சென்னை டெஸ்ட்: 4 விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது; இங்கிலாந்து உறுதியான ஆட்டம்

By இரா.முத்துக்குமார்

சென்னை டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 284 ரன்கள் எடுத்துள்ளது. மொயின் அலி அபாரமான சதமெடுத்து 120 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் புவனேஷ் குமாருக்குப் பதிலாக இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டார், ஆனால் கடந்த போட்டியில் சதமெடுத்து, 2-வத் இன்னிங்சில் ஜோ ரூட்டின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தி சரிவுக்கும் இந்திய வெற்றிக்கும் வித்திட்ட ஜெயந்த் யாதவ்வுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டதற்குக் காரணம் காயம் என்று கூறப்பட்டது.

மீண்டும் டாஸ் வென்ற அலஸ்டர் குக் மீண்டும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார், உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தே அருமையான இன்ஸ்விங்கிங் யார்க்கர். சரியான நேரத்தில் குக் மட்டையை இறக்கினாலும் முன் விளிம்பில் பட்டு 2 ரன்களுக்குச் சென்றது, இது குக்கின் 11,000-வது டெஸ்ட் ரன்களானது. குக், ஜெனிங்சை, யாதவ், இசாந்த் சர்மா தங்களது துல்லியமான வீச்சினால் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். 16 பந்துகளில் 1 ரன் எடுத்த அறிமுக டெஸ்ட் சதநாயகன் ஜெனிங்ஸ் இசாந்த் சர்மாவின் டிரைவ் அல்லாத பந்தை டிரைவ் இருப்பதாக நினைத்து ஆடி எட்ஜ் செய்து படேலிடம் கேட்ச் கொடுத்தார்.

அலஸ்டர் குக்கை தொடர்ந்து சிரமப்படுத்தும் ஜடேஜாவை விராட் கோலி 9-வது ஓவரிலேயே கொண்டு வந்தார். முதல் பந்தே பலமான எல்.பி.முறையீடு. ரிவியூ செய்ய கோலி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார், பந்தும் ஸ்டம்ப்களிலிருந்து விலகிச்செல்லும் பந்தே. ஆனால் ஜடேஜா தன் 3-வது ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வழக்கத்தை விட சற்றே மெதுவாக வீசினார், குக் சந்தேகமாக ஆடினார் கோலி ஸ்லிப்பில் பிடித்துப் போட குக் 10 ரன்களில் மீண்டும் ஜடேஜாவிடம் வீழ்ந்தார்.

இன்றைய நாயகர்கள் ரூட்-மொயின் அலி:

21/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், மொயின் அலி ஜோடி 42 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 145 ரன்களைச் சேர்த்து நிலை நிறுத்தி இங்கிலாந்தை சரியான பாதைக்கு திருப்பினர்.

ஜோ ரூட் வழக்கம் போல் அனாயசமாக ஆடி இந்தியாவுக்கு எதிராக 11 டெஸ்ட்களில் 11-வது 50+ ஸ்கோரை எட்டினார். மொயின் அலி தொடக்கத்தில் அஸ்வின் பந்தில் தடவு தடவென்று தடவ ஜோ ரூட் அருமையாக ஆடினார், ஸ்வீப் ஷாட்களுக்கு அவர் தேர்வு செய்த பந்துகள் சரியானவை. அதுவும் அஸ்வினை ஒருமுறை ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே செல்லும் பந்தை பைன் லெக்கில் பெடல் ஸ்வீப் செய்தது அவரது தன்னம்பிக்கையைக் காட்டியது. ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் என்று அவர் 5 பவுண்டரிகளுடன் விரைவில் 29 ரன்களை எடுத்தார். உமேஷ் யாதவ் யார்க்கரை தேர்ட் மேனில் அடித்ததும், மிட் ஆன் முன்னால் இருக்க அஸ்வினை மேலேறி வந்து தூக்கி அடித்ததும் ரூட் வேறொரு ஃபார்மில் இருப்பதைக் காட்டியது.

144 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் தேநீர் இடைவேளைக்கு சுமார் அரைமணி முன்னால் ஜடேஜாவை ஸ்வீப் செய்ய முயல மெலிதான எட்ஜ் எடுத்தது, நடுவர் நாட் அவுட் என்றார், கோலி ரிவியூ செய்தார், எட்ஜ் பிடிபட்டது.

மொயின் அலி உணவு இடைவேளையின் போது தடுமாறிய 44 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ரன் எடுக்கும் முன்னரே ஜடேஜா பந்தில் கே.எல்.ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதிலிருந்து மொயின் தப்பினார், பிறகு ஜடேஜா, மிஸ்ரா ஆகியோரிடம் நடுவர் தீர்ப்பை மீறி ரிவியூவில் பிழைத்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் நாள் சென்னைப் பிட்சில் சுலபமாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் ஸ்வீப் ஷாட்டை அருமையாகப் பயன்படுத்தினார் மொயின் அலி. மேத்யூ ஹெய்டன் இப்படித்தான் இந்தியாவைக் காய்ச்சினார், ஒருமுறை டீன் ஜோன்ஸும் இப்படித்தான் முதல் நாள் சென்னை பிட்சில் ரன்களைக் குவித்தனர். அமித் மிஸ்ரா பந்துகளில் ஒன்றுமேயில்லாததால் அவரை மேலேறி வந்து ஸ்பின்னாகும் திசைக்கு எதிர்திசையிலும் விளாசினார் மொயின் அலி. 111 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட இவர் பிறகு 203 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதம் எடுத்து 120 ரன்களுடன் நாட் அவுட்டாக உள்ளார்.

இவரும் ஜானி பேர்ஸ்டோவும் (49) இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 86 ரன்களை சேர்த்தனர், ஜானி பேர்ஸ்டோ ஆக்ரோஷமாக ஆடினார், அஸ்வினை 2 சிக்சர்களையும் ஜடேஜாவை ஒரு சிக்சரும் அடித்து அவர் 3 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்து அவசரப்பட்டு ஜடேஜா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், இவர் இன்று முழுதும் நின்றிருந்தால் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்திருக்கும்.

தற்போது மொயின் அலி 120 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்