அறிமுக டெஸ்ட்டில் ஜகீர் ஹசன் சதம்: போராடி மிரட்டும் வங்கதேசம் - இந்திய அணி சற்றே கலக்கம்!

By ஆர்.முத்துக்குமார்

சட்டோகிராமில் நடைபெறும் வங்கதேச - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று வங்கதேசம் தன் போராட்டக் குணத்தினால் மிரட்டலாக ஆடியது. அந்த அணியின் தொடக்க அறிமுக வீரர் ஜகீர் ஹசன் சதம் அடித்து சாதனை புரிய, வங்கதேசம் இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் 241 ரன்கள் வெற்றிக்குத் தேவை. இந்திய வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், இன்றைய ஆட்ட முடிவில் ஷாகிப் அல் ஹசன் 40 ரன்களுடனும் மெஹதி ஹசன் 9 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இன்று காலை 42/0 என்று தொடங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹுசைன் ஷாண்ட்டோ (67), முதல் டெஸ்ட்டை ஆடிவரும் ஜகீர் ஹசன் (100) இணைந்து முதல் விக்கெட்டுக்காக கடினமாகப் போராடி 124 ரன்களைச் சேர்த்தனர்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் கூறிவிட வேண்டும் ஆடுகளம் ‘பஞ்சுமிட்டாய்’ போல் ஆகிவிட்டது, பஞ்சு மிட்டாய் பிட்சில் பந்தை பிட்ச் செய்தால் என்ன ஆகும்? ஒன்றுமே ஆகாது. அதுதான் நடந்தது. ஆனால், அதற்காக அறிமுக டெஸ்ட்டில் ஆடும் ஜகீர் ஹசனின் சதத்தை குறை கூற முடியாது, இந்திய பவுலர்கள் அளித்த அனைத்து நெருக்கடிகளையும் முறியடித்து அவர் அறிமுக டெஸ்ட்டில் சதம் எடுத்த வங்கதேசத்தின் 4-வது அறிமுக வீரர் ஆனார் ஜகீர் ஹசன்.

முதல் விக்கெட் பிரேக்கைக் கொடுத்தவர் உமேஷ் யாதவ். நஜ்முல் ஹுசைன் ஷாண்ட்டோவை எட்ஜ் செய்ய வைத்தார் உமேஷ் யாதவ். அதுவும் இந்தக் கேட்ச் கோலியிடம் சென்றது அவர் கோட்டை விட்டார், அவர் நழுவ விட்டதை அலர்ட்டாக இருந்த ரிஷப் பண்ட் பிடித்தார், இந்தியாவுக்கு முதல் விக்கெட் மிகவும் கஷ்டப்பட்ட பிறகே கிடைத்தது. ஜகீர் ஹசன் அருமையான சில ஷாட்களை ஆடினார், சுழற்பந்துகளுக்கு நல்ல டெக்னிக்கைக் கையாண்டார். தேநீர் இடைவேளையின் போது 195 பந்துகளில் 82 நாட் அவுட் என்று இருந்தார். பிறகு அபார சதத்தை 224 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் எடுத்து அஸ்வினின் லூப் பந்தில் மட்டையின் உள் விளிம்பில் பட்டு கோலியின் டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

ஒன் டவுன் பேட்டர் யாசிர் அலி 5 ரன்கள் எடுத்து அக்சர் படேலின் பந்து ஒன்று அருமையாகத் திரும்ப பவுல்டு ஆனார். யாசிர் மிடில் ஸ்டம்பில் தடுத்தாட முயன்றார் பந்து திரும்பும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. உமேஷ் யாதவ் அருமையாக வீசினார் ஜகீர் ஹசனையும், லிட்டன் தாஸையும் ஆட்டிப்படைத்தார். லிட்டன் தாஸ் 19 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் போட்ட பிரஷர் தாங்க முடியாமல் தூக்கி அடிக்கப் போய் மிட் ஆனில் உமேஷ் யாதவ் கேட்ச் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலாக ஆடி வந்தார். ஆனால் அக்சர் படேல் ஒரு பந்தை ஆஃப் அண்ட் மிடில் ஒரு பந்தை பிட்ச் செய்து லேசாக திரும்பியது.

பின்னால் சென்று ஆடி தவறு செய்தார் முஷ்பிகுர் தவறான லைனில் ஆடினார் பந்து மட்டையைக் கடந்து சென்று பவுல்டு ஆனது. அதே ஓவரின் கடைசி விக்கெட் கீப்பர் பந்தில் நுருல் ஹசனும் ட்ரைவ் ஆடப்போய் பீட்டன் ஆனார். பந்து மட்டையைக் கடந்து செல்ல ரிஷப் பண்ட் அதிவேக ஸ்டம்பிங்கைச் செய்து அவரை வீழ்த்தினார்.

238/6 என்ற நிலையிலிருந்து ஷாகிப் அல் ஹசன் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தும் மெஹதி ஹசன் 9 ரன்கள் எடுத்தும் ஸ்கோரை 272 ரன்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தியத் தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, உமேஷ், அஸ்வின், குல்தீப் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். நாளை கடைசி நாள். வங்கதேச வெற்றிக்குத் தேவை இன்னும் 241 ரன்கள், இந்திய வெற்றிக்குத் தேவை இன்னும் 4 விக்கெட்டுகள்., இந்த ஜோடியை உடைத்து விட்டால் சுலபம்தான் ஆனால் எதுவும் சொல்ல முடியாது, பிட்ச் பஞ்சு மிட்டாய் போல் ஆகிவிட்டதால் கொஞ்சம் வங்கதேசம் மிரட்டவே செய்யும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE