36 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் வலம் வந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா - மிகப்பெரிய அடி என மெஸ்ஸி வருத்தம்

By செய்திப்பிரிவு

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸை, ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின் சவுத் அப்துல்ஹமீத். இதனால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து சீரான இடைவெளியில் அர்ஜென்டினா அடித்த 3 கோல்கள் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சவுதி அரேபியா தனது முதல் கோலை அடித்தது. ஃபெராஸ் அல்-பிரிக்கனிடம் பந்தை பெற்ற சலே அல்-ஷெஹ்ரி, அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரோமெரோவை கடந்து பந்தை கோல் வலைக்குள் துணித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

அடுத்த 5-வது நிமிடத்தில் சவுதி அரேபியா 2-வது கோலை அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 53-வது நிமிடத்தில் அல்-தவ்சாரி அற்புதமான வகையில் இரு டிபன்டர்களுக்கு ஊடாக இந்த கோலை அடித்தார். இதனால் சவுதி அரேபியா 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.

சவுதி அரேபியா அபாயகரமான வகையில் நெருக்கமாக டிபன்ஸை பலப்படுத்தியது. இதனால் அர்ஜென்டினா அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. மெஸ்ஸின் கோல் அடிக்கும் முயற்சியை சவுதி அரேபியாவின் சென்டர் பேக் வீரர் ஹசன் அல்-தம்பக்தி இடைமறித்தார். கோல் கம்பத்துக்கு மிக நெருக்கமாக இருந்து நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ அடித்த ஷாட்டை, சவுதி அரேபிய அணியின் கோல்கீப்பர் அல்-ஓவைஸ் கோல் விழ விடாமல் அற்புதமாக தட்டிவிட்டார். கடைசி வரை போராடியும் அர்ஜென்டினா அணியால் ஆட்டத்தை டிரா செய்ய முடியாமல் போனது. முடிவில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் இரு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றி வேட்டைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் தென் அமெரிக்கநாட்டுக்கு எதிராகவும், அர்ஜென்டினாவுக்கு எதிராகவும் சவுதி அரேபியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் அர்ஜென்டினாவுக்கு எதிராக 4 முறை சவுதி அரேபியா மோதியிருந்தது. இதில் இரு தோல்விகளையும், இரு டிராக்களையும் பதிவு செய்திருந்தது.

டென்மார்க் ஆட்டம் டிரா: ‘டி’ பிரிவில் எஜுகேசன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் – துனிசியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

வேல்ஸ் - அமெரிக்கா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு ‘பி’ பிரிவில் உள்ள வேல்ஸ் – அமெரிக்கா அணிகள் அகமது பின் அலி மைதானத்தில் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. அமெரிக்க தரப்பில் 36-வது நிமிடத்தில் திமோதி வெயா கோல் அடித்தார். 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் வேல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரேத் பேல் கோல் அடித்தார். உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு வேல்ஸ் அணி களமிறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதும்.. இப்போதும்..:

உலகக் கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினா அணிக்கு இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும், அதிக வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி. 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையில் மெஸ்ஸி கோல் அடித்த போது அவருக்கு 18 வயது 357 நாட்கள் ஆகும். தற்போது சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த போது மெஸ்ஸிக்கு 35 வயது 151 நாட்கள்.

மிகப்பெரிய அடி - மெஸ்ஸி வருத்தம்: சவுதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்ததும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி கூறும்போது, “சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப் பெரிய அடி. இந்த தோல்வி வலிக்கிறது. ஆனால் நாங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த குழு எங்களை கைவிடப்போவது இல்லை. அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோவை வீழ்த்த முயற்சி செய்வோம்.

சவுதி அரேபியா நல்ல வீரர்களைக் கொண்ட ஒரு அணி என்பதை நாங்கள் அறிவோம், அவர்கள் பந்தை நன்றாக நகர்த்துகிறார்கள் மற்றும் டிபன்ஸில் உயர்வரிசையில் விளையாடுகிறார்கள். சாக்கு போக்கு கூற விரும்பவில்லை. அடுத்த ஆட்டத்தில் முன்பைவிட ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்