T20 WC | பாகிஸ்தான் - இங்கிலாந்து இறுதியும், 10 விதமான ரசிக மனநிலைகளும் - ஓர் உளவியல் பார்வை

By ஆர்.முத்துக்குமார்

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி இந்த டி20 உலகக் கோப்பையை அலங்கரிக்கும் ஓர் இறுதியாக இருக்கும் என்று இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்த நேரத்தில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்று ரசிகர்கள் பலரது இதயத்தை நொறுக்கிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டி 1992-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ரிபீட் ஆகியுள்ளது.

இது பற்றிய கருத்துகள் வலம் வந்தபடி இருக்கின்றன. அப்போது இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதேபோல் இப்போதும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் நினைவு ஏக்க ஆசையாக இருந்து வருகிறது. இந்த ஆசையை பலவிதங்களில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய மனநிலைகளில் ஒரு சில தரப்பு ஆறுதல் படுவது ‘நல்ல வேளை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்பதற்குப் பதிலாக இங்கிலாந்திடம் தோற்றதே நல்லது’ என்ற ட்ரெண்ட்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்திய ரசிகர்கள் பலவிதம்... ஒவ்வொருவரும் ஒரு விதம். இந்த இறுதிப் போட்டி குறித்த இந்திய ரசிகர்களின் பல்வேறு மனநிலைகளை வரிசைப்படுத்துவோம்:

  1. இந்தியாவோ இறுதிக்கு வரவில்லை, எனவே இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை டென்ஷன் இன்றி பார்க்கலாம்.
  2. பாகிஸ்தான் நம் எதிரி நாடு, எனவே இறுதியில் அந்த அணி கோப்பையை வென்று விடக் கூடாது. இங்கிலாந்துதான் வெல்ல வேண்டும்.
  3. இங்கிலாந்து நம்மை மிக மோசமாகத் தோற்கடித்து விட்டனர், ஆகவே, பாகிஸ்தான் வென்றாலும் வெல்லலாமே தவிர, இங்கிலாந்து ஒருபோதும் வெல்லவே கூடாது.
  4. பட்லருக்காகவாவது இங்கிலாந்துதான் வெல்ல வேண்டும்.
  5. பாபர் அசாம் இப்போதுதான் கேப்டனாகியுள்ளார், கோலியினால் வெல்ல முடியாத ஐசிசி கோப்பையை பாபர் அசாம் தலைமையில் அதற்குள் பாகிஸ்தான் வெல்லக் கூடாது.
  6. இந்தியா, ஜிம்பாப்வேயிடம் தோற்ற பாகிஸ்தான் கோப்பையை வெல்ல தகுதிபெற்ற அணியல்ல.
  7. அயர்லாந்திடம் தோல்வியடைந்து இலங்கையிடம் தண்ணி குடித்து கடைசி ஓவர் வரை வந்து 140 ரன்கள் இலக்கை எடுத்து வென்ற இங்கிலாந்து கோப்பையை வெல்ல லாயக்கற்றது.
  8. ‘என் தலைவன் கோலி’ ஆடாத இறுதிப் போட்டியில் யார் வென்றால் என்ன?
  9. தோனி போனவுடனேயே கிரிக்கெட் போயிடுச்சு சார்! யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன?
  10. கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்க ப்ரோ!

அமெரிக்கக் கவி வாலஸ் ஸ்டீவன்ஸ் Thirteen Ways of Looking at a Blackbird என்ற கவிதையை எழுதினார். அந்த பிளாக் பேர்டு போல் இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை ஒரு பொருளாகக் கண்டால் 10 விதங்களில், 10 கோணங்களில் இந்திய ரசிகர்கள் அதைக் காண்கின்றனர் என்று கூற முடியும். (விடுபட்ட கோணங்களை கருத்துப் பகுதியில் பகிரலாம்) இவையெல்லாம் பல்வேறு மனநிலைகள். மனநிலைகளின் பன்மை என்று கூறலாம்.

ஆனால், இவையெல்லாமே ஏதோ ஒருவிதத்தில் ஒருதலைப் பட்சமான பார்வையே. ‘கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்க ப்ரோ’ ரக மனநிலை கொண்டவர்கள் மத்தியிலும் கூட இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத ஒரு வெறுப்பு மனநிலையில் இத்தகைய நிலைப்பாடு கொண்டவர்கள் இருப்பார்கள்.

இவையெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்தியா - பாகிஸ்தான் அரசியல் பதற்றம் சார்ந்த பார்வைகளில் மையம் கொண்டதாகவே இருக்கலாம். இந்த மனநிலைகளுக்கு மாற்றாக அழகியல் பார்வையை வலியுறுத்தலாம்.

அதாவது, பாபர் அசாமின் அந்த கவர் ட்ரைவ், ஆன் ட்ரைவ், மிட்விக்கெட் ட்ரைவ், கட்ஷாட்களின் அழகை ரசிப்பது. ரிஸ்வானின் புல்ஷாட் அழகை ரசிப்பது. அல்லது இப்திகாரின் மிடில் ஓவர் ஆட்டத்திறனையும் அவரது சிக்சர்களையும் இடைவெளியில் அடிக்கும் திறமையையும் விதந்தோதி கிரிக்கெட் நுணுக்கங்களுடன் ரசிப்பது.

அல்லது பட்லர், ஹேல்ஸின் அட்டகாசமான ஷாட் செலக்‌ஷனை ரசிப்பது, ஆதில் ரஷீத் அன்று திட்டம் தீட்டி சூரியகுமார் யாதவை வீழ்த்தியது போல் பாகிஸ்தானின் முக்கியமான வீரர்களை எப்படி வீழ்த்துகிறார் என்பது போன்ற நுணுக்கங்களைப் பாராட்டுவது. வெற்றி - தோல்விகளுக்கு அப்பால், கிரிக்கெட்டின் நுட்பங்களையும் அந்த ஆட்டத்திற்குரிய அழகியல்களை ரசிப்பது என்பது நடுநிலையான பார்வை.

வெறுப்பரசியலால் தூண்டப்பட்ட கிரிக்கெட் வெறி மனோபாவத்தை விட கிரிக்கெட் ரசனையை மேம்படுத்துமாறு போட்டியை ரசிப்பது என்பது உடல்/மன ஆரோக்கியத்திற்கு நல்லது. பார்ப்பவர்களின் தன்னுணர்வுடன் கூடிய எதார்த்த உலகிற்கும் தொலைக்காட்சியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி எனும் புனைவுலகத்திற்கும் இடையே ஒரு தொலைவை கடைப்பிடிப்பது, தூரத்தைக் கடைப்பிடிப்பது aesthetic distance என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு போட்டிக்கு முன்பாக, குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போன்ற போட்டிகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் போட்டி குறித்த விளம்பரங்கள், டிஜிட்டல், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த அழகியல் தொலைவு என்பதை அனுமதிக்காது ரசிகர்களை உணர்வுபூர்வமாக போட்டியைப் பார்க்க தூண்டுகிறது.

இந்த நெரிசலான ஓர் ஊடக இடையீடுகள் ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சிகரமான கொதிநிலை மனோபாவங்களிலிருந்து விடுபட அழகியல் தொலைவுபடுத்திக் கொள்ளுதல் என்ற கோட்பாடு பெரிதும் உதவும். ஜெர்மானிய தத்துவ ஞானியான இம்மானுயேல் காண்ட் என்பார் தன்னுடைய Critique of Judgement என்ற நூலில் தன்னலமற்ற, சுயத்தின் தன்மைகள் அற்ற ஒரு மகிழ்ச்சி நிலை பற்றி கூறுகிறார். இதில் ஒரு குறிப்பிட்ட பொருள் மீதான ஆசை அல்லது பற்றுதல் கூடாது, நம் சூழலில் கிரிக்கெட் போட்டி குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட போட்டிகள் என்று வைத்துக் கொள்வோம். இதனை ஒரு பொருள் அல்லது பண்டமாகவே ஒளிபரப்பு ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. எனவே, பண்டமாக்கப்பட்ட பொருள் மீதான ஆசையைத் துறந்து, அந்தக் குறிப்பிட்ட பொருளின் அல்லது ஆட்டத்தின் அல்லது படைப்பின் உள்ளார்ந்த அழகு உள்ளிட்ட குணாம்சங்களைக் கண்டு மகிழ்தல், ரசித்தல் என்பதுதான் இம்மானுயேல் காண்ட் கூறுவது.

அதாவது, நம் சுயத்தின் உருவாக்கப்பட்ட கோரிக்கைகள், அந்த ஆட்டத்தைப் பற்றிய நம் மனப்போக்குகள், திணிகக்ப்பட்ட எண்ணங்களை தற்காலிகமாகவேனும் ஒத்தி வைத்துவிட்டு ஆட்டத்தின் உள்ளார்ந்த அழகில் கவனம் செலுத்தி ரசித்து மகிழ்வது என்பது நல்ல ஆரோக்கியமான, அழகியல் மனநிலைக்கு உதாரணம்.

இத்தகைய அழகியல் பார்வை குறுகிய எண்ணங்களிலிருந்து நம்மை விடுவித்து மேன்மைப்படுத்தும் ஒரு வழிமுறை என்றே உளவியல்கள் கூறுகின்றன. கிரிக்கெட்டை மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பையுமே நாம் இப்படிப்பட்ட பார்வைக்குட்படுத்திக் கொண்டு விட்டால் அது நம் சுயத்தை ஏற்கெனவே இருக்கும் தளைகளிலிருந்து விடுவித்து வேறு சுயத்தை வடிவமைத்துக் கொள்ளச் செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்