சிட்னியில் பாகிஸ்தானுக்குச் சாதகமாக ஒரு ‘துபாய்’ ரக பிட்ச் அமைய, நியூஸிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். பெரிய நகைமுரண் என்னவெனில் சுமாராக ஃபீல்டிங் செய்யும் பாகிஸ்தான் இன்று அபாரமாக காலத்தில் ஃபீல்டிங் செய்தது. அபாரமாக ஃபீல்டிங் செய்யும் நியூஸிலாந்து அதில் கோட்டைவிட்டது.
சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த பாகிஸ்தான், மழையின் ஆசியாலும், தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்திடம் தோல்வியை தழுவிய கைங்கர்யத்தினாலும் 1992-ன் 50 ஓவர் உலகக்கோப்பை போல் அதிக தோல்விகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மீண்டுமொரு 2007 ஃபைனல் தருணத்தை உருவாக்கியுள்ளது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பிட்சைக் கணிப்பதில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது. இது மிகவும் வறண்ட ஒரு பிட்ச் துபாய் பிட்ச் போல் இங்கு ஒன்றும் ஸ்விங் ஆகாது, ஸ்பின்னுக்கு பந்துகள் திரும்பாது, பந்துகள் நின்று வரும் ஸ்லோ பிட்ச் ரகம் என்பது அனுபவசாலியான கேன் வில்லியம்சனுக்கே தெரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
» தொடரும் நியூஸிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு!
» T20 WC | இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட வேண்டும்: பாக். வீரர் ஷதாப் கான்
பாகிஸ்தான் அபாரமாக ஃபீல்டிங் செய்தது. டெவான் கான்வே விக்கெட்டை ஷதாப் கான் டைரக்ட் ஹிட் முறையில் ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் திருப்புமுனையை தந்த தருணம் என சொல்லலாம். அபார பவுலிங், கேன் வில்லியம்சனின் மந்தமான பேட்டிங், மிட்செலின் அதிரடி பேட்டிங் ஆகியவற்றினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எட்டியது நியூஸிலாந்து. சுமார் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவு. அது பாகிஸ்தான் ஃபீல்டிங் தடுத்த ரன்கள் என்றும் சொல்ல முடியும்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் துபாய் ரக ‘சேசிங்’ சாதகப் பிட்சில் பாபர் அசாம் (53 ரன்கள்), ரிஸ்வான் (57 ரன்கள்) அபாரத் தொடக்கம் கொடுத்து 12.4 ஓவர்களில் 105 ரன்களை முதல் விக்கெட்டுக்காக விளாச, பிற்பாடு முகமது ஹாரிஸ் 30 ரன்களை விளாச பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி இறுதிக்கு தகுதி பெற்றது.
டெவான் கான்வே பாபர் அசாமுக்கு விட்ட கேட்ச்! - நியூஸிலாந்தின் பவுலிங் இந்த பிட்சில் சரியாக அமையவில்லை. அதுவும் பாபர் அசாம் பூஜ்யத்தில் இருந்த போது ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தை ட்ரைவ் ஆட முயன்று பாபர் அசாம் எட்ஜ் செய்ய, அது விக்கெட் கீப்பர் கான்வேவுக்கு வலது புறம் சென்றது. அது பிடிக்க வேண்டிய சுலபமான கேட்ச் தான். ஆனால் அவர் தவற விட பிழைத்தார் பாபர் அசாம், இந்தக் கேட்சை எடுத்திருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் டென்ஷனாகி விக்கெட்டுகளை கொடுத்திருக்கலாம். அதற்கான வாய்ப்பைத்தான் கான்வே தவற விட்ட வாய்ப்பு இழக்கச் செய்தது. அதோடு கடைசியில் 12 பந்துகளில் 19 ரன்கள் தேவை எனும்போது ஆட்டத்தில் சின்ன சுவாரஸ்யம் ஏற்பட்டது. ஆனால் அப்போதும் கேட்ச் விடப்பட்டது. ஸ்லோயர் ஒன் போட்டு ஏமாற்ற தெரியாத பெர்கூசன், ஷார்ட் பிட்ச் பந்தை வேகமாக வீச ஹாரிஸ் அதை ஸ்கொயர் லெக் மேல் பெரிய சிக்சருக்கு தூக்க, டென்ஷன் மறைந்து பாகிஸ்தான் வெற்றியை எளிதில் எட்டியது என்றே கூற வேண்டும்.
ஷதாப் கானின் அபாரமான டைரக்ட் ஹிட்- கான்வே ரன் அவுட்! - ஷாஹின் அப்ரீடி முதல் ஓவரின் முதல் பந்தை வீச ஃபின் ஆலன் அதை மிட் ஆனில் ஒரே பஞ்ச் செய்து பவுண்டரிக்கு விரட்ட அட்டகாசமாக தொடங்கியது இந்த அரையிறுதி. ஆனால் இரண்டாவது பந்தே ஷாஹின் அப்ரீடி, தன் ட்ரேட் மார்க் இன்ஸ்விங்கரை வீச பெரிய அப்பீல் எழுந்தது. இருந்தும் ரீப்ளேயில் பந்து மட்டையில் பட்டது தெரிய தப்பினார். ஆனால் அதிர்ஷ்டம் தொடரவில்லை, காரணம் மூன்றாவது பந்தே மீண்டும் ஒரு அருமையான பந்தில் லெக் அண்ட் மிடிலுக்கு நேராகக் எல்பி வாங்கினார் ஆலன் இந்த முறை அவுட், ரிவ்யூவும் வேஸ்ட்.
அதன் பிறகு நசீம் ஷாவை கான்வே இரண்டு பவுண்டரிகள் விளாசி தெம்பு கொடுத்தார். பிறகு வில்லியம்சன் தன்னைத்தானே கட்டிப்போட்டுக் கொண்டார், பாகிஸ்தான் இரண்டு மூன்று பவுண்டரிகளை தடுத்து அதை 2,3 என மாற்றியிருந்தனர். கான்வே ஹாரிஸ் ராவுஃப் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வறட்சியை போக்கினார். அவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போதுதான் பவர் ப்ளேயின் கடைசி பந்தில் இல்லாத ஒரு சிங்கிளுக்காக ஓட மிட் ஆஃபிலிருந்து ஷதாப் கான், கான்வேயை விட வேகமாகச் செயல்பட்டு பந்தை எடுத்து நேராக ஸ்டம்பில் அடிக்க கான்வே 21 ரன்களில் வெளியேறினார்.
நியூஸிலாந்தின் அபாய வீரர் கிளென் பிலிப்ஸ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் 6 ரன்களில் நவாஸ் சுழலுக்கு வெளியேறினார். அதாவது நவாஸ் மிக மெதுவாக பந்தை காற்றில் தூக்கி வீசினார். வாரிக்கொண்டு அடிக்கப் போய் லீடிங் எட்ஜ் ஆகி பவுலரிடமே கேட்ச் கொடுக்க நியூஸிலாந்து எட்டு ஓவர்கள் முடிவில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பவுண்டரிகள் அடிக்க நியூஸிலாந்து திணறல்! - அதன் பிறகு கேன் வில்லியம்சன் என்ன செய்ய முடியும் அவர் நின்று ரன்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து கடைசியில்தான் அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து ஆடினார். அவரும் மிட்செலும் சேர்ந்து 8 ஓவர்களில் 68 ரன்களையே சேர்க்க முடிந்தது. இந்தப் பிட்சில் ஷாஹின் அஃப்ரீடி, ராவுஃப், வாசிம் போன்றவர்களை அடித்து ஆடியிருக்க வேண்டும் அதைச் செய்ய அவர்கள் தவறினர்.
மிட்செல்தான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷதாப் கானை விளாசினார். ஷதாப் கான் 3 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 4 ஒவர்களில் 33 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. நவாஸ் 2 ஓவர் 12 ரன்கள்தான் ஏனோ அவருக்கு 4 ஓவர்களைக் கொடுக்கவில்லை.
வில்லியம்சன் கொஞ்சம் ரன்னை ஏற்றும் விதமாக ஆட நினைத்த போது ஷாஹின் அஃப்ரீடி பந்தில் பவுல்டு ஆனார். அதாவது ஒதுங்கிக் கொண்டு கீப்பர் தலைக்கு மேல் ஒரு ஸ்கூப் ஆடலாம் என்று நினைக்கையில் ஷாஹின் அந்த பந்தை ஸ்லோ கட்டராக வீச வில்லியம்சன் முற்றிலும் பீட்டன் ஆகி பவுல்டு ஆனார். பந்தை ஸ்கொயர்லெக்கில் அடித்திருக்க வேண்டும் என்பது போல் செய்கை செய்து காட்டிவிட்டு பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.
மிட்செல் கடைசி வரை நின்றாலும், 35 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என்று 53 ரன்கள் எடுத்தார். டெத் ஓவர்களை நசீம் ஷா, ஷாஹின் அஃப்ரீடி வீசியதால் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீஷம், தொடர்ந்து பந்தை டைம் செய்ய முடியாமல் தவித்தார். அவர் 12 பந்துகள் ஆடி ஒரே ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து 152 ரன்களை எடுத்தது. நியூஸிலாந்து பேட்டர்களால் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. 24 இரண்டு ரன்களை எடுத்தனர். இது ஒரு டி20 உலகக்கோப்பை சாதனை. முதல் 10 ஓவர்களில் 59. கடைசி 6 ஓவர்களில் 53 ரன்களை மட்டுமே எடுத்ததுதான் நியூஸிலாந்தின் தோல்விக்குக் காரணம்.
இலக்கை விரட்டும் போது பிட்சில் ஒன்றுமே இல்லை. துபாயில் எப்படி கடந்த உலகக்கோப்பையில் சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றதோ அப்படி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இது ஒரு துபாய் பிட்ச், ஆனால் பாபர் அசாம், கேட்சை விட்டது யார் பெரிய தவறு? அதன் பிறகு அவர் கண்ணுக்கு விருந்து கொடுக்கும் வகையில் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ஸ்கொயர் கட், ஆன் ட்ரைவ் என ஆடி அசத்தினார். 42 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து மிட் ஆனில் தூக்கி அடிக்கப்போய் டீப்பில் கேட்ச் ஆனார். ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார், இருவரும் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதிலும் விரைவு காட்டினர். இதனால் 10 ஓவர்களிலேயே 85 ரன்களை பாகிஸ்தான் எட்டி சேசிங்கை வெற்றிகரமாக முடிக்க அடித்தளம் அமைத்தது. முகமது ஹாரிஸ் சேசிங்கை விரைவு படுத்தினார்.
சாண்ட்னர் பந்து எல்லாம் முடிந்த நேரத்தில் திரும்பியது. சவுதியும், பெர்கூசனும் பந்தின் தையலை பேட்டர்களுக்குக் காட்டியபடியே நேரே நேரே வந்து மோதினார்களே தவிர, அவர்கள் வீசிய பந்தில் எந்த ஒரு தாக்கமும் இல்லை. ஸ்விங் இல்லாததால் ட்ரெண்ட் போல்ட்டும் 5 பவுண்டரிகள் விளாசப்பட்டார். இதில் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் போனது.
ரிஸ்வான், பாபர் அசாம் இருவரையும் போல்ட்தான் வீழ்த்தினார். ஆனால் அது ரொம்ப லேட். இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் அச்சுறுத்தல் இல்லை. பாகிஸ்தான் துபாய் ரகப் பிட்சில் எளிதில் வென்றது என்றே கூற வேண்டும். நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளிடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், இந்த மேட்ச் போல் சொதப்பலாக, ஒருதலைபட்சமாக இருக்காது என்று நம்புவோம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago