அர்ஜெண்டினா கால்பந்து அணியின்நாயகன் லயோனல் மெஸ்ஸி தனது சர்வதேச கால்பந்து பயணத்தின் கடைசி அத்தியாயத்தை மணிமகுடம் சூடி முடிக்க காத்திருக்கிறார். மறைந்த ஜாம்பவான் டீகோ மரடோனாவுடன் ஒப்பிடப்பட்ட லயோனல் மெஸ்ஸி அவரை போன்றே உலகக் கோப்பையுடன் மீண்டும் பியூனஸ் அயர்ஸுக்கு செல்ல வேண்டும் என்றபெரும் அழுத்தத்துடனே கத்தாரில் கால் வைத்தார். அதே நேரத்தில் அவரது சமகால நட்சத்திர வீரர்களான பிரேசிலின் நெய்மர்,போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இறுதிக்கட்ட தடைகளை தாண்ட முடியாமல் தாயகம் திரும்பிவிட்டனர்.
அர்ஜெண்டினாவின் தொடக்க ஆட்டத்தில் இருந்து குரோஷியாவை எதிர்த்து அரையிறுதியில் வெற்றி பெற்றது வரை தொடர் முழுவதும்முழுமையான நட்சத்திரமாக மின்னினார் 35 வயதான மெஸ்ஸி. இறுதிப் போட்டிக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்ற வழியில் 5 கோல்கள், 3 கோல்கள் அடிக்க உதவி என புள்ளி விவரங்கள் மெஸ்ஸியின் திறன்களை பேசுகின்றன.
இந்த கடினமான பயணத்தில் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக உலகக் கோப்பைகளில் அதிக கோல்கள் அடித்த மரடோனா (8 கோல்கள்), கேப்ரியல் பாடிஸ்டுடா (10) ஆகியோரது சாதனைகளை முறியடித்தார். இதுவரை 5 உலகக் கோப்பைகளில் 25 ஆட்டங்களில்விளையாடி உள்ள மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி களமிறங்கும் போது ஜெர்மனியின் லோதர் மத்தேயஸின் சாதனையை முறியடிப்பார். லோதர் மத்தேயஸ், உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் (25) பங்கேற்ற வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
திகைப்பூட்டும் தரவுகளுக்கு அப்பால், மெஸ்ஸியின் மயக்க வைக்கும் ஆட்டமானது உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்திலும் திளைக்கவைக்கிறது. 35 வயதிலும் களத்தில் மின்னல் வேகத்தில் இயங்குவது, பந்துக்கும் கால்களுக்கும் இடையிலான பிணைப்பு, படைப்பாற்றல் திறனுடன் கோல்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது என மெஸ்ஸி, கால்பந்து களத்தில் காட்டும் மந்திரங்கள் ரசிகர்களை கட்டிப்போடுகின்றன.
» 5 ஆண்டுகளில் களம் கண்டது வெறும் 8 டெஸ்ட்கள் - புறக்கணிப்புகளை மீறி நிரூபிக்கும் குல்தீப் யாதவ்!
அர்ப்பணிப்பு, போட்டி மனப்பான்மை, குழுவாக இணைந்து செயல்படுதல் ஆகியவையே மெஸ்ஸியை தனித்துவப்படுத்துகிறது. சவுதி அரேபியாவுக்கு எதிராக முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்த போதிலும் அதன் பின்னர் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அணியை மீட்டார் மந்திரக்கார மெஸ்ஸி. இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்த கோல்களில் சிறப்பானது என்று பார்த்தால் அது மெக்சிக்கோவுக்கு எதிரானதுதான்.
அந்த ஆட்டத்தில் மெஸ்ஸி, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து ஏறக்குறைய தரையோடு தரையாக கோல் வலைக்குள் பந்தை திணித்திருந்தார். கால் இறுதி சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக நெருக்கமான சூழ்நிலையில் நஹுவேல் மோலினாவுக்கு பந்தை துல்லியமாக பாஸ் செய்தது கால்பந்து விமர்சகர்களையே வியக்க வைத்தது.
இந்த ஆட்டத்தில்தான் மெஸ்ஸி, அர்ஜெண்டினா ரசிகர்களுடன் கத்தார் உலகக் கோப்பையில் தனக்கு உள்ள அன்பை உறுதிப்படுத்தினார். 1986-ல் டீகோ மரடோனா உலகக் கோப்பையை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்தது போல், மெஸ்ஸி செயல்படவில்லை என்று கடந்த காலங்களில் மெஸ்ஸி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.
நெதர்லாந்துக்கு எதிராக பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்ததும் மெஸ்ஸி வழக்கத்துக்கு மாறாக ரசிகர்களை நோக்கி சிலபாவனைகளை செய்தார். மேலும் போட்டி முடிவடைந்ததும் நெதர்லாந்து ஸ்டிரைக்கரை பார்த்து சில கடின வார்த்தைகளையும்பிரயோகித்தார் மெஸ்ஸி. இதை சிலர் விமர்சித்தாலும் அர்ஜெண்டினாவின்பெருமளவிலான ரசிகர்கள், மரடோனாவின் சாயல்மெஸ்ஸியிடம் வெளிப்பட்டதாக சிலாகித்துக் கொண்டனர்.
இத்தகைய பாராட்டுக்கள் இருந்தபோதிலும், மரடோனாவுடனான உண்மையான, அழியாத சமத்துவம் என்பது பூமிப்பந்தில் மிகப்பெரிய தொடரான உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டியில் நாளை பிரான்ஸ் அணியை தோற்கடிப்பதில்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
அர்ஜெண்டினா குடிமகனாக இல்லாதவர்கள் கூட நீண்ட காலமாக அர்ஜெண்டினாவை தங்களது அணியாகவே பாவித்துஆதரித்து வருகின்றனர். அந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸி உலகக் கோப்பையை வெல்வார் என்று நம்புகிறார்கள். இது நிகழ்ந்தால்தான் அவரது கால்பந்து வாழ்க்கை பயணம் முழுமை பெறும்.
மெஸ்ஸி தனது 13 வயதில் அர்ஜெண்டினாவை விட்டு வெளியேறி ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா இளைஞர் அணியில் இணைந்தார். பாலகனாக இருந்த போதிலும்ஜூனியர் பிரிவில் மெஸ்ஸி தனது அசாத்தியமான ஆட்டத்தால் கவர்ந்தார். இதனால் 16 வயதிலேயே சீனியர் அணியில் போர்டோ அணிக்காக 2003-ல் களமிறங்கினார். அங்கிருந்து தொடங்கி பார்சிலோனா அணிக்காக 778 ஆட்டங்களில் விளையாடி 672 கோல்களை வேட்டையாடி உள்ளார் மெஸ்ஸி.
2011-12ம் ஆண்டு சீசனில் லாலிகா தொடரில் மெஸ்ஸி 50 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி 35 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதில் 10 லாலிகா தொடர் கோப்பைகளும், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளும் அடங்கும். கடந்த ஆண்டு பார்சிலோனா அணியுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியில் இணைந்தார்.
மெஸ்ஸி தனது கால்பந்து பயணத்தில் 7 முறை பாலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார். 6 முறை பிஃபாவின் சிறந்த வீரராக தேர்வாகி உள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக 171 ஆட்டங்களில் விளையாடி 96 கோல்கள் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம், கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில்இரு முறை ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றால் மெஸ்ஸி மனம் தளர்ந்தார். அந்நாட்டு ரசிகர்களும் கிளப் அணிக்குதான் மெஸ்ஸி சாதனைகள் படைக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்க தவறவில்லை.
இந்த விமர்சனங்களுக்கு கடந்த முறை கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வென்று முற்றுப்புள்ளி வைத்திருந்தார் மெஸ்ஸி. மேலும் அர்ஜெண்டினாவின் 28 வருட கோப்பை வறட்சிக்கும் முடிவு கட்டியிருந்தார். இதன் பின்னர் தான் மெஸ்ஸி மீதான அந்நாட்டு ரசிகர்களின் எண்ணங்கள் தலை கீழாகமாறத் தொடங்கின. அவரை அளவுக்கு அதிகமாக நேசித்தனர். தற்போது உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு அர்ஜெண்டினாவை மெஸ்ஸி அழைத்துச் சென்றது ரசிகர்களுடனான பிணைப்பை பேரன்பாக்கி உள்ளது. கோப்பையை வெல்வதற்கு முன்பே மெஸ்ஸி, தன்நாட்டு மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.
இதை குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் முடிவடைந்ததும் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த நிருபர் சோபியா மார்டினெஸ் மேடியோஸ் மிகச்சரியாக பிரதிபலிக்கச் செய்தார். அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மெஸ்ஸின் கண்களில் நீர் திவலையை கொண்டுவந்தது. சோபியா, மெஸ்ஸியிடம் கூறும்போது, “இறுதிப் போட்டி வரப்போகிறது, நிச்சயமாக நாம் வெற்றிபெறவே விரும்புகிறோம், ஆனால், அதன் முடிவு எதுவாக இருந்தாலும், உங்களிடமிருந்து யாராலும் எடுக்க முடியாத ஒன்று இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஒவ்வொரு அர்ஜென்டினா பிரஜையின் இதயத்திலும் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள். உண்மையாகச் சொன்னால், உங்கள் பெயர்பொறித்த சட்டையை வைத்திராத குழந்தையே இல்லை. எங்கள் முழு வாழ்க்கையையும் நீங்கள் குறிக்கிறீர்கள். அதைஉங்கள் இதயத்தில் சுமந்து கொள்ளுங்கள், ஏனெனில் இது உலகக் கோப்பையை விட முக்கியமானது, நீங்கள் ஏற்கெனவே அதை வென்றுள்ளீர்கள். நன்றி கேப்டன்" எனக் கூறினார்.
இதற்கு மெஸ்ஸி பதிலளித்து கூறும்போது, “என்னால் இந்த விஷயங்களை உணர முடிகிறது. மக்களின் அளவிடமுடியாத அன்புக்காக, நாங்கள் எங்களின் மொத்த நேரத்தையும் கொடுத்து வாழ்கிறோம். இந்த உலகக்கோப்பையில் மற்றஎந்த அணிகளை விடவும் நாங்களே கோப்பையை வெல்ல அதிகம் விரும்புகிறோம். மக்கள் வெற்றி அல்லது தோல்விக்கு மட்டுமே மதிப்பு கொடுக்காமல், உழைப்புக்கும் அதிக மதிப்பு தருவதை உணர்கிறேன். நிச்சயம் இறுதிப்போட்டியில் எங்களுடைய சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிப்போம்” என்றார்.
மெஸ்ஸியின் மகுடத்தில் அலங்கரிக்காத வைரம் என்றால், அது உலக சாம்பியன் பட்டம் மட்டுமே. அர்ஜெண்டினாவின் ஆதர்சநாயகன் மரடோனாவை போன்றே மெஸ்ஸியும் உலகக் கோப்பையை கைகளில் ஏந்துவதற்கு அருகில் நிற்கிறார். பார்க்கலாம் இறுதிப் போட்டியில் மந்திரக்காரனின் தந்திரங்கள் எடுபடுமா? என்று…
மக்களின் அளவிட முடியாத அன்புக்காக, நாங்கள் எங்களின் மொத்த நேரத்தையும் கொடுத்து வாழ்கிறோம். மக்கள் வெற்றி அல்லது தோல்விக்கு மட்டுமே மதிப்பு கொடுக்காமல், உழைப்புக்கும் அதிக மதிப்பு தருவதை உணர்கிறேன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago