கால்பந்து திருவிழா | எதிரிகள் சங்கமிக்கும் குரூப் ஹெச்

By செய்திப்பிரிவு

குரூப் ஹெச்சில் போர்ச்சுகல், உருகுவே, தென் கொரியா, கானா அணிகள் உள்ளன. இந்த பிரிவானது உலகக் கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திர ஸ்ட்ரைக்கர்களான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் மற்றும் தென் கொரியாவின் சன் ஹியுங்-மின் ஆகியோரை உள்ளடக்கி உள்ளது. நான்கு முறை ஆப்பிரிக்க சாம்பியனான கானா, 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் உருகுவேக்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பால் வெளியேறி இருந்தது. இதற்கு இம்முறை கானா பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் 2018 தொடரின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகலை வெளியேற்றி இருந்தது உருகுவே. இதற்கு பதிலடி கொடுக்க போர்ச்சுகல் காத்திருக்கிறது.

போர்ச்சுகல் - தரவரிசை 9; பயிற்சியாளர் - பெர்ணான்டோ சான்டோஸ்: 37 வயதான, கிறிஸ்டியானோ ரொனால்டோ சரிவில் உள்ளார். ஆனால் அவர் நிச்சயமாக போர்ச்சுகலின் புதிய தலைமுறையை தனது மகத்துவத்தால் ஊக்கப்படுத்துவார். போர்ச்சுகல் மிகவும் திறமையான மிட்ஃபீல்டர்களில் சிலரைக் கொண்டுள்ளது. இவர்களில் கவனிக்க வேண்டியவர்களில் மான்செஸ்டர் சிட்டியின் பெர்னார்டோ சில்வா, மான்செஸ்டர் யுனைடெட்டின் புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடங்குவர். அட்லெடிகோ மாட்ரிட்டின் ஜோவா பெலிக்ஸ், கிறிஸ்டியானோவுடன் முன்களத்தில் கூட்டாளியாக இருப்பார். பன்முக வீரரான அவர், கோல்கள் அடிக்கும் திறன் கொண்டவர்.

பலம்: போர்ச்சுகல் அணியில் உள்ள பலர் ஐரோப்பிய லீக்குகளில் ஒரே கிளப்பிற்காக விளையாடுகிறார்கள். பெர்னார்டோ சில்வா, ஜோவோ கேன்செலோ, ரூபன் டயஸ் ஆகியோர் மான்செஸ்டர் சிட்டியில் ஒன்றாக விளையாடுகிறார்கள். கிறிஸ்டியானோ ரொனால்டோ, புருனோ மான்செஸ்டர் யுனை டெட் அணியிலும் விட்டின்ஹா, ரெனாடோ சான்செஸ், நுனோ மென்டிஸ், டானிலோ பெரேரா ஆகியோர் லீக் 1 கிளப் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுக்காக விளையாடுகின்றனர்.

பலவீனம்: முன்கள வீரர் தியாகோ ஜோட்டா காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் பயிற்சியாளர் சாண்டோஸின் உத்திகள் காலாவதியானது என கால்பந்து நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உருகுவே - தரவரிசை 14; பயிற்சியாளர் - டியாகோ அலோன்சோ: உலக கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்திய முதல் அணி உருகுவேதான். இந்த அணி 1930 மற்றும் 1950-ல் உலக சாம்பியனாக இருந்தனர். 1970 மற்றும் 2010-ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கத்தாரில், அவர்கள் வெற்றியைக் கொண்டுவர இளைஞர்கள் மற்றும் அனுபவத்தின் கலவையை நம்புவார்கள். அனுபவமிக்க ஸ்ட்ரைக்கர்களான லூயிஸ் சுவாரஸ், எடின்சன் கவானி ஆகியோரை தவிர சில திறமையான இளைஞர்கள் உள்ளனர்.

பலம்: உருகுவே இனி கோல்களை அடிப்பதற்காக எதிர்-தாக்குதல்களை நம்பி இருக்காது. அவர்கள் இப்போது உயர் அழுத்த பாஸிங் விளையாட்டை விளையாடுகிறார்கள். லிவர்பூலின் இளம் ஸ்ட்ரைக்கர் டார்வின் நுனெஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளார்.

பலவீனம்: சென்டர்-பேக் வீரர்களான டியாகோ காடின், ஜோஸ் கிமினெஸ் ஆகியோர் தங்கள் வலுவான மற்றும் ஏரியல் ஷாட்டுக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் இருவரும் மெதுவாக நகர்வது தென் கொரியா, போர்ச்சுகல் போன்ற விரைவான தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் அணிகளுக்கு எதிராக சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

தென் கொரியா - தரவரிசை 28; பயிற்சியாளர் - பாலோ பென்டோ:

வெற்றிகரமாக தொடர்ந்து 10-வது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்குகிறது தென் கொரியா. பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக முறை உலகக் கோப்பையில் விளையாடிய அணி என்ற பெருமையை தென் கொரியா பெற்றுள்ளது. தென் கொரியா இரு முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 2002-ல் சொந்த நாட்டில் நடைபெற்ற தொடரில் அரை இறுதி வரை சென்றிருந்தது. 2010-ல் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்திருந்தது. 2002 உலகக் கோப்பையின் லீக் சுற்றில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியின் உறுப்பினரான பாலோ பென்டோ தற்போது தென் கொரியாவின் பயிற்சியாளராக உள்ளார்.

பலம்: தென் கொரியா அணியில் திறன் மிகுந்த வீரர்கள் சிலர் உள்ளனர். சன் ஹியுங் மின் தலைமையில் வீரர்கள் விரைவாகவும் திறமையாகவும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கக்கூடியவர்கள். கிம் மின்-ஜேவின் பின் வரிசை சிறந்த அணிகளுக்கு கூட சவால் தரக்கூடியதாக உள்ளது.

பலவீனம்: தென் கொரியா அணியில் படைப்பாற்றல் கொண்ட மிட்ஃபீல்டர் இல்லை. அதனால்தான் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் விருப்பப்படி கோல் அடிக்கும் சன் ஹியுங்-மின், தேசிய அணியில் போராட வேண்டியது உள்ளது.

கானா - தரவரிசை 61; பயிற்சியாளர் - ஓட்டோ அடோ:

கத்தாரை நோக்கி பயணித்துள்ள அணிகளில் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய அணி கானா மட்டுமே. சமீபத்திய வரலாற்றில் மிகவும் பலவீனமான அணி என்று அழைக்கப்பட்டாலும் தகுதி சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் நைஜீரியாவை வீழ்த்தி உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. போட்டி நிறைந்த ‘ஹெச்’ பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு கானா முன்னேறுவது கடினமான பணியாகவே இருக்கும்.

பலம்: கானா வம்சாவளியைச் சேர்ந்த உலகெங்கிலும் உள்ள சில சிறந்த வீரர்களால் கானா அணி நிரம்பியுள்ளது. ஸ்ட்ரைக்கர் இனாக்கி வில்லியம்ஸ், இளைஞர்கள் மட்டத்தில் ஸ்பெயினுக்காக விளையாடி உள்ளார். முன்னாள் இங்கிலாந்து யு-21 வீரர் தாரிக் லாம்ப்டே, இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் பிரைட்டன் அணிக்காக டிஃபெண்டராக விளையாடுகிறார். ஹம்பர்கர் கிளப்பின் விங்கர் ரான்ஸ்ஃபோர்ட் யெபோஹ், ஜெர்மனியின் இளைஞர் அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது கானாவுக்காக விளையாட உள்ளார்.

பலவீனம்: கானாவுக்கு வீரர்களை ஒருங்கிணைத்து சரியான கலவையைப் பெறுவதற்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. ஆர்சனல் மிட்ஃபீல்டர் தாமஸ் பார்ட்டி உட்பட அவர்களது பெரும்பாலான வீரர்கள் தங்கள் கிளப் அர்ப்பணிப்புகளில் மும்முரமாக இருந்தனர். தவிர காயம் அடைந்துள்ள டிபண்டர் ஸ்டீபன் அம்ப்ரோசியஸுக்கு மாற்று வீரரைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்