FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை - பிரான்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்குமா மொராக்கோ அணி?

By செய்திப்பிரிவு

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிவு 12.30 மணிக்கு தோகாவின் அல் பேத் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வரும் மொராக்கோவுடன் மோதுகிறது.

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அற்புதமாக விளையாடி வருகிறது. லீக் சுற்றில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை வீழ்த்திய நிலையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் அணியை தோற்கடித்து தொடரில் இருந்து வெளியேற்றியது.

தொடர்ந்து கால் இறுதி சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகித்த போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது மொராக்கோ அணி. பிரதான அணிகளை வேட்டையாடி வரும் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மொராக்கோவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் பெருகி வருகிறது.

இருப்பினும் இன்றைய மோதலானது மொராக்கோவுக்கு கடும் சவாலானதாகவே இருக்கக்கூடும். ஏனெனில் இரு அணிகளின் ஆட்ட தரத்தில் பெரிய இடைவெளி உள்ளது. பிரான்ஸ் அணி தாக்குதல் ஆட்டம் தொடுக்கக்கூடியது. மொராக்கோ எதிர் தாக்குதல் ஆட்டத்தை கையாளக்கூடியது. கத்தார் உலகக் கோப்பையில் மொராக்கோ அணியின் டிபன்ஸ் பலம் வாய்ந்ததாக உள்ளது.

லீக் சுற்று, கால் இறுதிக்கு முந்தைய சுற்று, கால் இறுதி என 5 ஆட்டங்களில் அந்தஅணி ஒரு கோல் மட்டுமே வாங்கி உள்ளது.அதுவும் லீக் சுற்றில் கனடா அணிக்கு எதிராக மொராக்கோவின் டிபன்டர் நயீஃப் அகுர்ட் சுய கோல் அடித்திருந்தார். தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நயீஃப் அகுர்ட் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான்.

பிரேசிலுக்கு பிறகு நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் அரை இறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. பிரேசில் அணி 1998-ல் இந்த வகையிலான சாதனையை படைத்திருந்தது. கத்தார் உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணியானது கால் இறுதி சுற்றில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

கிளியான் பாப்பே 5 கோல்களும் ஆலிவர் ஜிரவுடு 4 கோல்களும் அடித்து சிறந்த பார்மில் உள்ளனர். அன்டோனி கீரிஸ்மான், கால் இறுதி சுற்றில் பிரான்ஸ் அணி அடித்த இரு கோல்களையும் அடிக்க உதவியிருந்தார். அவரது பார்ம் அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இந்த கூட்டணி மொராக்கோவின் டிபன்ஸை கடும் சோதனைக்கு உட்படுத்தக்கூடும்.

அக்ரஃப் ஹக்கிமி, ஹக்கீம் ஜியேச் கூட்டணி வலது பக்கத்தில் எதிர் தாக்குதல் தொடுப்பது மொராக்கோவின் பலமாக உள்ளது. இந்த கூட்டணி கிளியான் பாப்பேவை முடக்கும் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்தினால் மொராக்கோவின் எதிர்தாக்குதல் திறன் மட்டுப்படுத்தப்படும். இதனால் இந்த விஷயத்தில் மொராக்கோகவனமுடன் செயல்படக்கூடும்.

இதுவரை: பிரான்ஸ் – மொராக்கோ அணிகள் அதிகாரப்பூர்வமான சர்வதேச போட்டிகளில் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஒன்றில் கூட பிரான்ஸ் தோல்வி கண்டது இல்லை. கடைசியாக இரு அணிகளும் 2007-ம் ஆண்டு பாரிஸ் நகரில் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது.

> பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிளியான் பாப்பே, 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்திருந்த நிலையில் தற்போது கத்தாரில் 5 கோல்களை இதுவரை அடித்துள்ளார். 23 வயதான பாப்பே இந்த 9 கோல்களையும் 12 ஆட்டங்களின் வாயிலாக அடித்துள்ளார்.

> உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது. இதன் மூலம் மொராக்கோ அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்ற முதல் அரபு பயிற்சியாளர் ஆனார் வாலித் ரெக்ராகுய்.

நாங்கள் ஏன் வெல்ல முடியாது?: மொராக்கோ கால்பந்து பயிற்சியாளர் வாலித் ரெக்ராகுய் கூறும்போது, “நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் கூறிய பதில் ஏன் முடியாது? என்பதுதான். நாங்கள் கனவு காணலாம், அதற்கு செலவாகாது. ஐரோப்பிய நாடுகள் உலகக் கோப்பையை வெல்வதற்குப் பழகிவிட்டன. எங்களுடன் விளையாடுபவர்கள் இப்போது எங்களைப் பார்த்து பயப்படுவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்