தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருந்தது மொராக்கோ. தற்போது கத்தார் உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைக்க மொராக்கோவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
லீக் சுற்றில் 2018-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 2-வது இடம் பிடித்த குரோஷியா, பிஃபா தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த பெல்ஜியம் ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது மொராக்கோ. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வெளியேற்றி இருந்தது. இந்த உலகக் கோப்பையில் மொராக்கோ அணியின் வெற்றிக்கு வலுவான டிபன்ஸ் மற்றும் கணிக்க முடியாத அளவிலான தாக்குதல் ஆட்டமே காரணமாக அமைந்துள்ளது.
போர்ச்சுகல் அணியானது லீக் சுற்றில் கானாவை 3-2 என்ற கோல் கணக்கிலும், உருகுவேவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமரவைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட 21 வயதான கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவர், இன்றைய ஆட்டத்திலும் தவிர்க்க முடியாத வீரராக திகழக்கூடும்.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமலேயே போர்ச்சுகல் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை இதே பாணியை சாண்டோஸ் பின்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. முன்களத்தில் ஜோவா ஃபெலிக்ஸ், புரூனோ பெர்னாண்டஸ் ஆகியோரும் வலுவான வீரர்களாக திகழ்கின்றனர்.
கத்தார் உலகக் கோப்பையில் மொராக்கோ அணி இதுவரை எதிரணியிடம் இருந்து கோல் வாங்கவில்லை. லீக் சுற்றில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் மொராக்கோ வீரர் நயீஃப் அகுர்ட் சுயகோல் அடித்திருந்தார். மொராக்கோவின் டிபன்ஸ் பலமாக உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வரிசையில் ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் களமிறங்கினால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
ரொனால்டோ மிரட்டினாரா? - சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்க வரிசையில் களமிறக்கப்படாமல் 73-வது நிமிடத்தில் பதிலி வீரராக களமிறக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ரொனால்டோ, தேசிய அணியை விட்டு வெளியேறப் போவதாக கூறி அணி நிர்வாகத்தை மிரட்டியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதை போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
3-வது முறையாக மோதல்: உலகக் கோப்பையில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் போர்ச்சுகலை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது மொராக்கோ. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் மொராக்கோவை 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago