FIFA WC 2022 | உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம் - கண்ணீர் விட்டு கதறி அழுத நெய்மருக்கு ஆறுதல் கூறிய குரோஷிய வீரரின் மகன்

By பெ.மாரிமுத்து

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் அடைந்த தோல்வியால் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த குரோஷியா அணியின் வீரர் இவான் பெரிசிச்சின் மகன் களத்துக்குள் வந்து நெய்மரை சமாதானம் செய்தார். இது அனைவரையும் உருக வைத்தது.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பிரேசில் – குரோஷியா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 105-வது நிமிடத்தில் நெய்மர் எதிரணியின் டிபன்டர்களை அற்புதமாக கடந்து கோல் அடித்தார். இதனால் பிரேசில் 1-0 என முன்னிலை வகித்தது. போட்டி முடிவடைய 3 நிமிடங்களே இருந்தநிலையில் பிரேசில் அணியின் கனவிற்கு முதல் முட்டுக்கட்டை போட்டது குரோஷியா.

117-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் அடித்த கோலால் ஆட்டம் 1-1 எனசம நிலையை எட்டியது. இதன் பின்னர் எஞ்சிய நிமிடங்களில் இருஅணிகள் தரப்பில் மேற்கொண்டுகோல் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசில் அணியின் முதல் வாய்ப்பில் ரோட்ரிகோ அடித்த ஷாட்டை குரோஷியா அணியின் கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிச் அற்புதமாக தடுத்தார்.

இதன் பின்னர் பிரேசில் அணியின் 4-வது வாய்ப்பில் மார்கினோஸ் அடித்த ஷாட் கோல் கம்பத்தின் மீது பட்டு விலகிச் செல்ல பிரேசில் அணிக்கு 6-வது முறையாக பட்டம் வென்று கொடுக்கும் முனைப்பில் இருந்த நெய்மரின் கனவு நொறுங்கியது. இதனால் மனமுடைந்து நெய்மர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் நெய்மரை தேற்றினர். இருந்தாலும் அவரது கண்ணீர் நிற்கவில்லை. அப்போது குரோஷியாவின் நட்சத்திர வீரர் இவான் பெரிசிச்சின் மகன் களத்துக்குள் ஓடிவந்து நெய்மரை சமாதானம் செய்தார். அதனைத் தொடர்ந்து நெய்மர் அவரை கட்டியணைத்து வழியனுப்பிட்டு கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக்கோப்பையிலும் பிரேசில் அணிஇதே கட்டத்தில்தான் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதற்கு முன்னதாக 2014-ல் ஜெர்மனியிடம் அரை இறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்தது. அந்த ஆட்டத்தில் நெய்மர் காயம் காரணமாக விளையாடவில்லை.

தற்போது குரோஷியாவுக்கு எதிராக நெருக்கடியான சூழ்நிலையில் முதல் கோலை மிக அற்புதமாக நெய்மர் அடித்த போதிலும் வெற்றி வசப்படாமல் போனது. ஜாம்பவான் பீலேவின் 77 கோல்கள்சாதனையை நெய்மர் சமன் செய்தபோதிலும் பிரேசிலின் தோல்விஅதை பொருட்படுத்தவில்லை.

தோல்விக்குப் பின்னர் நெய்மர் கூறுகையில், “இது ஒரு பயங்கரமான உணர்வு, கடந்த உலகக் கோப்பைகளில் நடந்ததை விட இதுஒரு மோசமான உணர்வு என்றுநான் நினைக்கிறேன். இந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது கடினம். நாங்கள் போராடினோம். எனது சக அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

நான் தேசிய அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கான கதவுகளை மூடவில்லை. அதேவேளையில் அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கவில்லை. எனக்கும் தேசிய அணிக்கும் எது சரியானது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE