கத்தார் உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணிக்கு நேற்று குரோஷியா அணி அதிர்ச்சி மருத்துவம் அளித்தது. உலக பிரேசில் ரசிகர்கள் மனமுடைந்தனர். மைதானத்தில் பிரேசில் வீரர்கள், ரசிகர்கள் ஒரே அழுகை. உண்மையில் மனமுடையும் தருணம்தான். ஆனால், அதற்காக திட்டமிட்டு பிரேசிலின் நடன அசைவு கால்பந்து திறனை முடக்கியதையும் நாம் நினைவில் நிறுத்துவது அவசியம்.
4-வது பெனால்டியை மார்க்கின்ஹோஸ் போஸ்ட்டில் அடிக்க நெய்மர் கண்களில் கண்ணீர். நெய்மரை 5-வது ஷாட் அடிக்க மிச்சம் பிடித்து வைத்திருந்தார் பிரேசில் பயிற்சியாளர் டிட்டே. ஆனால், அப்படி செய்திருக்கலாமா என்பதே கேள்வி. எப்போதும் பெனால்டி ஷூட் அவுட்டில் இந்த 4-வது ஷாட்தான் எந்த அணிக்குமே பிரச்சினை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
மாறாக, குரோஷியா அணி தொடர்ச்சியாக 4 பெனால்டி ஷூட் அவுட்களில் ஆடி வென்ற அனுபவத்துடன் வந்துள்ளது. இனிமேல் பிரேசிலுக்கு நான் ஆடுவேனா என்று நெய்மர் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். இப்போது 30 வயதாகிறது நெய்மருக்கு, அடுத்த உலகக்கோப்பை ஆடினால் 34 வயது. அதனால் இதுதான் நெய்மரின் கடைசி உலகக்கோப்பை. அதிலும் அவர் அடித்த அந்த முதல் கோல் லெஜண்ட் பீலேயின் 77-வது சர்வதேச கோல் சாதனையைச் சமன் செய்த கோலாகும். இதை வேண்டுமானால் நெய்மர் முறியடிக்கலாம். ஆனால், நெய்மர் ஒரு உலகக்கோப்பையை பிரேசிலுக்காக வென்று கொடுக்கும் கடைசி வாய்ப்பை குரோஷியா ஏறக்குறைய முறியடித்து விட்டது என்றே கூற வேண்டும்.
» FIFA WC 2022 | போர்ச்சுகலுடன் இன்று பலப்பரீட்சை: அரை இறுதி கனவில் மொராக்கோ
» FIFA WC 2022 | பிரான்ஸூடன் இன்று மோதல்: கிளியான் பாப்பேவை சமாளிக்குமா இங்கிலாந்து?
தொடர்ச்சியாக 2வது முறையாக பிரேசில் காலிறுதியில் வெளியேறுகிறது. நேற்றைய ஆட்டதில் குரேஷியா நடுக்களத்தை மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தி சிறந்த வீரர்களான மார்செலோ போஸோவிச், மேட்டியோ கொவாசிச், 16 ஆண்டு சர்வதேச கால்பந்தாட்ட அனுபவம் பெற்ற எவர் கிரீன் லூகா மோட்ரிச் ஆகியோர் நடுக்களத்தை காவல் காத்த விதம் பிரேசில் முன்கள வீரர்களைக் கடுப்பேற்றி;வெறுப்பேற்றினர். கோல் கீப்பர் டொமினிக் லிகோவிச் ஒருபுறம் அற்புதமான தடுப்புகளை ஏற்கெனவே மேற்கொண்டிருந்தார்.
பிரேசிலின் பல வாய்ப்புகளை மார்செலோ போசோவிச், மேட்டியோ கொவாசிச், மோட்ரிச் ஆகியோருடன் கோல் கீப்பரும் தடுத்து மகிழ்ந்ததில் 105-வது நிமிடத்தில்தான் இந்த உலகக்கோப்பையின் ஆகச்சிறந்த கோலை நெய்மர் அடித்தார். சக வீரர்கள் ரோட்ரிகோ, பெட்ரோவுடன் பாஸ்களை பகிர்ந்து கொண்ட நெய்மர் குரோஷியாவின் தடுப்பணையை தனது அபார கற்பனை வளத்துடன் உடைத்து உள்ளே புகுந்தார். பாக்சிற்குள் வந்து கோல் கீப்பர் லிவாகோவிச்சை ஏமாற்றி டைட்டான கடினமான கோணத்திலிருந்து அற்புதமான கோலை அடித்தார். இதுதான் லெஜண்ட் பீலேயைச் சமன் செய்த லெஜண்ட் நெய்மரின் 77வது கோல். இதோடு பாதுகாப்பு வளையத்தை இறுக்கி டைட்டாக்கியிருந்தால் பிரேசில் இன்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும்.
ஆனால், 2வது கோல்தான் பாதுகாப்பு என்று நினைத்து ஆட குரோஷியா தன் பாக்சில் 5 தடுப்பு வீரர்களை கொண்டிருக்க பிரேசில் அணி 3-4 வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. இதனால் 117-வது நிமிடத்தில் பிரேசிலின், நெய்மாரின் விதியைத் தீர்மானிக்கும் அந்த குரேஷியா கோல் இடியாக இறங்கியது. குரேஷியாவின் ஆர்சிச் இடது புறம் ஒரு பந்தை மிக வேகமாக எடுத்து வந்து மோட்ரிச்சிடம் அளித்தார். மோட்ரிச் பிரேசில் கோலின் பாக்ஸ் ஓரத்துக்கு பந்தைக் கடைந்து எடுத்து வந்தார். பந்தை பெட்கோவிச்சிற்கு அனுப்பினார். அங்கு அலிசன் நேரத்துக்கு வர முடியவில்லை, பந்து வலையைத் தாக்கியது. 1-1 என்று சமன் ஆனது.
பெனால்டியில் ரோட்ரிகோவும் மார்க்கின்ஹோஸும் தங்கள் வாய்ப்பைக் கோட்டை விட்டனர். குரோஷியா அனைத்தையும் கன்வர்ட் செய்தனர். மறக்க முடியாத வெற்றியைப் பெற்றனர். தொடக்கத்தில் வினிஷியஸ் ஜூனியர் பலவீனமான ஒரு ஷாட்டை அடித்ததோடு சரி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் வினிஷியஸ் ஜூனியருக்கென்றே 3 வீரர்களை மார்க்கர்களாக நியமித்தது குரேஷியா, இவரிடம் பந்து வந்தாலே 3 பேர் வந்து விடுவார்கள், இதனால்தான் ஒரு கட்டத்தில் கோச் இவரை ரீகால் செய்ய வேண்டியதாயிற்று. நெய்மரை திறம்பட நடுக்கள மூவர் கூட்டணி தடுத்து நிறுத்தியது. குரோஷியா பாஸ்களில் துல்லியமாக இருந்தது. முதல் பாதி முடிவடையும்போது ஒருவேளை குரேசியா வென்று விடுமோ என்ற ஐயம் எழுந்தது உண்மையே. நெய்மருக்கு முதல் பாதி முடிவில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. ஆனால் அது லிவோகோவிச்சை அச்சுறுத்தவில்லை.
இடைவேளைக்குப் பிறகு பிரேசில் ஆட்டத்தில் பொறி பறந்தது. 66-வது நிமிடத்தில் லுகாச் பகெட்டாவின் ஷாட்டை லிவாகோவிச் தடுத்து ஆட்கொண்டார். 76-வது நிமிடத்தில் நெய்மரின் கோல் முயற்சியை லிவாகோவிச் முறியடித்த போது 7-வது கோல் முயற்சியை சேவ் செய்தார். பிரேசில் கோல் கீப்பர் அலிசன் ஒட்டுமொத்த தொடரிலுமே 5 சேவ்களையே செய்துள்ளார். காரணம் பிரேசில் ஆட்டத்தில் அதற்கு அவசியமில்லாமல் இருந்தது. கடைசியில் அலிசன்னால் குரோஷியாவின் ஸ்பாட் கிக்கை தடுக்க முடியவில்லை. மாறாக லிவாகோவிச் முதல் ஷாட்டை அடித்த ரோட்ரிகோ ஷாட்டைத் தடுத்து 8 சேவ்கள் என்று அதிக சேவ்களுக்கான கோல் கீப்பரானார்.
ஒட்டுமொத்தமாக குரோஷியா திட்டமிட்டு பிரேசிலின் பலமான பகுதியை முடக்கியது. அதாவது மிட்ஃபீல்டில் அவர்களது ஆட்டத்தை குரோஷியா மூவர் கூட்டணியை வைத்து முறியடித்ததே குரோஷியாவின் வெற்றிக்குக் காரணம். பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்பதெல்லாம் எந்த பெரிய அணிக்கும் நிகழ்வதுதான். அதனால் ரோட்ரிகோ கோல் தடுக்கப்பட்டதோ, மார்க்கிஹோஸ் கோல் போஸ்ட்டில் அடித்ததோ காரணமல்ல. குரோஷியாவின் நடுக்கள உத்திதான் பிரேசில் முடங்கிப் போனதற்குக் காரணம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago