கத்தாரில் நடைபெற்று ஃபிஃபா உலகக் கோப்பை 2022-ன் குரூப் ஜி போட்டியில் தைரியமாக ஆடிய செர்பியாவை பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பிரேசில் வீரர் ரிசார்லிசன் 2 கோல்களை அடித்தார். இவர் அடித்த இரண்டாவது கோல் அற்புதத்தின் உச்சம். மேஜிக்கல் கோல் என்பார்களே அதுதான் இந்த கோல். இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் என்று இது வர்ணிக்கப்படுகிறது.
ஆட்டம் தொடங்கியது முதல் செர்பியா மிக தைரியமாக ஆடியது. முதல் பாதிவரை பிரேசிலினால் பல முறை செர்பிய கோல் வட்டத்துக்குள் ஊடுருவ முடிந்தாலும் செர்பிய கொல் கீப்பர் வான்யா மிலின்கோவிக் பிரேசிலின் ஸ்ட்ரைக்கிங் ஆற்றலுக்கு கடும் முட்டுக்கட்டைகளைப் போட்டார். முதல் பாதியில் பிரேசில் வீரர்களிடமே பந்து அதிகம் இருந்தது.
ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் பிரேசிலின் தியாகோ சில்வா தாழ்வாக கோலை நோக்கி ஒரு ஷாட்டை அடிக்க கோல் கீப்பர் மிலின்கோவிக் அற்புதமாக வெளியே தள்ளி விட்டார். அதேபோல் ரபீனியா கோலை நோக்கி அடித்த ஷாட்டையும் மிலின்கோவிக் தடுத்து விட்டார்.
இடைவேளைக்குப் பிறகு பிரேசில் தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி பயங்கரமாக ஆடியது. அதாவது கலைபூர்வமான கால்பந்தாட்டம் இது. மீண்டும் ரபீன்யா விங்கிலிருந்து மேற்கொண்ட முயற்சியை செர்பிய கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். பிறகு பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் தூரத்திலிருந்து அடித்த துல்லிய ஷாட் கோல் போஸ்ட்டைத் தாக்கி கோல் கம்பமே ஒட்டுமொத்தமாக ஆடியது, பயங்கரமான ஷாட் ஆனால் கோல் ஆகவில்லை.
» கோலிவுட் ஜங்ஷன்: மீண்டும் நிஷாந்தி !
» பிஸ்லரி நிறுவனத்தை ரூ.7,000 கோடிக்கு வாங்குகிறது டாடா குழுமம்
கடைசியில் 62-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் அடித்த ஷாட்டை செர்பிய கோல் கீப்பர் சேவ் செய்தபோது ஏற்பட்ட தளர்வை பயன்படுத்தி ரிசார்லிசன் கோலாக மாற்ற பிரேசில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
மேஜிக்கல் கோல் - இந்த உலகக் கோப்பையின் ஆகச் சிறந்த கோல்: ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் களத்தின் இடது புறத்தில் இரண்டு பிரேசில் வீரர்கள் ஒன் டு ஒன் என்று பந்தை எடுத்துச் செல்ல வினிஷியஸ் இடது புறம் பாக்ஸுக்கு வெளியே இருந்து பந்தை உள்ளுக்குள் அடித்தார். அங்கு பந்தை கட்டுப்படுத்துவது போல் நின்றிருந்த ரிசார்லிசன் சற்றே காற்றில் எழும்பிய பந்தை இடது காலால் நிறுத்தி அப்படியே சுழன்று படுக்கை வசமாகி வலது காலால் ஒரு உதை உதைத்தாரே பார்க்கலாம்... சற்றும் எதிர்பாராத ஒரு மூவ், பந்து கோலுக்குள் பறந்தது. வலையை மோதியது. இந்த உலகக் கோப்பையின் ஆகச் சிறந்த கோல் இதுதான்.
பொதுவாக இதுபோன்ற ஷாட்களை பயிற்சியில் ஆடிப்பார்ப்பார்கள், அல்லது லீகுகளில் ஆடுவார்கள், சீரியசான உலகக் கோப்பைப் போட்டிகளில் அதுவும் கோல் மவுத்தில் வந்து செய்வது பெரும்பாலும் ரிஸ்க் என்று ஆடமாட்டார்கள். ஆனால் ரிசார்லிசன் பயிற்சி எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது இந்த மேஜிக்கல் ஷாட்டை வைத்து ஊகிக்க முடிகிறது.
இடது காலால் நிறுத்தி பந்து காற்றில் இருக்கும்போதே சுழன்று உடலை வளைத்து வலது காலால் கோலுக்குள் அடித்தார். இன்னும் நம்ப முடியாத கோலாகவே அது உள்ளது. பிரேசில் 2-0 என்று முன்னிலை பெற்றது. ரிசார்லி சன் இந்த அதிசய கோலுடன் இந்த ஆண்டில் பிரேசிலுக்காக 9 கோல்களை அடித்துள்ளார்.
நெய்மார் காயம் - செர்பியாவின் டைட் கேம்: பிரேசிலின் நட்சத்திரம் நெய்மாரை செர்பியா சரியாகக் கையாண்டது என்பதை விட செர்பியா ஏகப்பட்ட ஃபவுல்களைச் செய்து நெய்மாரை மற்ற அணிகள் எப்படி கையாளுமோ அப்படிக் கையாண்டது. செர்பியாவின் 12 ஃபவுல்களில் 9 ஃபவுல்கள் நெய்மாருக்கு எதிராக செய்யப்பட்டதே. கடைசியில் வழக்கம் போல் கண்ணீருடன் காயத்தினால் வெளியேறினார் நெய்மார்.
செர்பியாவை குறை சொல்ல முடியாது, அதன் உத்தி பெரும்பாலும் பிரேசிலை முடக்கியது, கோல் கீப்பர் வான்யா மிலின்கோவிக் அற்புதமாக தடுத்தார். அதனால், பிரேசில் சில தொலை தூர ஷாட் முயற்சிகளை மேற்கொள்ள நேரிட்டது. ஏனெனில் இடது, வலது, சற்றே மேல் என்று எப்படி அடித்தாலும் செர்பிய கோல் கீப்பர் தடுத்து விடுகிறார்.
செர்பிய பயிற்சியாளர் ட்ரேகன் ஸ்டாய்கோவிக் முதல் பாதியில் நடுக்களத்தில் செர்பிய வீரர்களை நெரிசலாக அமைத்தார். தடுப்பு உத்தியை அத்தனை நெருக்கமாக அமைக்கவில்லை. இவரது இந்த உத்தியினால் பிரேசில் ஒரு அணியாக ஆடும் அச்சுறுத்தலை முடக்கி தனி நபர்களின் சூரத்தன ஆட்டத்தை ஆடவைத்தார் அவர்.
ஆனால், செர்பிய முன்கள வீரர்களிடம் வேகம் இல்லை. இதனால் எதிர்த் தாக்குதல் நடத்த முடியாமல் போனது. டியூசான் டாடிக், அலெக்சாண்டர் மிட்ரோவிக், செர்ஜி மிலின்கோவிக் ஆகிய முன்கள வீரர்கள் வேகம் காட்டாமல் ஆடியதால் பந்தை வேகமாகக் கொண்டு செல்ல முடியவில்லை.
பிரேசிலின் ரிசார்லிசன் 2 கோல்களை அடித்திருக்கலாம். ஆனால், அருமையாக ஆடிய இன்னொரு வீரர் வினிசியஸ்தான். இவர் களத்தின் பக்கவாட்டில் காட்டிய வேகம் பல நேரங்களில் முதல் பாதியில் பிரேசிலுக்கு கோல் வாய்ப்பை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.
ரிசார்லிசன் தன் முதல் உலகக் கோப்பைத் தொடரில் ஆடுகிறார். கரேகா (1990), நெய்மார் (2014), பிலிப் கூர்ட்டின்யோ (2018) ஆகியோருக்குப் பிறகு முதல் 2 கோல்களை உலகக் கோப்பையில் அடித்த வீரர் ஆனார் ரிசார்லிசன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago