ஸ்டார்க் பந்து வீச்சு, வார்னர் அதிரடியில் சிக்கி தென் ஆப்பிரிக்கா திணறல்

By ஆர்.முத்துக்குமார்

பெர்த்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிகா 242 ரன்களுக்குச் சுருள, ஆஸ்திரேலியா டேவிட் வார்னரின் அதிரடி 73 ரன்களுடன் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த முறை போன்ற தார்ச்சாலை பிட்ச் ஆக இல்லாமல் ஒரளவுக்கு முதல் 2 மணிநேரம் பெர்த் பிட்ச் பவுன்ஸ், வேகம் நிரம்பியதாக இருந்தது. புதிய பந்தை ஆடுவது கடினமாக இருந்தது. டாஸ், பவுமா, குவிண்டன் டி காக் தவிர தென் ஆப்பிரிக்காவுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. ஆனால் 32/4 என்ற நிலையிலிருந்து மீண்டு 242 ரன்களுக்கு வந்தது பெரிய விஷயம்தான், 2012 தொடரில் பெர்த்தில் முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி டெஸ்ட்டை வென்றது தென் ஆப்பிரிக்கா, ஆனால் இம்முறை தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு சரிப்படவில்லை, குறிப்பாக டேல் ஸ்டெய்ன் ஆஸ்திரேலியர்களுக்கு ஷார்ட் பிட்ச் பந்தை வீசக்கூடாது என்ற அடிப்படையைக் கடைபிடிக்காமல் வார்னருக்கு சில பவுண்டரிகளை வாரி வழங்கினார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் டு பிளெசிஸ், இது எதிர்மறையாக முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, காயத்திலிருந்து மீண்டு வந்த மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரிலேயே குக் விக்கெட்டை வீழ்த்தினார். குக் தேவையில்லாமல் எம்பி, ஸ்கொயர் ஆகி எட்ஜைக் காட்டினார், ஆனால் அதனை கல்லியில் மிட்செல் மார்ஷ் அபாரமாக எம்பிப் பிடித்தார், ஒரு டெஸ்ட் போட்டிக்கான அற்புதமான தொடக்கமாக இது அமைந்தது.

இது கூட இழப்பாகத் தெரியாவிட்டாலும், ஹஷிம் ஆம்லா ரன் எடுக்காமல் ஜோஷ் ஹேசில்வுட்டின் அருமையான துல்லியமான ஸ்விங்க்கிற்கு எட்ஜ் ஆகி வெளியேறியதில் தென் ஆப்பிரிக்கா வெலவெலத்துப் போனது. அதே போல் டீன் எல்கர் (12) ஹேசில்வுட்டின் அருமையான லெந்த் பந்தை ஆடாமல் விட மட்டையை எடுப்பதற்குள் அது மட்டையின் உள்விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது, எட்ஜ் ரன்னருக்கே கேட்டதால் ரிவியூ செய்யவில்லை.

டுமினி 11 ரன்களுக்கு தடவாமல் ஆடினார், ஆனால் பீட்டர் சிடில் ஒரு பந்தை அருமையாக லெந்தில் வீசி வெளியே எடுக்க கால்களை சரியாக நகர்த்த முடியாத நிச்சயமின்மையில் மட்டையை தொங்க விட பந்து உள்விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. டுபிளெசிஸ், பவுமா மேலும் சேதமாகாமல் உணவு இடைவேளை வரை ஆடினர்.

உணவு இடைவேளை முடிந்து 37 ரன்களில் இருந்த டுபிளெசிஸ் ஸ்டார்க் பந்தை ஸ்லிப்பில் ஆடம் வோஜசிடம் எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். 81/5 என்ற நிலையில் 120 ரன்கள் வருமா என்ற ஐயம் எழுந்தது.

‘ஸ்டைலிஷ்’ தெம்பா பவுமா நிதானம், டி காக் அதிரடி:

தென் ஆப்பிரிக்க அணியில் உயரம் குறைவான தெம்பா பவுமா உண்மையில் ஒரு கிளாசிக் டெஸ்ட் பேட்ஸ்மென் என்றே கூற வேண்டும். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பது போல் அருமையான, துல்லியமான கால்நகர்த்தல், கச்சிதமான பேக் லிப்ட், சாதுரியமான ஷார்ட் தேர்வு என்று அசத்துகிறார் பவுமா. இவரிடம் உள்ள சிறப்புத் தன்மை நம் ஜி.ஆர்.விஸ்வநாத்தை மீண்டும் கண் முன் நிறுத்தும் ஒரு ஸ்டைலிஷ் பேட்டிங்.

இவர் ஸ்டார்க்கை மிட்விக்கெட் பிளிக் பவுண்டரி மூலம் தொடங்கினார். பிறகு மிட்செல் மார்ஷை ஒரு அருமையான கவர் டிரைவ், அடுத்த பந்தே மிட்விக்கெட்டில் ஒரு புல் பிறகு ஹேசில்வுட்டை அடித்த அற்புத கவர் டிரைவ் என்று ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களே அசந்து போகும் அளவுக்கு ஆடினார். கடைசியில் லயன் பந்தை மேலேறி வந்து அருமையாக கவர் திசையில் பவுண்டரி அடித்து 51 ரன்களை எட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்து லெக் திசையில் ஸ்பின் ஆக பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் ஷான் மார்ஷின் அருமையான டைவிங் கேட்சாக முடிந்தது.

பவுமா, டி காக் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தனர். குவிண்டன் டி காக் தொடக்கம் முதலே அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து நொறுக்கினார், இடையில் ஹேசில்வுட் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ரவுண்ட் த விக்கெட் தொடர் பவுன்சர்கள் என்ற சோதனைகளை திறம்பட கடந்து 101 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தை ஷான் மார்ஷிடம் புல் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரபாதா 11 நாட் அவுட், பிலாண்டரையும், ஸ்டெயினையும் ஸ்டார்க் பவுல்டு செய்தார். தென் ஆப்பிரிக்கா 63.4 ஒவர்களில் 242 ஆல் அவுட்.

ஸ்டார்க் 71 ரன்களுக்க்கு 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் லயன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வார்னர் அதிரடியும், பிலாண்டர் நோ-பாலும்:

ஆஸ்திரேலியா இன்னிங்ஸை தொடங்கிய போது டேல் ஸ்டெய்ன் மணிக்கு 140 கிமீ வேகத்தில் சராசரியாக வீசினார், ஒரு சமயத்தில் 150 கிமீ வேகத்தையும் தொட்டார். ஆனால் தென் ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் என்னவெனில் 17 ரன்களில் வார்னர் இருந்த போது பிலாண்டர் பந்தில் கால்காப்பில் வாங்க நேர் பிளம்ப் எல்.பி. அது, ஆனால் அலீம் தார் அதனை நாட் அவுட் என்றார், டு பிளெசிஸ் ரிவியூ செய்தார் ரிவியூவில் பிலாண்டர் நோ-பால் வீசியது தெரியவர வார்னர் பிழைத்தார். நோ-பால் இல்லையெனில் வார்னர் அம்பேல்! ஆனால் என்ன அதிர்ஷ்டம்! அவரது பெர்த் ஃபார்ம் தொடர்ந்தது.

முதலில் பிலாண்டரை பேக்ஃபுட் பஞ்ச் கவர் பவுண்டரியுடன் தொடங்கினார் வார்னர். அதன் பிறகு பிலாண்டர் ஒரு ஓவரில் 3 பந்துகளை ஷார்ட் பிட்சும் ஓவர் பிட்சுமாக வீச மூன்றையும் பவுண்டரி அடித்தார் வார்னர்.

பிறகு ஸ்டெய்ன் சிக்கினார், முதலில் அவரை புல் ஷாட்டில் பவுண்டரி அடித்த வார்னர், ஷார்ட் பிட்ச் பந்தை ஆஃப் திசையில் இன்னொரு 4 விளாசினார். பிறகு ரபாதாவும் ஷார்ட் பிட்ச் வீச பவுண்டரி விளாசினார்.

இந்நிலையில் ஸ்டெய்ன் வீசிய இன்னிங்ஸின் 11-வது ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை ஒதுங்கிக் கொண்டு சச்சின் போல் தேர்ட்மேன் திசையில் அடிக்க பந்து சிக்ஸ் ஆனது ஆனால் வார்னர் நிலை தடுமாறி மல்லாந்து விழுந்தார். அடுத்த பந்து மீண்டும் ஆஃப் திசையில் பவுண்டரி 39வது பந்தில் ரபாதாவை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார் வார்னர். கடைசியில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் வீசிய ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார் வார்னர். ஆட்ட முடிவில் வார்னர் 62 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்தும் உறுதுணையாக ஆடிய ஷான் மார்ஷ் 29 ரன்களுடனும் உள்ளனர்.

டேல் ஸ்டெய்ன் 6 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்