரும்பாத பகுதிகளுக்குள் நுழைந்து சிக்கலான மற்றும் துல்லியமான பாஸ்களை கொடுக்கக்கூடியவராக திகழ்கிறார். ஒட்டு மொத்தத்தில் பிரான்ஸ் ஒரு கடினமான போட்டி அளிக்கக்கூடிய அணியாக திகழ்கிறது. சிறந்த முறையில் விளையாடாத போதும் கூட ஏராளமான அனுபவம் மற்றும் வெற்றிகளை ஈர்ப்பதற்கான தரம் அந்த அணியிடம் உள்ளது.
இதற்கு உதாரணம் கத்தார் உலகக் கோப்பையில் அந்த அணி விளையாடி வரும் விதம்தான். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பால் போக்பா, கோலோ கண்டே, பிரஸ்னெல் கிம்பெம்பே, கரீம் பென்சீமா போன்ற முன்னணி வீரர்களை காயம் காரணமாக பிரான்ஸ் அணி இழந்தது. டிபன்டர்களான தயோட் உபமேகானோ, இப்ராஹிமா கோனேட், ரபேல்
வாரன், நடுகள வீரர் அட்ரியன் ராபியோட் மற்றும் முன்கள வீரர் கிங்ஸ்லி கோமன் ஆகியோருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இருப்பினும் இதில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ளனர். கோனேட், கோமன், வாரன் ஆகியோர் மட்டுமே பயிற்சியில் ஈடுபடவில்லை. ராபியோட், உபமேகானோ ஆகியோர் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடாத நிலையில் சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களது வருகை அணியை மேலும் வலுவாக்கும்.
பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் பிரான்ஸூம், 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மகுடம் சூடும் முனைப்பில் அர்ஜெண்டினாவும் களமிறங்குகின்றன. இந்த போட்டி பிரபஞ்சத்தில் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதை மயக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.
பரிசுத் தொகை எவ்வளவு?: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடி வழங்கப்படும்.
நாயகனாக உருவெடுப்பாரா?: பிரான்ஸின் கிளியான் பாப்பே கிளப் மட்டத்தில் பெரிய அளவில் பட்டங்களை வென்று குவிக்கவில்லை. எனினும் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 19 வயதிலேயே தேசிய அணிக்காக பட்டம் வென்று கொடுத்தார். தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக பிரான்ஸ் அணி மகுடம் சூடினால் பிரேசில் ஜாம்பவான் பீலேவுடன் ஒப்பிடப்படுவார். மேலும் 15 வருடம் கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறகு தற்கால கால்பந்து உலகின் புதிய நட்சத்திரமாகவும் மிளிருவார் பாப்பே.
ஒற்றுமை…: பிரான்ஸ் அணியானது 1998 மற்றும் 2018-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜெண்டினா அணி 1978 மற்றும் 1986-ல் வாகை சூடியது. இரு நாடுகளுமே சொந்த மண்ணில்தான் தங்களது முதல் சாம்பியன் பட்டத்தை அடைந்திருந்தன.
தக்கவைக்குமா??: பிரான்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 1962-ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையை படைக்கும். இந்த வகையில் கடைசியாக பிரேசில் அணியானது 1958 மற்றும் 1962-ம் ஆண்டில் தொடர்ச்சியாக பட்டம் வென்றிருந்தது.
> உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிகபட்சமாக 2002-ம் ஆண்டு பிரேசில் ஸ்டிரைக்கர் ரொனால்டோ 8 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். அவரை தவிர கோல்டன் பூட் வென்ற எந்த வீரருமே 6 கோல்களுக்கு மேல் அடித்தது இல்லை.
> அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. இதுவரை பிரேசில் 5 முறையும், ஜெர்மனி மற்றும் இத்தாலி அணிகள் தலா 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இந்த பட்டியலில் கத்தாரில் இன்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது 4-வது இடத்தில் இணையும்.
> உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் 4-வது முறையாக மோத உள்ளன. 1930-ம் ஆண்டு தொடரில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 1978-ம் ஆண்டு தொடரில் 2-1 என்ற கோல் கணக்கிலும் பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விகளுக்கு 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரான்ஸ் பதிலடி கொடுத்தது. நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வென்றிருந்தது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago