FIFA WC 2022 | மரடோனாவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி - அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி

By செய்திப்பிரிவு

தோகா: கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டியாகோ மரடோனாவின் சாதனையை முறியடித்துள்ளார் சக நாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி.

அர்ஜென்டினா அணி சார்பில் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார் மரடோனா. இந்த சாதனையை கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முயறியடித்தார் மெஸ்ஸி. நள்ளிரவு நடந்த ஆட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா என்றார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இருக்கும் மெஸ்ஸி, இந்த தொடரிலேயே அந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி: முன்னதாக, கத்தாரின் அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் நள்ளிரவு மோதின. காலிறுதிக்கு தகுதிபெற இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அர்ஜென்டினா, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார்.

இரண்டாம் பாதியில் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தாலும், இறுதிக்கட்டத்தில் கோல் அடிக்க அந்த அணியால் இயலவில்லை. இதனால், அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன் காலிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE