FIFA WC 2022 அரையிறுதி முன்னோட்டம்: குரோஷியாவின் நடுக்கள ஜாம்பவான்களை சமாளிக்குமா மெஸ்ஸி படை?

By ஆர்.முத்துக்குமார்

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் ஓர் அருமையான தொடராக சர்ச்சைகள் அதிகமில்லாமல் சுவாரஸியமான உச்சக்கட்டத்தை நோக்கி அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ளது. முதல் அரையிறுதியில் புதன்கிழமை அன்று அதிகாலை 12:30 (செவ்வாய் நள்ளிரவு) மணிக்கு அர்ஜென்டினா அணி, பிரேசிலை வீழ்த்திய குரோஷியாவை சந்திக்கின்றது. இதற்கு அடுத்த நாள் பிரான்ஸ் அணியும், வரலாறு படைக்க காத்திருக்கும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மொராக்கோ அணியும் விளையாடுகின்றன.

அர்ஜென்டினா - குரோஷியா போட்டியைப் பொறுத்தவரை இரு அணிகளும் உலகக் கோப்பையில் 3-வது முறையாக நேருக்கு நேர பலப்பரீட்சை செய்ய உள்ளன. ஆனால், நாக் அவுட் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறை. 1998 உலகக் கோப்பையில் அர்ஜென்டினா, குரோஷியாவை 1-0 என வீழ்த்தியது. ஆனால் இது லீக் சுற்று போட்டியாகும். 2018-ல் குரோஷியா 3-0 என வென்றது.

பிரேசிலை அன்று குரோஷியா அருமையாக முடக்கியது. பிரேசில் வீரர்கள் பலரும் காய அச்சுறுத்தலினால் சரியாக ஆட முடியாததையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், குரோஷியாவின் போராடும் குணம்தான் எதிரணியினர் எத்தனை பெரிய அணியாக இருந்தாலும் பயந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியது. அன்று பிரேசிலை முடக்கிய மிட் ஃபீல்ட் மூவர் கூட்டணியான லூகா மோட்ரிச், மேட்டியோ கொவாசிச், மார்செலோ புரோஸோவிச் ஆகியோர் அர்ஜென்டினாவின் ‘லயன்’ ஆன மெஸ்ஸிக்கு என தனித்த உத்திகளை வைத்திருப்பார்கள் என்றே கருத வேண்டும். அன்று பிரேசிலின் அசகாய சூரனான வினிஷியஸ் ஜூனியரையே முடக்கி விட்டனர் குரோஷிய அணியினர்.

இந்த மூவர் கூட்டணி மிட் ஃபீல்டில் எதிரணியினரின் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளித்து ஆட்கொள்ளும் உத்திகளைக் கொண்டுள்ளது என்பதை அர்ஜென்டினா பயிற்சியாளர் இந்நேரம் கைகொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த மூவர் மிட் ஃபீல்ட் கூட்டணியை மெஸ்ஸியைப் போன்ற மின்னல் வேக பாய்ச்சல் வீரருமே முறியடிப்பது கடினம் தான். குரோஷியா இதற்கு முன்னால் ஆடிய 9 நாக்-அவுட் போட்டிகளில் 8 போட்டிகள் 90 நிமிடங்களைத் தாண்டி கூடுதல் நேரத்திற்குச் சென்றுள்ளது. எனவே அர்ஜென்டினா அணியில் ‘ஆற்றல்’ திறன் மிக்க வீரர்களை முழு உடல் தகுதியுடன் வைத்திருப்பது முதல் கட்டாயம்.

கத்தாரில் ஜப்பான், பிரேசில் அணிகளை பெனால்டி ஷூட்-அவுட்டில் வென்றதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2018-ல் இறுதிக்கு முன்னேறும்போது குரோஷியா அணி டென்மார்க், ரஷ்யாவுக்கு எதிராகவும் பெனால்டி ஷூட் அவுட்டில் வென்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். படைப்புத்திறனும், கற்பனை வளமும், வேகமும் கொண்ட பிரேசில் அணியையே முடக்கி வென்றிருக்கிறது என்றால் அர்ஜென்டினாவையும் குரோஷியா ‘என்ன சேதி’ என்று கேட்கும் என எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் அர்ஜென்டினாதான் இறுதிக்கு முன்னேறும் ஏன் தெரியுமா? - எதிரணியை முடக்குவதில் குரோஷியா அபாரமான உத்திகளைக் கொண்டிருந்தாலும் ஸ்ட்ரைக்கர் என்ற அளவில் மோட்ரிச், பெரிசிச் இருவர்தான் உள்ளனர். இதில் பெரிசிச் பெரிய போட்டிகளில் கோல் அடிப்பவர். மோட்ரிச் அனுபவசாலி. ஆனாலும் குரோஷிய அணியின் கோல் ஸ்ட்ரைக்கிங் திறன் அர்ஜென்டினா அளவுக்கு இல்லை என்றே கூறலாம்.

அர்ஜென்டினாவில் மெஸ்ஸி, அல்வாரேஸ், மார்ட்டினெஸ் என்று திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் குரோஷிய அணிக்கு பெரிய சவாலாக இருப்பார். நெதர்லாந்து அணிக்கு எதிராக அன்று பெனால்டி ஷூட் அவுட்டில் எமிலியானோ மார்ட்டினெஸ் எழுச்சி கண்டதையும் குரோஷியா கவனிக்க வேண்டும்.

எனவே, அர்ஜென்டினாவுக்கு இருக்கும் அட்டாக்கிங் தெரிவுகள் குரோஷியாவுக்கு இல்லை. லியோனல் மெஸ்ஸி, 35 வயதிலும் திடீர் மின்னல் பாய்ச்சலை மேற்கொள்ளும், கோல் திணிக்கும் வீரர் என்பதோடு கோல்களை உருவாக்கிக் கொடுத்து உதவுவதில் பெரிய ஸ்டார் என்பதும் உலகறிந்த விஷயம்.

மெக்சிகோ, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மெஸ்சியின் கோல்கள் மறக்க முடியாதவை. காலிறுதியில் நெதர்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி செய்த ரிவர்ஸ் பாஸ் மூலம் நஹுவெல் மொலினா அடித்த கோல் மெஸ்ஸியின் திறமைக்கு பல சான்றுகளில் ஒரு சான்று. எப்படி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக வெல்ல வேண்டும் என்ற ஒன்று இந்தியாவை உந்தித் தள்ளியதோ அதே போல் மெஸ்ஸி தலைமையில் ஒரு உலகக்கோப்பை என்பது அர்ஜென்டினாவின் கனவு. மெஸ்ஸி போன்ற ஒரு நட்சத்திர வீரர் ஆடும் கடைசி உலகக் கோப்பை என்பதாலும் கோப்பை அர்ஜென்டினாவுக்கு என்பது பலரது கனவும் கணிப்புமாகும்.

குரோஷிய அணியில் மோட்ரிச்சின் அனுபவம் போக, லெய்ப்சிக் இருக்கிறார். ஜாஸ்கோ க்வார்டியால் என்ற 20 வயது இளம் வீரர் குரோஷியாவின் எதிர்கால நட்சத்திரம் என்று பேசப்படுபவர் இருக்கிறார்.

அர்ஜென்டினாவின் எமிலியானோ போலவே குரோஷியாவின் கோல்கீப்பர் லிவாகோவிச் ஒரு அருமையான கோல்கீப்பர் என்பதை அன்று பிரேசிலுக்கு எதிராக மட்டுமின்றி இந்தத் தொடர் முழுதுமே நிரூபித்துள்ளார். இவர் அர்ஜென்டினாவின் கோல் முயற்சிகளை தடுத்து விடுவாரேயானால் இன்னொரு ஷாக் நிச்சயம் இருக்கும் என்றே எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஆகவே ஒரு அற்புதமான ஆட்டம் காத்திருக்கிறது. யார் வெல்ல வேண்டும் என்பதில் ரசிகர்களுக்கு சார்புகள் இருக்கலாம் ஆனால் யார் வென்றாலும் தோற்றாலும் வெல்லப்போவது கால்பந்தாட்டம் தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்