FIFA WC | மோட்ரிச் vs மெஸ்ஸி: 16 ஆண்டுகளாக எதிரெதிரே சமர் செய்யும் ஜாம்பவான்கள்

By எல்லுச்சாமி கார்த்திக்

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரு அணி வீரர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

இருந்தாலும் குரோஷியாவின் லூகா மோட்ரிச் மற்றும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கும் இடையிலான இந்த போட்டி அதுக்கும் மேலானது.

ஏனெனில் இவர்கள் இருவரும் கடந்த 16 ஆண்டுகளாக (2006 முதல்) களத்தில் எதிரெதிர் துருவங்களாக தங்கள் தேசிய அணிக்காக விளையாடி வருகின்றனர். இது கிளப் அளவிலான போட்டிகளிலும் தொடர்கதையாக உள்ளது. மெஸ்ஸ, முன்கள வீரர் என்றால், மோட்ரிச் கைதேர்ந்த நடுகள வீரர். இருவரும் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள்தான்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் 5 முறை குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை செய்துள்ளன. அதில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக 2018 உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியில் அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது. இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேராக விளையாடி உள்ளன.

2006 முதல் 2022 வரை

2006, மார்ச் 1ம் தேதி இரு அணிகளும் நட்பு ரீதியிலான போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டில் விளையாடின. இந்த போட்டியில்தான் மாய மானான மெஸ்ஸி தனது முதல் சர்வதேச கோலை பதிவு செய்தார். இதே போட்டியில்தான் லூகா மோட்ரிச் அறிமுகமானார். அந்த போட்டியில் குரோஷியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அப்போது முதலே களத்தில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறினர். 2012ல் ரியல் மாட்ரிட் அணியில் மோட்ரிச் இணைந்தார். அதன் மூலம் பார்சிலோனா அணிக்காக 2021 வரை விளையாடி வந்த மெஸ்ஸிக்கு சவால் கொடுத்தார். இருவருமமே Ballon d'Or விருதை இந்த காலகட்டத்தில் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விருதை மெஸ்ஸி அதிக முறை வென்றுள்ளார்.

இந்த 16 ஆண்டுகளில் அர்ஜென்டினா - குரோஷியாவுக்கு இடையே 3 போட்டிகள் நடந்துள்ளன. அதில் இரண்டு முறை குரோஷியா வென்றுள்ளது.

ஓய்வை நெருங்கும் மாஸ்டர்கள்

மெஸ்ஸிக்கு 35 வயதாகிறது. லூகாவுக்கு 37 வயதாகிறது. இருவருக்குமே இதுதான் தங்களது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம். இந்த தொடருக்கு பின்னர் ஓய்வு குறித்து கூட அவர்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே மைதானத்தில் தங்களது சர்வதேச விளையாட்டு பயணத்தின் முதல் வெற்றிப்படிகளை எடுத்து வைத்தனர். விரைவில் ஒன்றாகவே அதற்கு முடிவுரையும் எழுத உள்ளனர்.

மோட்ரிச் மற்றும் மெஸ்ஸி என இருவருமே நெடு நாட்களாக தங்கள் அணிக்காக உலகக் கோப்பை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்ற பெருங்கனவை துரத்திக் கொண்டுள்ளனர். மெஸ்ஸி 2014 இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். மோட்ரிச் கடந்த 2018 இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார்.

இப்படி இருவரும் அதை தொட்டு விடும் தூரம் வரை சென்று வெல்ல முடியாமல் திரும்பியுள்ளனர். இது அவர்கள் இருவரது உள்ளார்ந்த உணர்வுகளையும் சுமந்து நடக்கும் போட்டி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE