கத்தாரில் நடைபெறும் 2022 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. நள்ளிரவு நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 என்று அபார வெற்றி பெற்றதன் காரணம், பயிற்சியாளர் சவுத்கேட் செய்த மாற்றங்களினால்தான் என்றால் மிகையல்ல.
இடைவேளை வரை இங்கிலாந்து பாஸிங், ட்ரிப்ளிங்கில் மந்தமாக இருந்ததால் கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆனால், இடைவேளைக்குப்பிறகுதான் சவுத் கேட் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் மிகச் சரியாக வேலை செய்தது. மார்கஸ் ராஷ்போர்ட் 50 மற்றும் 68-வது நிமிடங்களில் கோல்களை அடிக்க, 51-வது நிமிடத்தில் ஹாரி கேனின் அசிஸ்ட்டுடன் பில் ஃபோடன் ஒரு கோலை அடித்தார். 64 ஆண்டுகளில் முதல் முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வேல்ஸ் அணியின் அடுத்த சுற்றுக்கு கனவு தகர்ந்தது.
அமெரிக்காவுக்கு எதிராக மந்தமான ட்ராவுக்குப் பிறகு சவுத்கேட் செய்த மாற்றங்கள்: மாற்றங்கள் செய்ய வேண்டும், அதை விரைவில் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆனால் இங்கிலாந்து போன்ற அணிகள் எப்போதும் மாற்றம் என்ற விஷயத்தில் கன்சர்வேட்டிவ் ஆக செயல்படுவார்கள். ஆனால் சவுத்கேட் அமெரிக்காவுக்கு எதிரான டிராவுக்குப் பிறகே அணியில் மாற்றங்களைப் புகுத்தினார்.
» FIFA WC 2022 | ஈக்வேடாரை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது செனகல்
» FIFA WC 2022 | குரூப் சுற்றோடு வெளியேறியது கத்தார்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து
அமெரிக்காவுக்கு எதிராக ஆடிய அணியிலிருந்து 4 மாற்றங்களை இந்தப் போட்டிக்காக மேற்கொண்டார். ராஷ்போர்ட், ஃபோடன், ஜோர்டான் ஹெண்டர்சன், கைல் வாக்கர் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்தார். ஆனாலும், வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் 45 நிமிட ஆட்டம் மந்தமாகவே இருந்தது. காரணம் இங்கிலாந்து வேகமாக ஆடவில்லை. இத்தனைக்கும் வேல்ஸ் அணியின் தற்காப்பு அரண் பலவீனமாகவே இருந்தது.
ஆனால், முதல் பாதிக்குப் பிறகு பயிற்சியாளர் சவுத்கேட் இங்கிலாந்து வீரர்களுக்கு விட்ட ‘டோஸில்’ இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தில் சூடுபிடித்தது. 50-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக்கை ராஷ்போர்ட் கோலாக மாற்றினார். ஆனால், வேல்ஸ் கோல் கீப்பர் தவறான திசையில் இருந்ததே காரணம். ஃபோடனும் தன்னை அணியில் தேர்வு செய்ததை நியாயப்படுத்தும் விதமாக ஒரு கோலை அடித்ததோடு இங்கிலாந்துக்கு போதிய உத்வேகத்தை அளித்தார். ஃபோடனின் கோல் ஒருவிதத்தில் ராஷ்போர்டின் உதவியினால்தான் விழுந்தது.
ரவுண்ட் 16-க்குள் நுழைந்த இங்கிலாந்து ஞாயிறன்று செனகல் அணியை முதலில் சந்திக்கிறது. இது இங்கிலாந்துக்கு பெரிய சவாலாகவே இருக்கும்.
இங்கிலாந்து அணி மாற்றங்களைச் செய்த அதேவேளையில் வேல்ஸ் அணி சற்றே வயதான காரத் பேல், ஆரோன் ராம்சேவுடனேயே தொடர்ந்தது ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. இங்கிலாந்து ஆட்டத்தின் இறுதிக் கணங்களில் இன்னும் ஒன்றிரெண்டு கோல்களை அடித்திருக்கலாம். கேலம் வில்சன் அற்புதமாக அடித்த ஷாட்டை வேல்ஸ் தடுத்து விட்டது. கடைசியில் ஜான் ஸ்டோன்ஸுக்கு கோலுக்கு 6 அடி தூரத்தில் கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் கோலுக்கு மேலே அடித்து வீணடித்தார்.
இங்கிலாந்து அணியில் பிரச்சினை இல்லாமல் இல்லை. அந்த அணியில் அவரவருக்கான இடத்தில் ஆடுவதில்லை. இடது புறம் ஆட வேண்டிய ராஷ்போர்ட் அவ்வப்போது உள்ளே அல்லது நடுவே வருகிறார். அதேபோல் வலது விங்கில் ஆட வேண்டிய ஃபோடனும் உள்ளே வருகிறார். ஹாரி கேன் மந்தமாக ஆடுகிறார். ஒரே ஸ்பாட்டுக்கு இவர்கள் மூவரும் வந்து ஒருவருக்கொருவர் பந்தை மாறி மாறி அடித்துக் கொண்டு ஆட்டத்தை மந்தப்படுத்தினர்.
இங்கிலாந்து அணியில் ஒரு கைலியன் மபாப்பேயோ, லியோனல் மெஸ்ஸியோ இல்லை. எனவே, அந்த அணி அட்டாக் செய்யும் உத்தியை மாற்ற வேண்டியுள்ளது. இல்லையெனில் எதிரணியினர் அந்த அணியின் மூவை எளிதில் கண்டுணர்ந்து தோற்கடிக்க வாய்ப்பு உண்டு. இன்னும் சரியான ஒரு அணிச்சேர்க்கையை சவுத்கேட் வந்தடையவில்லை என்று இங்கிலாந்து அணி பயிற்சியாளர் மீது அங்கு ஒரு விமர்சனம் இருந்து வருகிறது.
இதுவரை எப்படியோ வரும் ஞாயிறன்று முக்கியமான நாக் அவுட் போட்டியில் செனகலை எதிர்கொள்ளும்போது, அன்று அமெரிக்காவுக்கு எதிராக ஆடியது போலவோ இன்று வேல்ஸுக்கு எதிராக முதல் பாதியில் ஆடியது போலவோ ஆடினால் இங்கிலாந்து வெளியேற வேண்டியதுதான்.
ஒருவிதத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரச்சினைதான் இங்கிலாந்து கால்பந்து அணிக்கும். ஐபிஎல் தொடரில் ஆடி பணம், புகழ், அதோடு ஒரு சோம்பேறித்தனத்தையும் தங்களுக்குள் ஏற்றிக் கொண்ட இந்திய அணி வீரர்கள் ஐசிசி தொடரில் உதைபடுவது போல்தான் இங்கிலிஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட ஏகப்பட்ட கால்பந்து லீகுகளில் ஆடி ஆடி களைப்படைந்த கால்களைக் கொண்ட வீரர்களை இங்கிலாந்தும் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago