தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசில் அணியை வெளியேற்றியது குரோஷியா. பெனால்டி ஷூட்-அவுட்டில் அந்த அணிக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இது.
உலகக் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இருந்தது பிரேசில். ஆனால் அந்த அணிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. 90 நிமிடங்கள் கடந்தும் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க மேலும் 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது.
அந்த கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் (105+1) கோல் பதிவு செய்து அசத்தினார் பிரேசில் வீரர் நெய்மர். கிட்டத்தட்ட அரையிறுதியில் அடி எடுத்து வைத்துவிட்ட தருணம் போல அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர். ஆனால், அதற்கான பதில் கோலை 117-வது நிமிடத்தில் பதிவு செய்தார் குரோஷிய வீரர் புருனோ பெட்கோவிச். 120 நிமிடங்கள் ஆட்டத்திற்கு பிறகு 1-1 என இரு அணிகளும் சமமாக இருந்த காரணத்தால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.
அதில் குரோஷியா 4 கோல்களை பதிவு செய்தது. பிரேசில் 2 கோல்களை மட்டுமே பதிவு செய்தது. குரோஷிய அணியின் கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச் சிறப்பாக பிரேசில் வீரர்களின் பெனால்டி வாய்ப்புகளை தடுத்திருந்தார். அதன் மூலம் அந்த அணி இப்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் குரோஷியா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.