தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி, ஜூலியன் அல்வரெஸ் ஆகியோரது அற்புதமான ஆட்டத்தால் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா அணி. கடந்த 8 ஆண்டுகளில் அர்ஜெண்டினா இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 2-வது முறையாகும்.
தோகாவின் லுசைல் மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அர்ஜெண்டினா, 2018-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்தகுரோஷியாவை எதிர்த்து விளையாடியது. 25-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் இலக்கை நோக்கி தாழ்வாக அடித்த ஷாட்டை குரோஷிய அணியின் கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிச் தடுத்தார்.
34-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் தூக்கி அடித்த பந்தை பெற்ற ஜூலியன் அல்வரெஸ்பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினார். கோல் அடிக்கும் தருணத்தில் குரோஷியாவின் கோல் கீப்பர் லிவாகோவிச் பந்தை தடுக்க முயன்ற போது நெருக்கமான சூழ்நிலையில் அல்வரெஸுடன் மோதினார். இதனால் இத்தாலிய நடுவர் டேனியல் ஓர்சாடோ அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.
இதற்கு குரோஷியா அணி வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளியே அமர்ந்திருந்த உதவி பயிற்சியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் உதவி பயிற்சியாளர் மரியோ மன்ட்சுகிக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து பெனால்டி வாய்ப்பில் லயோனல் மெஸ்ஸி தனது இடது காலால் வலுவாக அடித்த ஷாட் கோல் வலையின் வலது பக்க மேல் கார்னரை துளைத்தது. மெஸ்ஸி வலது பக்கம்தான் அடிப்பார் என சரியாக கணித்து லிவாகோவிச் அந்த பக்கம் பாய்ந்தார். ஆனால் மெஸ்ஸி பந்தை உயரமாக அடித்து கோலாக மாற்ற அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
» FIFA WC 2022 | மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
» கால்பந்தாட்ட மாயமானின் கடைசி பாய்ச்சல்: ஓய்வை அறிவித்த மெஸ்ஸி ‘குறிப்பால்’ சொல்வது என்ன?
அடுத்த 5-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா 2-வது கோலை அடித்தது. பாக்ஸ் பகுதிக்கு வெளியே குரோஷியாவின் கார்னரை இடைமறித்த இரு அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை மெஸ்ஸிக்கு பாஸ் செய்தனர். அவர், பந்தை தொட்ட நிலையில் டிபன்டரின் இடையூறால் சரிந்தார். பந்து ஜூலியன் அல்வரெஸை நோக்கி செல்ல அவர், மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றார்.
குரோஷியா அணியின் தற்காப்பு பின்தங்கிய நிலையில் ஜோசிப் ஜுரனோவிக், போர்னா சோசா ஆகியோர் பலவீனமாக செயல்பட அவர்களை கடந்து கோல் அடித்து அசத்தினார் ஜூலியன் அல்வரெஸ்.
இதனால் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷியாவின் ஜோசிப் ஜுரனோவிக்கின் கோல் அடிக்கும் முயற்சிக்கு அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் முட்டுக் கட்டை போட்டார். 69-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு அருகே குரோஷியாவின் 20 வயதான டிபன்டர் ஜோஸ்கோ க்வார்டியலை தனது மாயாஜாலத்தால் லாவகமாக கையாண்டு பந்தை ஜூலியன் அல்வரெஸூக்கு தட்டி விட்டார் மெஸ்ஸி.
அவர், அதை கோல் வலைக்குள் திணிக்க அர்ஜண்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது. குரோஷியா அணி கோல் அடிக்க எடுத்தமுயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் அர்ஜெண்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஜெண்டினா இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 6-வது முறையாகும்.
முதலிடத்தில் மெஸ்ஸி…: குரோஷியாவுக்கு எதிராக பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்தார். கத்தார் உலகக் கோப்பையில் அவர் அடித்த 5-வது கோல் இது. இதன் மூலம் 5 கோல்கள் அடித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரான்ஸின் கிளியான் பாப்பேவுடன் இணைந்துள்ளார் மெஸ்ஸி.2-வது முறையாக..: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த குரோஷியா மோசமான டிபன்ஸால் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் அரை இறுதியுடன் குரோஷியா வெளியேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 1998-ம் ஆண்டு தொடரின் அரை இறுதி சுற்றில் பிரான்ஸிடம் வீழ்ந்திருந்தது குரோஷியா அணி.
25 ஆட்டங்களில்…: குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸிக்கு உலகக் கோப்பைகளில் 25-வது ஆட்டமாக அமைந்தது. இதன் மூலம் ஜெர்மனி வீரர் லோத்தார் மத்தாவ்ஸின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி.
சாதனை முறியடிப்பு: லயோனல் மெஸ்ஸி, குரோஷியாவுக்கு எதிராக கோல் அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்துள்ள 11-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அர்ஜெண்டினா அணிக்காக உலகக் கோப்பைகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி. இந்த வகையில் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
கடைசி ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி எனது பயணத்தை முடிக்க முடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். அடுத்த கால்பந்து போட்டிக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் உள்ளன. அதில் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. - லயோனல் மெஸ்ஸி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago