கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில் மொராக்கோ அணியை பிரான்ஸ் அணி 2-0 என்று போராடி வீழ்த்தி அர்ஜெண்டினாவுடன் வரும் ஞாயிறன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றது. ஆனால் இதில் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் நடுவர் செய்த பெரிய அநீதி மொராக்கோ அணியின் வாய்ப்புகளை முறியடித்தது என்றால் அது மிகையாகாது.
மொராக்கோ இந்த உலகக் கோப்பையில் கடந்து வந்த பாதை அபரிமிதமானது. மிகவும் கடினமானது. பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற ஜாம்பவான்களை தங்களின் அற்புதமான ஆட்டத்தினால் முறியடித்து மேலெழுந்து வந்தது. பிரான்ஸ் அணியும் கொஞ்சம் கதிகலங்கித்தான் ஆடினர். பந்தை 61% தங்கள் வசம் வைத்திருந்தது மொராக்கோதான். அதுவும் மொராக்கோ வீரர் அடித்த அந்த பைசைக்கிள் ஷாட் கோல் ஆகாமல் போனது துரதிர்ஷ்டமே. ரிகார்லிசன் இதே போன்ற ஷாட்டில் அடித்த கோல் இதுவரையிலான உலகக்கோப்பையின் ஆகச்சிறந்த கோல் ஆகும். அதனை சுலபமாக இந்த ஷாட் மேட்ச் செய்திருக்கும் ஆனால் ஷாட் தடுக்கப்பட்டது.
27வது நிமிடத்தில் பெனால்டி கொடுக்காமல் விட்ட பெருந்தவறு
இந்த நிமிடத்தில் நடுவர் தவறுக்கு முன்னர்தான் மொராக்கோ அணியின் ஹக்கீமி 22 மீட்டரிலிருந்து அடித்த அற்புதமான ஷாட்டை பிரான்ஸின் தடுப்பு வீரர் கொனாத்தே தடுத்திருந்தார். 27வது நிமிடத்தில் அதுபோன்ற ஒரு அச்சுறுத்தல் மூவில் தான் பெனால்டி பகுதியில் பிரான்சின் தியோ ஹெர்னாண்டஸ் பந்தை டச் செய்தார், மொராக்கோ வீரர் சோஃபியானே பூஃபால் ஹெர்னாண்டஸை சேலஞ்ச் செய்ய வந்தார். ஹெர்னாண்டஸ் பந்தை முதலில் டச் செய்தது என்னவோ உண்மை. ஆனால் டச் என்பதை வைத்து மெக்சிகோ ரெஃப்ரீ சீசர் ரேமோஸ் ஃப்ரீ கிக் கொடுத்ததோடு மொராக்கோ வீரர் பூஃபாலுக்கு மஞ்சள் அட்டை காட்டினார். இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் இணையதளத்தில் வெளிவந்த நுணுக்கமான ஆய்வுக் கட்டுரையில் இது பெனால்டி கொடுக்கப்பட வேண்டிய ஃபவுல் என்று கூறப்பட்டுள்ளது.
» FIFA WC 2022 | அரையிறுதியில் தோல்வி; மொராக்கோ ரசிகர்கள் போலீஸாருடன் மோதல்
» நியூஸிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்
வீடியோ உதவி ரெஃபரலும் மொராக்கோவுக்கு பெனால்டியை மறுத்தது. முதலில் பூஃபாலுக்கு மஞ்சள் அட்டைக் காட்டியிருக்கக் கூடாது, இது முதல் தவறு. உண்மையில் பந்தை முதலில் ஹெர்னாண்டஸ்தான் டச் செய்தார் என்றாலும் அவர் அதிலிருந்து மீண்டு வருகையில் மொராக்கோ வீரர் பூஃபாலை உதைத்தார். இது உடலுக்கு உடல் மோதல் ஆகும். இப்படியிருக்கையில் எப்படி பிரான்ஸுக்கு ஃப்ரீ கிக் கொடுக்க முடியும்? ஹெர்னாண்டஸ் பந்தை முதலில் டச் செய்தார் என்பதற்காக எதிரணி வீரரை காலால் எத்துவதை எப்படி அனுமதிக்க முடியும்? விஏஆர்-ல் பந்தை டச் செய்தது தான் பெனால்டி மறுப்புக்குக் காரணமாகக் கூறப்பட்டது என்றால், அதன் பிறகு பந்தை எடுக்க வரும் எதிரணி வீரரை எத்துவது ஃபவுல் ஆகாதா? ஈஎஸ்பின் நுணுக்க ஆய்வு கூறுவதென்னவெனில் ஹெர்னாண்டஸ் பந்தை இடது காலால் டச் செய்தார் ஆனால் வலது காலால் மொராக்கோ வீரரை எத்தினார் என்று கூறுகிறது. பந்தை டச் செய்த பிறகு தன் ஃபாலோ த்ரூவில்தான் அவர் பூஃபாலை எத்தினார் என்று நியாயப்படுத்த முடியாது.
இந்த வீடியோ ரெஃபரல் நடுவராக இருந்த கனடாவைச் சேர்ந்த ஃபிஷர்தான் அன்று போலந்துக்கு எதிராக சவுதி அரேபியாவுக்கு பெனால்டி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அந்த நேரத்தில் பெனால்டி கொடுத்து அது கோலாக மாறியிருந்தால் 27வது நிமிடத்தில் 1-1 என்று இருக்கும் போது கூடுதல் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தி மொராக்கோ பிரான்ஸை பெனால்டி ஷூட் அவுட்டிற்கே இழுத்திருக்கலாம். ஆட்டத்தின் முடிவு என்ன வேண்டுமானதாகவும் மாறியிருக்கலாம்.
முன்னதாக ஆட்டம் தொடங்கி 5வது நிமிடத்தில் வலது உள்புறத்தில் கிரீஸ்மேன் பந்தை எம்பாப்பேவுக்கு அனுப்ப அவர் அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. அப்போது பட்டுத் திரும்பி மீண்டும் வந்த பந்தை ஹெர்னாண்டஸ் கோலாக மாற்றினார். பந்து தரையில் பட்டு கிட்டத்தட்ட ஹெர்னாண்டஸ் தோள்பட்டைக்கு உயர்ந்தது, அதை அப்படியே காலை உயர்த்தி அடித்தார் அற்புதமான கோலாக மாறியது. 11வது நிமிடத்தில் மொராக்கோ அட்டாக்கில் அவ்நாஹி அடித்த அற்புதமான கோல் நோக்கிய ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் இடப்பக்கம் நீண்ட தூரம் டைவ் அடித்து தடுத்தார்.
முக்கியமான வீரர்களின் காயத்தினால் பின்னடைவு கண்டது மொராக்கோ. நயீப் அகுயெர்ட் என்ற செண்டர் பேக் வீரர் காயத்தினால் களம் காணவில்லை. 20 நிமிடங்கள் கழித்து மொராக்கோ கேப்டன் ரோமைன் சாயிஸ் காயத்தினால் வெளியேறினார். ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அவ்னாஹி அருமையாக பந்தை ஹக்கீமிக்கு அனுப்ப அவர் கோலை நோக்கி அடித்த ஷாட்டை சறுக்கியபடியே வந்த பிரான்ஸ் தடுப்பு வீரர் கொனாத்தே தடுத்தார்.
இதில் கிடைத்த கார்னர் வாய்ப்புத்தான் பிரான்ஸ் அணியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் தருணமாக அமைந்தது. ஜியேச் அடித்த உள்ளே வளைந்து வரும் கார்னர் ஷாட்டை ஜிரவ்த் தலையால் முட்டி கிளியர் செய்ய முயன்றார். அங்கு மொராக்கோ வீரர் எல் யாமிக் பவுன்ஸ் ஆகி வந்த பந்தை காலைத்தூக்கி கோல் நோக்கி அடித்தார். அப்போதுதான் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் வலது புறம் பாய்ந்து லேசாகக் கையால் பந்தை போஸ்ட்டுக்குத் தட்டி விட்டார். இது அற்புதமான சேவ், மேட்ச் சேவிங் சேவ் என்றே கூற வேண்டும்.
கடைசியாக மொராக்கோவின் அனைத்து முயற்சிகளும் கோலாக முடியாமல் போன தருணத்தில் 79வது நிமிடத்தில் பிரான்ஸின் சுவாமெனி பந்தை அருமையாகக் கடைந்து எடுத்து உள்ளே கொண்டு சென்று பெனால்டி பாக்சுக்கு சற்றே வெளியே எம்பாப்பேவிடம் கொடுக்க, அங்கு எம்பாப்பேவை தடுக்க 3 வீரர்கள் இருந்தனர். ஆனால் எம்பாப்பே மிகத்திறமையுடன் மூன்று பேருக்கும் போக்குக்காட்டி அடித்த ஷாட் எஸால்சவ்லி என்ற வீரர் மேல் பட்டு தெறிக்க அங்கு பிரான்ஸின் பதிலி வீரர் முனானிக்கு அது ஓபன் கோல் ஆனது. பதிலி வீரராகக் களமிறங்கி 44வது விநாடியிலேயே முதல் டச்சில் கோல் அடித்து சாதனை புரிந்தார் முனானி. இந்த கோல் மொராக்கோவின் ஸ்பிரிட்டை அழித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக 27வது நிமிடத்தில் பெனால்டி கொடுக்காததும் மொராக்கோவின் இந்த அற்புதப் பயணத்தின் கரும்புள்ளியாக அமைந்தது.
இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக ஆப்பிரிக்க அணி ஒன்று அரையிறுதி வரை முன்னேறி வந்தது அதிகம் கொண்டாடப்பட்டது, மிகப் பிரமாதமான கால்பந்தாட்டத்தைக் காட்டிய மொராக்கோ அணி கடைசி வரை போராடி தோல்வி கண்டாலும் உலகக் கோப்பைக்குப் பெருமை சேர்த்துள்ளது என்றால் மிகையாகாது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago