ரோஹித் - திராவிட் கூட்டணி நீடித்தால் இந்திய அணி உதிர்ந்து விடும்; மீண்டும் கோலியைக் கேப்டனாக்க வேண்டும்

By ஆர்.முத்துக்குமார்

டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய காரணத்தினால் இந்தியாவின் சிறந்த கேப்டன் விராட் கோலியை நெருக்கி அவரிடமிருந்து கேப்டன்சியைப் பிடுங்கி ரோஹித் சர்மாவிடம் கொடுத்தனர். ரோஹித் சர்மா ஒரு கேப்டன்சி வீரரா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்ற வகையில் இப்போது இந்திய அணி உடைந்து நொறுங்கி விடும் அபாயத்தில் உள்ளது. ஃபார்மில் இல்லாமல் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடையும் வங்கதேச அணியிடம் சூப்பர் ஸ்டார்கள் நிரம்பிய இந்திய அணி தோல்வி அடைகிறது என்றால் உண்மையில் இது கவலைக்குரிய விஷயமாகும்.

2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான 12-14 வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் ரோஹித் சர்மா-திராவிட் கூட்டணி தோல்வியடையும் என்றே தெரிகிறது. ஸ்டார் வீரர்கள் ஒரு தொடரில் விளையாடினால் இன்னொரு தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்கின்றனர். கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் சீரான பார்மில் இல்லாத போதே ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர். பும்ரா கதை என்னவென்றே தெரியவில்லை, ஜடேஜா, கே.எல்.ராகுல் உடல்தகுதி கேள்விக்குரியதாக உள்ளது. உடல் தகுதி பட்டியலில் ரோஹித் சர்மாவும் தற்போது இணைந்துள்ளார். அணியில் முழு உடல்தகுதியுடன் பிரமாதமாக இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. ஆனால் அவரது பேட்டிங் பார்ம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது, கோலிக்கே உரித்தான சீரான முறையில் ரன்கள் எடுக்கும் தன்மை இப்போது இல்லை என்றாலும் கோலியை நம்பலாம். மீண்டும் பழைய பார்முக்குத் திரும்பும் தன்மையை டி20 உலகக்கோப்பையில் நிரூபித்தார். பீல்டிங்கில் கில்லியாக திகழ்கிறார். அணியை வழிநடத்துவதிலும் உத்வேகமாக செயல்பட்டவர்தான்.

இந்நிலையில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, நம்ப முடியாத ஷ்ரேயஸ் அய்யர், மணிக்கு 125 கிமீ வேகம் தாண்டாத தீபக் சாஹர் அடிக்கடி காயம் அடையும் வீரராக இருக்கிறார், ஷர்துல் தாக்கூர் அடிவாங்கும் பவுலர். பும்ரா காயத்திலிருந்து வந்து எப்படி வீசுவார் என்று தெரியாது, இப்படிப்பட்ட டீமை வைத்துக் கொண்டு உள்நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பையில் களமிறங்கினால் ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்’ என்ற வடிவேலு நகைச்சுவை போல்தான் முடியும்.

தோனி ஒன்று சொல்வார். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு முன்னால் புதிய வீரர்களாக வருவோர் குறைந்தது 60-65 சர்வதேசப் போட்டிகள் விளையாடி அனுபவம் பெற்ற வீரர்களாக இருக்க வேண்டும், அல்லது அதற்காக அப்படித் தயார் செய்ய வேண்டும் என்பார். இதுதான் அணியை கட்டமைக்கும் விஷயமாகும். அதி வணிக வீரர்கள், சூப்பர் ஸ்டார்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்காக விளிம்பு நிலை வீரர்களான ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, முகமது சிராஜ் உள்ளிட்டோரைப் பயன்படுத்தி விட்டு அவர்கள் வந்த பிறகு இவர்களைத் தூக்கி எறியும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ கலாச்சாரத்தை ரோஹித்-திராவிட் கூட்டணி கடைபிடித்து வருவது கண்கூடு. இதனால் என்ன ஆகிறது எனில் இந்திய அணி பூப்போல வாடி உதிரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

எல்லா வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஆட உடல்தகுதியை ஃபிட் ஆக வைத்திருப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர், இதற்கு பிசிசிஐ-யும் தேர்வுக்குழுவும் இடம் கொடுத்து சர்வதேச போட்டிகளைக் கோட்டை விடுவதற்கு வழிவகை செய்து கொடுக்கின்றனர். ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் தோல்வி, இப்போது வங்கதேசத்திடம் வங்கதேச மண்ணில் தொடர்ச்சியாக 2 ஒருநாள் தொடர்களை இழந்துள்ளது இந்திய அணி.

பந்து வீச்சு பலவீனம் வெளிப்படை: இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. முகமது சிராஜ் தவிர வேறு யாரும் நன்றாக வீசுவதில்லை, வங்கதேச குழிப்பிட்சிலேயே அக்சர் படேல் பல்லிளிக்கிறார். டி20 உலகக்கோப்பையின் போது சாஹலை உட்கார வைத்து அவரது நம்பிக்கையையும் காலி செய்து விட்டனர். இந்திய அணியின் பந்து வீச்சு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்றால், வங்கதேசத்தின் ஆஃப் ஸ்பின் பவுலர் 69/6 என்ற நிலையில் இறங்கி 83 பந்துகளில் சதம் எடுக்கிறார் எனும் போதே தெரிகிறது. சூப்பர் ஸ்டார் இந்திய அணியை 2 போட்டிகளில் மெஹதி ஹசன் பந்தாடுகிறார் என்றால் உண்மையில் இந்திய அணியில் சீரியசான பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பது தெளிவு.

2020 முதல் ஒருநாள் போட்டிகளில் இந்திய மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் என்று கிரிக் இன்போ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கின்றது. மிடில் ஓவர்களில் ஒருநாள் போட்டிகளில் டைட்டாக வீசுபவர்களில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், பும்ரா, புவனேஷ்வர் குமார் உள்ளனர். ஆனால் இவர்கள் வீசிய பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளைப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.

தோற்று விட்டு எப்போதும் கற்றுக் கொள்கிறோம் என்று கூறினால் எப்படி? ஒரு கட்டத்தில் கற்றல் முடிந்து செயல்வினையாக்கம் பெற வேண்டாமா? முழு கோச் ஆக திராவிட் செயல்படவில்லை என்பதுதான் இங்கு உறுத்துகிறது. ஒரு இளம் வீரர் சொல்லலாம், தோல்வியிலிருந்து கற்றுக் கொள்கிறோம் என்று ஆனால் திராவிட் போன்ற பயிற்சியாளர் கூறக் கூடாது, ரோஹித் சர்மா ஒரு கேப்டன் அவரும் கூறக்கூடாது.

ஜனவரிக்கு மேல் புத்தாண்டில் சுபயோகம் கூடிய சுப தினத்தில் ஒரு ஃபிட் ஆன முழுமையான அணியை கண்டுப்பிடிப்போம் என்கிறார் திராவிட். பார்ப்போம். அணித்தேர்வில் திறந்த மனது வேண்டும். ஏன் சர்பராஸ் கான், பிரிதிவி ஷா, சஞ்சு சாம்சன், ராகுல் திவேத்தியா, தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் ஜெய்ஸ்வால், தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் போன்ற வீரர்கள் செலக்டர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

கோலி-ரவிசாஸ்திரி கூட்டணியில் ரிஷப் பண்ட் என்ற ஒரு வீரரை உருவாக்கிக் கொடுத்தார்கள், ஆனால் இப்போது திராவிட்-ரோஹித் கூட்டணி அவரது தன்னம்பிக்கையையே காலி செய்து விட்டனர். மணீஷ் பாண்டே எப்படி காலி செய்யப்பட்டாரோ, அம்பதி ராயுடு எப்படி ஒதுக்கப்பட்டாரோ, இப்போது அந்தப் பட்டியலில் ஷுப்மன் கில் இருக்கிறார், அவரை ஒரு பதிலி வீரர் போல் யூஸ் செய்வது சீனியர் வீரர் அதாவது அதி வணிக வீரர் உள்ளே வரும்போது நீக்கிவிட வேண்டியது. கவுண்டமணி பாணியில் கூற வேண்டுமென்றால், ‘இந்த சீனியர்கள் தொல்லை தாங்க முடிலப்பா!’

கோலியை மீண்டும் கேப்டனாக்க வேண்டிய அவசியம்!

மேற்கண்ட காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அடிக்கடி காயமடையும் பூஞ்சை உடம்புக் காரரான ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து விடுவித்து விராட் கோலியை மீண்டும் கேப்டனாக்கினால்தான் இந்திய அணி இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும். வங்கதேசத்திடம் தோல்வி என்பது மிகப்பெரிய இழிவு என்பதாகவே பார்க்கப்பட வேண்டும். மேலும் இப்போதுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடினால் நிச்சயம் தோல்வியையே தழுவும். ஆப்கானிஸ்தானை விட இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் குறைவான தரத்தில் உள்ளது.

இந்தச் சூழ்நிலைகளிலிருந்து மீண்டு திரும்பவும் ஆக்ரோஷ வழிகளுக்கும் எதிரணியினரை என்ன சேதி என்று கேட்டு அவர்களை நிலைகுலையச் செய்வதற்கும் விராட் கோலியையே மீண்டும் கேப்டனாக்க வேண்டும். டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றில் வெளியேறியதற்காக கோலியின் கேப்டன்சியை பிடுங்கினர். ஆனால் அதன் பிறகு அணியே இப்போது உதிர்ந்து விழும் போல் ஆகிவிட்டது.

இந்திய அணித்தேர்வுக்குழுவும் பயிற்சியாளர் திராவிட்டும் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் என்பதை அதி மதிப்பீடு செய்கின்றனர். அவ்வாறு செய்யாமல் பெஞ்சிலிருந்து தேறும் வீரர்களை அணிக்குள் எடுத்து தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து 2023 உலகக்கோப்பைக்குள் தோனி கூறுவது போல் 60-65 போட்டிகள் வேண்டாம், குறைந்தது ஒரு 30-35 சர்வதேசப் போட்டிகளிலாவது ஆடி அனுபவம் பெறச் செய்து அவர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டு, இதோடு தூய திறமைகளும் கொட்டிக் கிடக்கிறது, சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால், பிரிதிவி ஷா போன்றோரையும் முயற்சி செய்து அணியைக் கட்டமைக்க இப்போது கோலியின் சேவை இந்திய அணிக்குத் தேவை, எனவே எந்த வித கவுரவமும் பார்க்காமல் கோலியிடம் மீண்டும் பேசி கேப்டன்சியைக் கொடுப்பதே இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது. அப்படியே திராவிட்டுக்குப் பதிலாக இன்னும் ஆக்ரோஷமான பயிற்சியாளரைக் கண்டடைவதும் முக்கியம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்