ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு குறித்து தவான் ஓபன் டாக்

By செய்திப்பிரிவு

இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு குறித்து கேப்டன் ஷிகர் தவான் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை தவான் தலைமை தாங்குகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் அண்மையில் டி20 தொடரில் விளையாடி இருந்தன. இதில் இந்தியா தொடரை வென்றிருந்தது. இந்த நிலையில் நாளை 3 போட்டிகள் ஒருநாள் தொடர் துவங்க உள்ளது. இந்தச் சூழலில் தவான் இதனை தெரிவித்துள்ளார்.

“எனக்கு தெரிந்து கடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடி இருந்தும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காத அந்த இக்கட்டான கால கட்டத்தை பெரும்பாலான வீரர்கள் தங்கள் கெரியரில் கடந்து வந்துள்ளனர். இப்போது அங்கு சஞ்சு சாம்சன் உள்ளார். வீரர்களுடன் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் பேசியாக வேண்டும். அப்போதுதான் சஞ்சு போன்ற வீரர்களுக்கு தாங்கள் அணியில் ஏன் எடுக்கப்படவில்லை என்பது குறித்த தெளிவான புரிதல் கிடைக்கும்.

அடிப்படையில் பார்த்தால் இதெல்லாம் அணியின் நலனுக்காக எடுக்கப்படும் முடிவு. அணியின் காம்பினேஷனை பொறுத்தே ஆடும் லெவனை நிர்ணயிக்க முடியும்” என தவான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார் சஞ்சு சாம்சன். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 10 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 294 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE