தோகா: பிஃபாவின் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 22-வது பதிப்பு கத்தார் நாட்டில் இன்று கோலாகமாக தொடங்குகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ‘ஏ’-ல் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
குரூப் ‘பி’-ல் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய அணிகளும் குரூப் ‘சி’-ல் அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும் குரூப் டி-ல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா ஆகிய அணிகளும் குரூப் இ-ல் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
குரூப் எஃப்-ல் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா அணிகளும், குரூப் ஜி-ல் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அணிகளும், குரூப் ஹெச்-ல் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகளும் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் டிசம்பர் 3, 4, 5,6,7-ம் தேதிகளிலும் கால் இறுதி ஆட்டங்கள் 9,10,11-ம் தேதிகளிலும், அரை இறுதி 14 மற்றும் 15-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ஆட்டம் டிசம்பர் 18-ம் தேதி 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெறுகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ள கால்பந்து திருவிழாவில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், 4 முறை பட்டம் வென்றுள்ள ஜெர்மனி, தலா 2 முறை வாகைசூடி உள்ள அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே மற்றும் தலா ஒரு முறை கோப்பையை கைகளில் ஏந்தியுள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட களத்தில் குதிக்க உள்ளன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர், லெவன்டோவ்ஸ்கி, கரேல் பேல், ரோமலு லுகாகு, மோட்ரிக், கிறிஸ்டியன் எரிக்சன், ஹாரிகேன், கரீன் பென்சிமா, கிளியான் பாப்பே போன்ற நட்சத்திர வீரர்களுடன் ஜெர்மனியின் 17 வயதான யூசுபா மவுகோகோ, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், போர்ச்சுகலின் ஜோவோ பெலிக்ஸ், ஸ்பெயினின் அன்சுஃபாத்தி, ஃபெரான் டோரஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் கால்பந்தாட்ட கலையும்ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
போட்டியை காண 12 லட்சம் ரசிகர்கள் கத்தாருக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தங்கும் விடுதிகள், மிதக்கும் ஓட்டல்கள், பாலைவனத்தில் பிரத்யேக கூடாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதம் நடைபெற உள்ள கால்பந்து திருவிழாவுக்காக கத்தார் சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது. இவற்றில் பெரும் தொகை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு முறையே ரூ.219 கோடியும், ரூ.203 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
அதேபோல் கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், இரண்டாவது சுற்று போட்டிகளான நாக்-அவுட் ஆட்டங்களுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும். இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 3,586 கோடியாக உள்ளது. இது கடந்த முறையைவிட ரூ.328 கோடி கூடுதல் தொகையாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரூ.3,258 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
கால்பந்து திருவிழாவின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு அல்பேத் மைதானத்தில் கோலாகமாக நடைபெறுகிறது. விழாவில் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜங்குக் கலந்து கொண்டு பாட உள்ளார். இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன.
தரவரிசையில் 50-வது இடம் வகிக்கும் கத்தார் போட்டியை நடத்தும் நாடு என்பதால் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது. ஈக்வேடார் அணி தரவரிசையில் 44-வது இடம் வகிக்கிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களையும் ஸ்போர்ட்ஸ் 18 நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago