அடிலெய்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி, நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறியது, இதனையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேற, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று நாக் அவுட் போட்டியாகியுள்ளது.
தென் ஆப்பிர்க்கா அணி டாஸ் வென்று முற்றிலும் பேட்டிங் சாதகப் பிட்சில் நெதர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது புரியாத புதிர் என்பதோடு அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா ஆடியவிதம் பலவித சந்தேகங்களை எழுப்புவதாக இருந்தது. முதலில் பேட் செய்யப் பணிக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி விட்டேற்றியாக பேட்டிங் ஆடி 145/8 என்று அதிர்ச்சித் தோல்வி அடைந்து 5 புள்ளிகளுடன் வெளியேற்றம் கண்டது. இதன் மூலம் டாப் 4 இடங்களில் முடிந்த நெதர்லாந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு இயல்பாகவே தகுதி பெற்று விட்டது.
தென் ஆப்பிரிக்காவை ஆரம்பச் சுற்று மழை காலி செய்தது என்றால், அதன் பிறகு வெற்றிகளினால் டார்க் ஹார்ஸ் என்றும் கோப்பையை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எழுதினோம். ஆனால் இன்று நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது என்பது அந்த அணி ஆடிய விதம் குறித்த பலத்த சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. நெதர்லாந்து ஆடிய விதத்தை குறை சொல்வதற்கில்லை, அபாரமாக ஆடினர். தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தனர். தென் ஆப்பிரிக்கா இதில் வென்றிருந்தால் பாகிஸ்தான், வங்கதேசப் போட்டி டெட் ரப்பர் ஆகியிருக்கும். எனவே நெதர்லாந்து வெற்றி, பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் குஷியாகியிருக்கும்.
வான் டெர் மெர்வ் டேவிட் மில்லருக்கு எடுத்த திருப்பு முனை கேட்ச்: நெதர்லாந்தின் சீனியர் வீரர் வான் டெர் மெர்வ் 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பைகளில் ஆடியவர். இவர் தென் ஆப்பிரிக்காவின் கடைசி வெற்றி நம்பிக்கையான டேவிட் மில்லருக்கு பின்னாலேயே ஓடிப்போய் அவரை விட்டு விலகிச் சென்ற பந்தை சறுக்கியபடியே சென்று பிடித்த கேட்ச் திருப்பு முனை கேட்ச் ஆனது. அப்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு 27 பந்துகளில் 49 ரன்கள் தேவை என்ற தருணத்தில் வான் டெர் மெர்வ் கிட்டத்தட்ட 20 அடி பின்னால் திரும்பி ஓடி இந்தக் கேட்சை எடுத்தார்.
» T20 WC | வெளியேறியது ஆஸி. - இலங்கையை போராடி வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
» பிறந்தநாள் ஸ்பெஷல்... - கோலியின் ஆட்டத் திறனை வெகுவாக பாராட்டிய கம்பீர்!
முன்னதாக நெதர்லாந்து அற்புதமாக பேட் செய்தது. தொடக்க வீரர்கள் ஸ்டெபான் மைபர்க் (30 பந்தில் 37, 7 பவுண்டரி) மற்றும் மேக்ஸ் தவுத் (29) 8 ஓவர்களில் 58 ரன்களைச் சேர்க்க மைபர்க் முதலில் மார்க்ரம் பந்தில் வெளியேறினார். டாம் கூப்பர் என்ற வீரர் இறங்கி வெளுத்து வாங்கி விட்டார். அவர் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களுடன் 2 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். ரபாடா, லுங்கி இங்கிடி செம சாத்து வாங்கினர், அதுவும் ரபாடா வரவர மாமியார் கழுதை போல் ஆன கதையாக ஒரே ஓவரில் 12 ரன்களைக் கொடுத்தார், லுங்கி இங்கிடியும் சரியாக வீசவில்லை, ஆன்ரிச் நோர்க்கியாதான் அட்டகாச பவுலிங், அவரது மணிக்கு 150 கிமீ வேகம் நெதர்லாந்து வீரர்களுக்கு ஏதோ பூச்சி பறக்க விட்டது போல் இருந்தது. இந்தியாவுக்கு எதிராக காட்டிய வீரம் எங்கே போனது? மேக்ஸ் தவுத் 29 ரன்களில் அப்போது வெளியேறினார். நெதர்லாந்து 97/2 என்று 12.4 ஓவர்களில் இருந்தது. தவுத்தையும் டாம் கூப்பரையும் மகராஜ் வீழ்த்தினார்.
17.1 ஓவர்களில் நெதர்லாந்து 123/4 என்று இருந்தது. மீதமுள்ள 17 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க காரணம் இங்கிடி, ரபாடா, பார்னெலின் மோசமான பவுலிங்தான். கொலின் ஆக்கர்மேன் 26 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ கேப்டன் எட்வர்ட்ஸ் 7 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிர்க்கா 158/4 என்று நல்ல ஸ்கோரை எட்டியது. ஆன்ரிச் நோர்க்கியாதான் ஆகச்சிறப்பாக வீசி 4 ஓவர் 10 ரன்கள் ஒரு விக்கெட், இந்த உலகக் கோப்பையின் ஆகச் சிக்கனமான பந்து வீச்சு இதுதான், இவர், மகராஜ், மார்க்ரம் ஆகியோர் 10 ஓவர்களில் 53 ரன்களையே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மும்மூர்த்தி வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா, பார்னெல், இங்கிடி ஆகியோர் 10 ஓவர்களில் 104 ரன்களை கொடுத்து சொதப்பினர். இதுதான் தோல்விக்குக் காரணம்.
தென் ஆப்பிரிக்காவின் படுமோசமான பேட்டிங்... விடா முயற்சியுடன் வீசிய நெதர்லாந்துக்கு வெற்றி பரிசு! - 159 ரன்கள் இலக்கு அனாயாசமாக வென்று விடக்கூடிய இலக்குதான். ஆனால், குவிண்டன் டி காக் தன் கடமைக்கு 1 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து 13 ரன்களில் இடது கை பவுலர் கிளாசன் பந்தை மேலேறி வந்து அலட்சியமாக ஆடி எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். தெம்பா பவுமா ஒருமுனையில் நின்று ஆடுவதை விடுத்து 20 ரன்களில் அக்ராஸ் போய் நெதர்லாந்தின் அதிவேக பவுலர் மீக்கரன் பந்தை அடிக்கப் போய் ஸ்டம்புகளை இழந்து வெளியேறினார்.
ரைலி ருசோவ் 19 பந்துகளில் 25 ரன்கள் என்று தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப நிலை நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் அடுத்ததாக குளோவர் வீசிய லெக் கட்டர் பந்து கொஞ்சம் எழும்ப டீப் ஸ்கொயர் லெக்கில் தூக்கினார் அங்கு தவுத் கேட்சை எடுத்தார். அய்டன் மார்க்ரம் 17 ரன்களில் கிளாசன் பந்தை கவரில் அடிக்க அங்கு மைபர்க் அட்டகாசமான ஒரு கேட்சை எடுக்க வெளியேறினார்.
அடுத்ததுதான் திருப்பு முனை கேட்ச். டேவிட் மில்லர் 16வது ஓவர் ஆரம்பித்து விட்டது இன்னும் 46 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற வேகத்தில் குளோவர் பந்தை சுழற்ற டாப் எட்ஜ் எடுத்து மேலே எழும்ப அதை 20 அடி பின்னால் சென்று மூத்த வீரர் வான் டெர் மெர்வ் சறுக்கிச் சென்று அற்புதமாகப் பிடித்தார் தொடரின் சிறந்த கேட்ச் என்று இது அழைக்கப்பட்டு வருகிறது.
ஹென்றிக் கிளாசன் 21 ரன்களில் ஆட்டமிழந்த போது தென் ஆப்பிரிக்கா 120/7 என்று 17.3 ஓவர்களில் இருந்தது அதன் பிறகு 25 ரன்களையே எடுக்க முடிந்தது. மகராஜ் 13 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்கா 145/8 என்று அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது. ஸ்டீவ் வாஹ் கூறியது போல் இன்னும் ‘சோக்கர்ஸ்’ என்ற அடைமொழியைத் தக்கவைத்தது தென் ஆப்பிரிக்கா.
நெதர்லாந்து தரப்பில் குளோவர் 2 ஓவர் 9 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தி விட்டார். பாஸ் டி லிடா 2 விக்கெட். இடது கை ஸ்விங் பவுலர் கிளாசன் 2 விக்கெட். ஆட்ட நாயகன் நெதர்லாந்தின் கொலின் ஆக்கர்மேன்.
ஆக, நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்கா அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்து உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறியது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று நாக் அவுட் போட்டியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago