இப்படி ஒரு போட்டோவை பார்ப்போம் என நினைத்தீர்களா? - சூர்யகுமாரின் ஷாட் குறித்து ஹர்ஷா போக்ளே

By செய்திப்பிரிவு

மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பையின் கடைசி சூப்பர் 12 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்த வெற்றியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவின் பங்கு அதிகம். இந்த சூழலில் இதே ஆட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான கிரிக்கெட் ஷாட் ஆடி அவர் அசத்தி இருந்தார். அந்த படத்தை பகிர்ந்து புதிர் போட்டுள்ளார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து பக்கமும் ரன் குவிக்கும் திறன் கொண்டவர். கிரிக்கெட் புத்தகத்தில் இல்லாத ஷாட்களை ஆடுவதில் கைதேர்ந்தவர். அவர் விளையாடும் பல ஷாட்களை அவரால் மட்டுமே விளையாட முடியும் என சொல்லும் வகையில் இருக்கும். மற்ற வீரர்களால் அது முடியவே முடியாது. ஏனெனில் உடலை வளைத்து, நெளித்து பேட்டை சுழற்றுவார் அவர். அதனால்தான் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக அவர் உள்ளார். அதே பாணியில்தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் விளையாடி இருந்தார்.

மொத்தம் 25 பந்துகளில் 61 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணியின் மொத்த ரன்களில் மூன்று ஒரு பங்கு அவருடைய பேட்டில் இருந்து வந்தவை. 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

“இப்படி ஒரு போட்டோவை பார்ப்போம் என நினைத்தீர்களா? முன்பெல்லாம் பந்து எங்கே சென்றது என கண்டுபிடிக்க சொல்லும் ‘ஸ்பாட் தி பால்’ போட்டி உங்களுக்கு நினைவு இருக்கிறதா. இங்கே என்ன நடக்கிறது, பந்து எங்கே சென்றது என இந்த போட்டோவை வைத்து பூமியில் யாரால் சொல்ல முடியும். ஆனால் இதற்கு அதீத திறன் வேண்டும். இந்த ஆட்டம் நம்மை உற்சாகமூட்டி வருகிறது” என போக்ளே தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் சூர்யகுமார் ஆடிய வித்தியாச ஷாட்டின் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE