IND vs BAN முதல் டெஸ்ட் | சர்வதேச கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்த ரிஷப் பந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 4,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதே போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மொத்தம் 54 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் இதை எட்டியுள்ளார். தோனிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் பந்த் படைத்துள்ளார்.

25 வயதான பந்த் கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். 31 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். இதன் மூலம் மொத்தம் 4021 ரன்களை குவித்துள்ளார்.

இந்த ரன்களில் 6 சதங்கள் மற்றும் 18 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் 5 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்தவை. அதிகபட்சமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 159 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 125 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 65 ரன்களும் குவித்துள்ளார். இந்த மூன்று இன்னிங்ஸின் போதும் அவர் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக களம் திரும்பியுள்ளார். விக்கெட் கீப்பராக மொத்தம் 158 கேட்ச்களை பிடித்துள்ளார். 21 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 6 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 46 ரன்கள் விளாசி இருந்தார். இந்த இன்னிங்ஸில்தான் 4000+ ரன்கள் மைல்கல் மற்றும் அதிவேக 50 சிக்ஸர்கள் சாதனையை அவர் படைத்துள்ளார். இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது அவர் பேட் செய்ய வந்தார்.

சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு இதே போட்டியில் மோசமான ஷாட் தேர்வு காரணமாக 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் பந்த். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 90 ரன்களில் வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர், 82 ரன்களுடன் பேட் செய்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE