FIFA WC 2022 அலசல் | கோல் கீப்பர் அட்டகாசம்... ஆஃப் சைடுகள் பல... - அர்ஜென்டினாவை சவுதி அரேபியா சாய்த்த ‘சம்பவம்’!

By ஆர்.முத்துக்குமார்

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘சி’ போட்டியில், உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் சவுதி அரேபியா சற்றும் எதிர்பாராத வெற்றியைப் பெற்று, அர்ஜென்டினா ரசிகர்களுக்கும், உலக அளவில் அந்த அணியின் கால்பந்து ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதோடு குரூப் ‘சி’ பிரிவில் 3 புள்ளிகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

மெஸ்ஸி சாதனை வீண்! - லியோனல் மெஸ்ஸி முதல் கோலை பெனால்டி கிக்கில் அடித்து 4 உலகக் கோப்பை தொடரில் முதல் கோலை அடித்த வகையில் அர்ஜென்டினா கடந்த கால மாஸ்டர் மரடோனாவின் சாதனையைக் கடந்ததோடு நடப்பு உலகக் கோப்பையில் ஆடும் இன்னொரு ஜாம்பவானும், போர்ச்சுகல் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையையும் சமன் செய்தார். இத்தகைய மகிழ்ச்சியுடன் தொடங்கிய அர்ஜென்டினா ஆட்டம் முதல் பாதிக்கு பிறகு தடம் புரண்டது, ஏனெனில் சவுதி அரேபியாவின் அற்புதமான அட்டாக்கிங் ஆட்டமும், அதோடு சவுதி அரேபியா கோல் கீப்பர் அலோவைஸின் அபாரமான கோல் கீப்பிங்கும் அரிய வெற்றியை அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

10-வது நிமிடத்தில் மெஸ்ஸி பெனால்டி கிக் மூலம் சாதனை கோலை அடிக்க சவுதி அரேபியாவின் சலே அல் ஷேஹ்ரி 48-வது நிமிடத்தில் அட்டகாசமான முதல் கோலை அடித்து சமன் செய்தார். அடுத்த 5 நிமிடத்தில் ஒரு அற்புதமான லாங் பாஸை சலீம் அல் டவ்சாரி வெற்றிக்கான கோலாக மாற்றினார். சவுதி அரேபியா இடைவேளைக்குப் பிறகு 5 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அர்ஜென்டினாவுக்கு ஆப்பு வைக்க, மொத்தமாக 3 உறுதியான அர்ஜென்டினா கோல்களை சவுதி கோல் கீப்பர் அலோவைஸ் தடுத்ததுதான் இன்றைய அதிர்ச்சியின் ஹைலைட் ஆகும்.

அர்ஜென்டினா ரசிகர்கள் மனம் உடைய வேண்டிய அவசியமில்லை. 1990 உலகக் கோப்பையில் இப்படித்தான் முதல் போட்டியிலேயே கேமரூன் அணியிடம் தோல்வி கண்டனர். ஆனால், இறுதிக்கு முன்னேறினர். எனினும், இன்று சவுதி அரேபியா இடைவேளைக்குப் பிறகு அட்டகாசமான 2 கோல்களை அடித்தனர். அங்கு ஒரு விதத்தில் அர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர்களையே கோலிக்கு அருகில் காணவில்லை என்பதும் அந்த அணியின் சுயபரிசோதனைக்கு உரியதாகும்.

கத்தார் ரசிகர்கள் சவுதி அரேபியாவுக்கு முழு ஆதரவளித்தனர். ஆனால் ஆட்டம் தொடங்கி 8-வது நிமிடத்தில் சவுதி கோலுக்கு அருகே மெஸ்ஸி டீ பாலுக்கு பந்தை அடிக்க முயன்ற போது நடுவர்கள் வீடியோவை ரெஃபர் செய்தனர். அதில் சவுதி வீரர் அப்துல்ஹமீது அர்ஜென்டினா வீரர் பர்தேசை கையால் தள்ளி ஃபவுல் செய்தது தெரிந்தது. அதுவும் பெனால்டி ஏரியாவுக்குள் நடந்ததால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. இதை மெஸ்ஸி அடிக்க வரும்போது சவுதி கோல் கீப்பர் தன் இடது புறம் சாய, மெஸ்ஸி அவருக்கு வலது கைப்புறம் கோலை திணித்தார், அர்ஜென்டினா 1-0.

தொடர் ஆஃப் சைடுகள்: முன்புபோல் ஆஃப் சைடு என்றால் நடுவர்கள் கொடுக்கும் முறை இப்போது இல்லை. வீடியோ ஒன்று ஆஃப் சைடுகளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதால் யாரும் தப்ப முடியாது. ஆஃப் சைடு கற்பனா கோடை எந்த ஒரு வீரரும் சாமர்த்தியமாக இப்போது மீறி விட முடியாது. இதில்தான் அர்ஜென்டினா ஏகப்பட்ட முறை சிக்கியது. முதல் கோலை அடித்த பிறகு அர்ஜென்டினா அடிக்கடி சவுதி ஏரியாவுக்குள் புகுந்து கலக்கிக் கொண்டிருந்தனர். 18-வது நிமிடத்தில் மார்ட்டினேஸ் ஆஃப் சைடு ஆனார். 20-வது நிமிடத்தில் பர்தேஸ் அழகாக கொடுத்த பந்தை பப்பு கோம்ஸ் கோலாக மாற்றத் தவறினார். இதே பப்பு கோம்ஸ் மீண்டும் ஆஃப் சைடு ஆனார். 24வது நிமிடத்தில் மீண்டும் டி மரியா ஆஃப் சைடில் சிக்கினார்.

22-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஆஃப் சைடு ஆனார். அதன் பிறகு 27-வது நிமிடத்தில் டி பால் நேராக பாஸ் செய்ய அர்ஜென்டினா உள்ளே புகுந்தது, சவுதி கோல் கீப்பர் அலோவைஸ் வெளியே வந்தார். மார்ட்டினேசிடன் அப்போது கோலாக மாற்றினார். ஆனால் அர்ஜென்டினா கொண்டாட்டம் வீடியோ ரெஃபரலில் முறியடிக்கப்பட்டது. அதுவும் ஆஃப் சைடு. இப்படியாக அர்ஜென்டீனா 3-0 என்று முன்னிலை பெற்றிருக்க வேண்டியது. ஆஃப் சைடினால் காலியானது.

32-வது நிமிடத்தில் பப்பு கோம்ஸ் அடித்த பந்தை வாங்கும் போது மீண்டும் டி மரியா ஆஃப் சைடு. 42-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு அருமையான கிராஸை செய்ய மார்ட்டினேஸ் அதனை கோலாக மாற்றும் முயற்சியை சவுதி அரேபியா தடுத்தது. உடனேயே கிடைத்த இன்னொரு வாய்ப்பையும் ரோட்ரிகோ டி பால் பாக்சிற்கு வெளியே இருந்து அடித்தது உயரே சென்றது. இடைவேளையின் போது அர்ஜென்டினா 1-0 என்ற முன்னிலையில் இருந்தது. ஆனால் அந்த ஒரு கோல் எப்போதும் போதவே போதாது என்பது இடைவேளைக்குப் பிறகுதான் தெரிந்தது.

சவுதி அரேபியாவின் இரண்டு அட்டகாச கோல்களும், கோல் கீப்பரின் மூன்று அதிசய சேவ்களும்! - இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய போது ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் சவுதி அரேபியா ஒரு லாங் பாஸை சற்றும் எதிர்பாராமல் அடிக்க நடுக்களத்திலிருந்து அல்ஷேஹிரி பந்தைப் பெற்றார். பிறகு அர்ஜென்டினா வீரர் ரொமீரோவை கடந்து சென்றார். மிக வேகமாக உள்ளே எடுத்துச் சென்று தடுப்பு வீரர்களை அனாயசமாக தன் பிரமாதமான ட்ரிப்பிளிங்கில் கடந்து சென்று பெராஸ் அல் பிரிகானிடம் அடித்து அவரிடமிருந்தே பந்தைப் பெற்று இடது புறத்திலிருந்து அர்ஜென்டினா கோல் கீப்பரைக் கடந்து கோலின் வலது மூலையில் செலுத்தினார் அல்ஷேஹிரி. அந்த அட்டகாசமான கோலில் சவுதி 1-1 என்று சமன் செய்தது.

53-வது நிமிடத்தில் அப்துல் ஹமீது அடித்த ஷாட்டை அட்டகாசமாக எடுத்த அல்பைத் வலது புறத்திலிருந்து மேற்கொண்ட ஷாட் மேலே சென்றது. ஆனால் தெளிவாக அர்ஜென்டினாவின் வயிற்றில் மோட்டார் ஓடச் செய்தது சவுதி. 53-வது நிமிடத்தில் முழு பிரஷர் போட்ட சவுதி, அர்ஜென்டீனா எல்லைக்குள் ஒரு அட்டகாசமான பாஸ் மூலம் உள்ளே நுழைந்தது. அல்தவ்சாரி பாக்சுக்கு இடது புறமிருந்து வலது காலில் அடித்த ஷாட் அட்டகாசமாக மேலே சென்று அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்ட்டினேசின் விரலை உரசியபடியே கோலுக்குள் சென்ற தருணம் வரலாற்றுக் கணமானது. சவுதி அரேபியா 2-1 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு அர்ஜென்டினா எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று அழுத்தத்துடன் ஆடியது. 63-வது நிமிடத்தில் நிகோலஸ் ஆட்டோமெண்டியின் ஷாட் ஒன்றைப் பெற்ற லிசாண்ட்ரோ மார்ட்டினேஸ் மையத்திலிருந்து கோலை நோக்கி வலது காலால் உதைக்க அருமையாக தடுத்தார் கோல் கீப்பர் அலோவைஸ். உடனேயே அடுத்த வினாடியில் லிசாண்ட்ரோ மார்டினேஸின் ஷாட் ஒன்று நிகோலஸ் டாக்லியாஃபிகோ காலுக்கு வர சவுதி கோலுக்கு மிக மிக அருகில் இடது காலால் இவர் உள்ளே தள்ள கோல் கீப்பர் அலோவைஸ் மீண்டும் இடது மூலையில் அபாரமாகத் தடுத்தார்.

69-வது நிமிடத்தில் கார்னரிலிருந்து மெஸ்ஸி அடித்த ஷாட்டை மிக அருகில் இருந்த லாவ்தாரோ மார்ட்டினேஸ் தலையால் முட்ட பந்து மேலே சென்றது. மிக அருகிலிருந்து கிடைத்த வாய்ப்பை இவர் தவறவிட்டார். 72-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி அருமையாக கடந்து வந்து எடுத்த ஒரு பாஸை டி மரியாவிடம் அளிக்க அவர் வலது காலால் கோலை நோக்கி அடித்த ஷாட்டையும் அலோவைஸ் தடுத்து விட்டார். இதை விட்டால் 80-வது நிமிடத்தில் சவுதி ஒரு ஃபவுல் செய்ய பாக்சுக்கு கொஞ்சம் வெளியே அபாயகரமான பகுதியில் மையத்தில் மெஸ்ஸி ஃப்ரீ கிக்கைப் பெற்றார் மெஸ்ஸி.

ஆனால் அந்த ஷாட் மேலே சென்றது. 83-வது நிமிடத்தில் மீண்டும் அர்ஜென்டினா வீரர் அல்வாரேஸ் ஆஃப் சைடில் சிக்கினார். 84-வது நிமிடத்தில் மீண்டும் டி மரியா ஒரு அற்புதமான கிராஸை அடிக்க மெஸ்ஸி கோலுக்கு அருகில் இருந்து தலையால் முட்டியதையும் தடுத்து விட்டனர். அதுவும் ஒரு ஷாட் கோலாகவே மாறியிருக்க வேண்டும். கோல் கீப்பரும் இல்லை, அப்போது கோல் கோட்டுக்கு அருகில் நின்றிருந்த சவுதி வீரர் தலையால் முட்டி பந்தை வெளியே தள்ளினார். அர்ஜென்டினாவின் இதயம் அப்போது நொறுங்கியது.

இப்போது அர்ஜென்டினாவுக்கு அடுத்த 2 போட்டிகளுமே கடினம். மெக்சிகோ, போலந்து அணிகளை சாதாரணமாக எடை போட முடியாது. அர்ஜென்டினா இன்னும் தங்கள் ஆட்டத்தை வெறித்தனமாக மாற்றினால்தான் உண்டு. இன்றைய போட்டி ஆஃப் சைடுகளினால் அர்ஜென்டினாவுக்கு காலியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்