உம்ரன் மாலிக் போட்டியாக ஆஸி.யில் இருந்து அச்சமூட்டும் ஒரு புதிய வேகப்புயல் லான்ஸ் மோரிஸ்!

By ஆர்.முத்துக்குமார்

வேகப் பந்துவீச்சுக்கு ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு இணையாக பவுலர்களை உருவாக்கிய ஆஸ்திரேலியாவிலிருந்து இப்போது மீண்டுமொரு அச்சமூட்டும் வேகப்புயல் பவுலர் உருவாக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 வயது எக்ஸ்பிரஸ் பவுலர் லான்ஸ் மோரிஸ் ஆவார்.

ஆஸ்திரேலியா உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் ஸ்டார் இப்போது லான்ஸ் மோரிஸ்தான். மணிக்கு 150 கி.மீ வேகத்தையும் தாண்டிச் செல்கிறார். மேலும், சீரான முறையில் ஸ்பீடா மீட்டர் முள் இவர் பந்துகளுக்கு மணிக்கு 150 கிமீ வேகத்தையும் தாண்டியே காட்டுகிறது என்கிறார் மேற்கு ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் டிம் மெக்டொனால்டு.ஏற்கெனவே டாஸ்மேனியாவின் ரைலி மெரிடித் ஆஸ்திரேலியாவுக்காக குறைந்த ஓவர் வடிவத்தில் ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து இப்போது லான்ஸ் மோரிஸும் இணைந்துள்ளார். இந்தியாவின் உம்ரன் மாலிக் சீரான விதத்தில் மணிக்கு 150 கிமீ வேகத்தையும் தாண்டி அசத்தியவர். ஆனால், இந்தியாவில் பொதுவாக இதுபோன்ற அரிதான ஓர் அதிவேக பவுலரை பராமரிக்கும் திறமை மிகக் குறைவு. இவரைப் போன்ற பவுலர்களை மேனேஜ் செய்வதற்குரிய அதிவேகப் பந்துவீச்சு குறித்த சிறந்த தகவலும் அறிவும் பெற்ற கேப்டன்கள் இங்கு இல்லை என்றே கூற வேண்டும்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் ஜெஃப் தாம்சன், ராட்னி ஹாக், ராட் மெக்கர்டி, லென் பாஸ்கோ தொடங்கி பிரெட் லீ, ஷான் டெய்ட், மிட்செல் ஜான்சன் வரை இப்போது மிட்செல் ஸ்டார்க், ரைலி மெரிடித் மற்றும் லான்ஸ் மோரிஸ் என்று இவர்களை எப்படிக் கட்டிக் காப்பது என்பதற்கான உள்கட்டமைப்பும், முன்னாள், இந்நாள் கேப்டன்களும் உள்ளனர். அதாவது, அதிவேகப் பந்துவீச்சாளர்களை காப்பது அவசியம்.

எப்படி காப்பது என்பதற்கு சிறந்த உதாரணம் மிட்செல் ஜான்சனை ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் மைக்கேல் கிளார்க் எப்படிக் கட்டிக் காத்தார் என்பதே. 5 ஓவர் ஸ்பெல்களாக இடைவெளி விட்டு விட்டு கொடுப்பார், இதனால் அவரும் மணிக்கு 145-150 கிமீ வேகம் குறையாமல் ஒவ்வொரு ஸ்பெல்லிலும் ஒவ்வொரு பந்தையுமே வீச முடிந்து ஒரு ஆஷஸ் தொடரில் 35 விக்கெட்டுகள் பக்கம் கைப்பற்றி இங்கிலாந்து அணிக்குள் பெரிய களேபரத்தையே உருவாக்கி விட்டார். கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட பெரிய ஜாம்பவான்களெல்லாம் மண்ணைக் கவ்வி ரிட்டையர் ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டது. ரிக்கி பாண்டிங்கும் பிரெட் லீயை நன்றாக பயன்படுத்தினார்.

இந்தியாவில் என்ன ஆகும் என்றால், ராகுல் திராவிட் போன்ற பயிற்சியாளர்கள் உம்ரன் மாலிக்கை ஒன்று டீமிலேயே எடுக்க மாட்டார்கள், வெறும் நெட் பவுலராகக் குறுக்கி விடுவார்கள். அல்லது உதவிப் பயிற்சியாளர்கள் கொண்ட குழு என்ன செய்யும்... ‘வெறும் வேகம் போதாது, வேகத்தைக் குறை ஸ்விங் செய், லைன் அண்ட் லெந்த் போடு’ என்று அவரைக் காலி செய்து விடுவார்கள்.

இதற்கும் உதாரணம் உள்ளது. முனாப் படேல் உள்நாட்டு கிரிக்கெட்டில் அப்போதெல்லாம் மணிக்கு 150 கிமீ வேகத்தை சீரான முறையில் வீசி வந்தார். ஒருமுறை நியூசிலாந்து அணி, இந்தியா வந்திருந்த போது போர்ட் பிரசிடெண்ட் லெவனுடன் நடந்த ஆட்டத்தில் இப்போதைய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிற்கு கழுத்துயர 150 கிமீ வேகப்பந்தை வீச அவரால் பின்னால் செல்ல முடியாமல் நிலைகுலைந்து ஆடப்போய் பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பில் விழுந்து பவுல்டு ஆனார். இதே முனாப் படேல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தவுடன் மெக்ரா போல் வீச வேண்டும் என்று அவரைத் திசைத்திருப்பி அவரது வேகத்தையும் போக்கி அணியிலிருந்தே போக்கி விட்டதை நாம் பார்த்தோம். முனாப் படேலின் அரிய திறமையே அந்த ஸ்பீடில் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதுதான். ஒருமுறை ஜாக் காலீஸுக்கு இந்த ஸ்பீடில் ஒரு ஓவர் முழுக்க ரிவர்ஸ் ஸ்விங் வீசி காலீசை படுத்தி எடுத்ததும் நினைவுக்கு வருகிறது. ஆனால் முனாப் படேல் சர்வதேச கிரிக்கெட்டில் என்ன ஆனார்?

எனவே, அதிவேகப் பந்துவீச்சாளர்களை பரமாரிப்பது ஒரு கேப்டன்சி கலை. இப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து உருவாகியுள்ள் புதிய அதிவேகப் புயல் லான்ஸ் மோரிஸ் குறித்து நியூ சவுத் வேல்ஸ் கேப்டன் கர்ட்டிஸ் பேட்டர்சன் கூறுவது என்னவெனில், “ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட்டில் நான் எதிர்கொண்டதிலேயே மிக மிக வேகத்துடன் வீசிய ஒரு பவுலர் உண்டென்றால் அது லான்ஸ் மோரிஸ்தான்” என்கிறார். மேலும் பலரும் லான்ஸ் மோரிஸ் வீசுவது பெரிய உற்சாகத்தைக் கொடுக்கிறது என்றும், விரைவில் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்து எதிரணியிடத்தில் கலவரத்தை உருவாக்குவார் என்றே அவரைப் பற்றி அங்கு கிரிக்கெட் உலகில் பேச்சுகள் நிலவுகின்றன.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளப் பேட்டியில் லான்ஸ் மோரிஸ் கூறியபோது, “நான் ஒரு அட்டாக்கிங், அச்சுறுத்தும் பவுலர். இப்போது 24 வயதாகிறது, 26 வயதில்தான் நல்ல முதிர்ந்த ஃபாஸ்ட் பவுலராக முடியும் என்று கூறுகிறார்கள். அதற்குள் என் வேகம் இன்னும் போகப்போக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் லான்ஸ் மோரிஸ்.

2020-ல் இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் நுழைந்தார். பிபிஎல் டி20 லீகில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு ஆடியுள்ளார்.

அதிவேகப் பந்துவீச்சாளர்கள் ஓர் அரிய வகை. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படிப்பட்ட பவுலர்கள் வருவதே அரிது. இந்நிலையில், ஒரு கட்டத்தில் லான்ஸ் மோரிஸும் நம் உம்ரன் மாலிக்கும் சர்வதேச கிரிக்கெட் அரங்கை கதிகலக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். பிரெட் லீ, ஷோயப் அக்தர் போல், வருங்காலத்தில் உம்ரன் மாலிக், லான்ஸ் மோரிஸ் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்கு உம்ரன் மாலிக்கின் வேகத்தை இவர்கள் குறைக்காமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்