FIFA WC 2022 | அது ப்ரூனோவின் கோல்... ரொனால்டோவுக்கு தொடர்பு இல்லை: சென்சார் மூலம் அடிடாஸ் உறுதி

By செய்திப்பிரிவு

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் முதல் கோலை பதிவு செய்தது யார் என்ற விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அடிடாஸ் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது.

ஒருபக்கம் ரொனால்டோ கோல் போட்டதாக கொண்டாடித் தீர்த்தார். மறுபக்கம் அது ப்ரூனோ பதிவு செய்த கோல் என நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். ‘ஹேர் ஆஃப் காட்’ எனவும் ரசிகர்கள் சிலர் இந்த கோலை சொல்லி வருகின்றனர். இப்படி இருக்க, அடிடாஸ் களத்தில் குதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தொடரில் விளையாடப்பட்டு வரும் ‘அல் ரஹ்ல’ பந்து அடிடாஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான். அதனால், தொழில்நுட்பத்தின் துணை கொண்டு கோலை பதிவு செய்தது ரொனால்டோவா அல்லது ப்ரூனோ பெர்னாண்டஸா என்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நடப்பு தொடரில் விளையாடப்பட்டு வரும் பந்தில்தான் சென்சார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளதாம். அந்த தொழில்நுட்பம் நடுவர்களுக்கு விஏஆர் தொழில்நுட்பத்தில் பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. பந்தில் உள்ள சென்சார் மூலம் வீரர்களின் லேசான டச்களை கூட நடுவர்களால் அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சென்சார் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் பந்து பேட்டில் பட்டதா என்பதை ஸ்னிக்கோ மீட்டர் உறுதி செய்யும். அதுபோல இந்த சென்சார் செயல்படுகிறது. ப்ரூனோ டச் செய்தபோது அது பந்தில் பட்டது சென்சாரில் தெளிவாக தெரிகிறது. ஆனால், பந்து ரொனால்டோவை கடக்கும் போது நியூட்ரலாக உள்ளது. இதன் மூலம் அது ப்ரூனோவின் கோல் என்பதை அடிடாஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE