டேவிட் மலான் சதம் வீண் - வார்னர், ஸ்மித் அபார ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித் தள்ளிய ஆஸி.

By ஆர்.முத்துக்குமார்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அடிலெய்ட் பிட்ச் இரண்டாவதாக பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும் என சொல்லிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து திக்கித் திணறியது.

பின்னர் டேவிட் மலானின் அதியற்புதமான சதத்தினால் (134ரன்கள்) மீண்ட இங்கிலாந்து அந்தி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி அந்த இலக்கை விரட்டும் போது எந்த நிலையிலும் சுணக்கமடையாமல் 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அனுப்பிய ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் கலக்கியது. இங்கிலாந்து சடுதியில் 20/2 என்று ஜேசன் ராய் (6), ஃபில் சால்ட் (14) ஆகியோர் விக்கெட்டை இழந்தது, ஜேசன் ராய்க்கு ஸ்டார்க் அருமையாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர அது பேட்டுக்கும், காலுக்கும் இடையேயான இடைவெளியில் புகுந்து ஸ்டம்பை சாய்த்தது. பில் சால்ட் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து கம்மின்ஸின் பந்தை தொட்டார், அதனால் கெட்டார், ஸ்லிப் பீல்டர் ஸ்மித் கேட்சை எடுத்தார்.

ஜேம்ஸ் வின்ஸ் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆகி கம்மின்ஸ் பந்தில் 5 ரன்களில் வெளியேறினார். சாம் பில்லிங்ஸ் (17 ரன்கள்) ஸ்டாய்னிஸ் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து அபாயத்தில் இருந்தது. கேப்டன் பட்லருடன் (29) இணைந்த சத நாயகன் டேவிட் மலான், முதலில் 52 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தார். பட்லர் லாங் ஆஃப் பீல்டர் கையில் கேட்ச் கொடுத்து லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதிரடி மன்னன் லியாம் லிவிங்ஸ்டன் 11 ரன்களில் ஆஷ்டன் ஆகரிடம் ரன் அவுட் ஆனார். கிறிஸ் ஜோர்டான் (14 ரன்கள்) ஜாம்பாவிடம் எல்.பி.ஆனார்.

டேவிட் மலான் 107 பந்துகளில் அபாரமாக தன் 2-வது ஒரு நாள் சதத்தை எடுத்தார். டேவிட் வில்லேவுடன் (34 ரன்கள்) இணைந்து மலான் 8வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து இங்கிலாந்து 287 என்ற எண்ணிக்கையை எட்டியது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜாம்பா, கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். டேவிட் மலான், 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 128 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து கடைசி 10 ஓவர்களில் 72 ரன்களை சேர்த்தது.

வார்னர், ட்ராவிஸ் ஹெட், ஸ்மித் அனாயாச பேட்டிங்... - இலக்கை விரட்டும் போது டேவிட் வார்னர் (86 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (69 ரன்கள்) பவுண்டரிகளாக விளாசித் தள்ள 8 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது ஆஸி. இருவரும் அரை சதங்களை அனாயாசமாக எடுக்க இங்கிலாந்தின் பவுலிங் முயற்சி படுதோல்வி கண்டது. 20வது ஓவர் வரை ஹெட்டும், வார்னரும் இங்கிலாந்து பவுலரை வறுத்து எடுத்தனர். ஹெட் முதலில் பரிதாபப்பட்டு தன் விக்கெட்டை ஜோர்டானிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

வார்னர், அணியின் ஸ்கோரை 200 ரன்களைக் கடந்து கொண்டு சென்ற பின்னர் ஜோர்டானிடம் விக்கெட்டை இழந்தார். டேவிட் வில்லே அடுத்ததாக மார்னஸ் லபுஷேனையும் 4 ரன்களில் வீழ்த்தினார். அலெக்ஸ் கேரி 21 ரன்களில் டாசன் பந்தில் நடையைக் கட்டினார். ஆஸ்திரேலியா 39-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் இருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 78 பந்துகளில், 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 80 ரன்கள் எடுத்தும். கேமரூன் கிரீன் 20 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு இட்டுச் சென்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை டேவிட் மலான் வென்றார்.

வரும் சனிக்கிழமையன்று சிட்னியில் 2வது போட்டி நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்