2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சலாவில் அறிமுகமான இந்திய இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 2022-ல் இப்போது வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராமில் தன் 8-வது டெஸ்ட் போட்டியிலேயே ஆடுகிறார். அதுவும் வந்தவுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணிக்கு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்றால், அவரை இந்த 5 ஆண்டுகள் எப்படி நம் அணி நிர்வாகம் கையாண்டுள்ளது, ஒதுக்கி வைத்து அவரை வெறுப்பேற்றியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் 16 ஓவர்கள் 6 மெய்டன் 40 ரன்களுக்கு 5 விக்கெட் என்று குல்தீப் யாதவ் அசத்த, வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தம் 513 ரன்களை வங்கதேசத்திற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
தனது 8-வது டெஸ்ட்டை ஆடும் குல்தீப் 3-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். இந்த 8 டெஸ்ட் போட்டிகளில் 3 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 2 முறை 4 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றியுள்ளார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் இந்தியா வெற்றி பெற்றபோது 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார் என்றால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில் முன்னமேயே இங்கிலாந்து விக்கெட்டுகளை அஸ்வின், அக்சர் படேல், இஷாந்த் சர்மா போன்றோர் எடுத்திருந்தனர்.
» IND vs BAN முதல் டெஸ்ட் | விராட் கோலி அந்தப் பந்தை ஏன் அப்படி ஆடினார்?
» “என் மகனுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்” - சச்சின் உருக்கமான வேண்டுகோள்
இத்தனை வெரைட்டி உள்ள ஒரு பவுலரான குல்தீப் யாதவ்வை அனில் கும்ப்ளே தன் பயிற்சிக் காலக்கட்டத்தில் அவரது திறமையைக் கண்டுப்பிடித்து உள்ளே கொண்டு வந்தார். ஆனால், ஏனோ அதன் பிறகு கோலி - ரவிசாஸ்திரி கூட்டணி அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவரது வெள்ளைப் பந்து சொதப்பல்களுக்காக டெஸ்ட்டிலும் தேர்வு செய்யாமல் புறக்கணித்து வந்தனர். டெஸ்ட்டில் இவர் தனிச்சிறப்பான பவுலர் என்பது ஒவ்வொரு முறையும் அவரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2-வது ஆஸ்திரேலியா தொடருக்கும் இவரை அழைத்துக் கொண்டு செல்லவில்லை. ஒவ்வொரு 6 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார், வெறும் மெய்டன்களாக வீசி விட்டு விக்கெட் எடுக்கத் திணறுபவர் அல்ல குல்தீப் யாதவ். 5 ஆண்டுகளில் வெறும் 8 டெஸ்ட் போட்டிகள்தானா? என்று குல்தீப் யாதவ்வை யாராவது கேட்டால் அவர் என்ன சொல்ல முடியும்? எல்லாம் செலக்ஷன் திருவிளையாடல்கள்தான் காரணம் என்றா அவரால் சொல்ல முடியும்?
இங்கிலாந்து தொடரில் அந்த விடுபட்டு போன 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்தை சேஸ் செய்ய விட்டு வெற்றி பெறச் செய்தோமே அந்தப் போட்டியில், அந்தப் பிட்சிலும் குல்தீப் யாதவ் இருந்திருந்தால் இங்கிலாந்து நிச்சயம் தோற்றிருக்கும் நாமும் தொடரை 3-2 என்று கைப்பற்றியிருப்போம். அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், இல்லையென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு தந்தார்களே தவிர குல்தீப் யாதவ்வுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. உண்மையில் இது பரிதாபகரமான ஒரு விஷயமே. கேட்டால் இவரிடம் பேட்டிங் இல்லை என்பார்கள், இதைப்போன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.
பவுலர் பவுலிங் செய்ய வேண்டும், பேட்டிங்கில் 15-20 ரன்கள் வரை பங்களிப்பு செய்யலாம் அவ்வளவே, கோலி, ரோஹித் சர்மா சொதப்பல்களுக்கெல்லாம் இவர் ஈடு கட்ட முடியுமா என்ன? அதனால்தான் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சில வேளைகளில் ஷர்துல் தாக்கூர் என்று தேர்வு செய்கின்றனர். ஆனால் வங்கதேசத்திற்கு எதிராக குல்தீப் யாதவ் ஒரு முக்கியமான 40 ரன்களை எடுத்ததற்கு என்ன கூறப்போகிறார்கள்?
குல்தீப் யாதவ் ரக பந்து வீச்சு எல்லா பிட்ச்களிலும் விக்கெட்டுகள் வீழ்த்தும் விரல் ஜாலமல்ல மணிக்கட்டு ஜாலம் கொண்டது. நேற்றும் இன்றும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு இடது கை ஷேன் வார்ன் போல் பந்தை பயங்கரமாகத் திருப்பினார். காரணம் அவர் ஆக்ஷனில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளார். நேராக ஓடி வருகிறார். பின் கால் பின் கிரீசுக்கு இணையாக உள்ளது. காதை ஒட்டி கையை கொண்டு வந்து வீசுகிறார், எல்லாவற்றுக்கும் மேலாக முன்னை விட ஆக்ஷனில் ஒரு தீவிரம் தெரிகிறது. பந்து வீசும் கை இன்னும் கொஞ்சம் ஸ்பீடாக சுழல்கிறது இதோடு துல்லியத்தையும் கூட்டியுள்ளார் குல்தீப்.
பந்து காற்றில் வரும்போது இந்த இடத்தில்தான் பிட்ச் ஆகும் என்று பேட்டர்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது ஆனால் பிட்ச் ஆவது வேறு இடம், இதற்குப் பெயர்தான் ட்ரிஃப்ட் ஆகும். இதை பிரமாதமாகப் பயன்படுத்துகிறார் குல்தீப். உதாரணமாக பந்து பிளைட்டில் இருக்கும் போது ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகும் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதனால் பேட்டர்கள் அதற்குத் தயாராக காலை நகர்த்துவார்கள் ஆனால் பந்து மிடில் ஸ்டம்பிலோ, லெக் ஸ்டம்பிலோ பிட்ச் ஆகும், இதனால் எல்பி, பவுல்டு வாய்ப்புகள் அதிகம். இதோடு பந்தை இப்போது நன்றாகத் திருப்புகிறார்.
இடது கை லெக் ஸ்பின், இடது கை கூக்ளி, டாப் ஸ்பின் என்று ஏகப்பட்ட வெரைட்டிகளை கைவசம் வைத்திருக்கிறார். எனவே அக்சர் படேல் பேட் செய்கிறார் என்ற மாயையில் இனியும் குல்தீப் யாதவ்வை உட்கார வைப்பது தகாது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago