இஷான் கிஷன் உலக சாதனை: வங்கதேசத்தை 227 ரன்களில் வீழ்த்தியது இந்தியா

By செய்திப்பிரிவு

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற உலக சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இது.

அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் விளையாடிசதமடித்தார். கோலிக்கு சர்வதேச அளவில் இது அவருடைய 72 ஆவது சதமாகும். இந்தச் சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார். முதலிடத்தில் நூறு சதங்களுடன் சச்சின் தொடர்கிறார்.

2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயஸ் அய்யர் 3 ரன்னும், கே.எல்.ராகுல் 8 ரன்னும், அக்சர் படேல் 20 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான அனமுல் ஹக் 8 ரன்களில் வெளியேற லிட்டன் தாஸ் 29 ரன்களில் அவுட்டானார். ஷாகிப் அல் ஹசன் நிலைத்து ஆடி 43 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து முஸ்ஃபிகூர் ரஹீம் (7), யாசீர் அலி (25), மஹமுதுல்லா (20) ரன்களில் நடையைக்கட்ட அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதனாலேயே அந்த அணி 34 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களில் சுருண்டது. இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இரண்டு போட்டிகளில் வென்றதால், இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE